Friday, January 4, 2019

திருப்புகழ்த் தலங்கள் (ஒரு யாத்திரைக் குறிப்பேடு):

15ஆம் நூற்றாண்டில் அவதரித்த அருணகிரிப் பெருமான் பாடியருளிய 16,000 திருப்புகழ்த் திருப்பாடல்களுள் நமக்கின்று கிடைத்திருப்பவை சுமார் 1331 திருப்பாடல்களே. இப்பனுவல்களைத் தம்முடைய பகீரத பிரயத்தனத்தினால் முதன்முதலில் சேகரித்துப் பதிப்பித்த புண்ணிய சீலர் திரு.வீ.டீ.சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் (காலம்:1846 - 1909). பின் அவற்றிற்கான முதல் உரையினை எழுதி, அத்தலங்களின் அமைவிடக் குறிப்புகளை முதல் முயற்சியாக ஆய்ந்தறிந்து வெளியிட்டவர் அவரது திருப்புதல்வரான 'தணிகைமணி திரு.செங்கல்வராயப் பிள்ளை அவர்கள்'.

          (தணிகைமணி திரு.வி.எஸ். செங்கல்வராயப் பிள்ளை அவர்கள்)
மேற்குறித்துள்ள ஆய்வுகளை முதற்குறிப்பாகக் கொண்டு, திருப்புகழ் தலங்களுக்கான ஆய்வினைத் தொடர்ந்து மேற்கொண்டு தம்முடைய அரிய பெரிய பிரயத்தனத்தினால், கண்டறியப் படாதிருந்த எண்ணிறந்த திருப்புகழ் தலங்களை ஆய்ந்தறிந்து வெளிக்கொணர்ந்த பெருமை திரு.வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்களையும் அவர்தம் தமையனார் திரு.ராமசேஷன் அவர்களையுமே சாரும். இப்பெருமக்கள் எழுதி வெளியிட்டுள்ள 'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' எனும் நூலே 'திருப்புகழ் தலங்களுக்கான பிரமாண நூலாக' விளங்குகின்றது, இந்நூலுக்கு திருமுருக.வாரியார் சுவாமிகளும், திரு. கி.வா. ஜகந்நாதன் அவர்களும் அணிந்துரை எழுதி ஆசி கூறியுள்ளனர்.

திரு.வலையப்பேட்டை ரா கிருஷ்ணன் அவர்கள் 
தற்பொழுதுள்ள இணைய தளங்களில் எண்ணிறந்த குறைபாடுகள் காணப் பெறுகின்றன. திருப்புகழ் தலங்கள் அல்லாதவற்றைத் திருப்புகழ் தலங்களாகக் குறிப்பது, மாவட்டங்களைத் தவறாகக் குறிப்பது, தலப் பெயர்களை மட்டுமே குறித்து அத்தலத்திலுள்ள திருப்புகழ் திருக்கோயில் எதுவென்று தெரிவிக்காமல் விடுப்பது, செவிவழிச் செய்திகளை வைத்துத் தாமாகவே ஒரு தலத்தினைத் திருப்புகழ் தலமாக முன்மொழிவது, அமைவிடத்தைத் தெளிவு பட விளக்காமல் பிற தகவல்களுக்காக ஏராளமான வரிகளை விரயம் செய்வது, எளிதாக பயன்படுத்தும் வகையில் தொகுக்காதது என்று இப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

பல வருடங்களாக அடியேனுக்கு, திருப்புகழ் தலங்களைத் தேவாரத் தலங்களைப் போன்றே 'தொண்டை நாடு; சோழ நாடு - காவிரி தென்கரை மற்றும் வடகரை; நடு நாடு; பாண்டிய நாடு; கொங்கு நாடு; ஈழ நாடு; துளுவ நாடு; மலை நாடு; ஈழ நாடு' எனும் பிரிவுகளாக்கிப் பின் அவைகளை மாவட்ட வாரியாகவும் தொகுத்து, யாத்திரை மேற்கொள்வோர் எளிமையாகப் பயன்படுத்தும் வகையிலும், திருக்கோயில்களைத் துல்லியமான முறையில் சென்றடைவதற்கும், குறிப்பேடு போன்றதொரு வலைத்தளம் அமைக்க வேண்டும்' என்ற பெருவிருப்பம் இருந்து வந்தது.

பலமாத ஆய்வு மற்றும் தொகுத்தெழுதும் பணிக்குப் பின்னர் தற்பொழுது இம்முயற்சி முழு வடிவத்தினைப் பெற்றிருப்பதாக உணர்கின்றேன். 'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' எனும் பிரமாண நூலை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கியுள்ள இவ்வலைத் தளத்தில் நேரடியாக பாடல் பெற்ற திருப்புகழ் தலங்கள் மட்டுமே தொகுக்கப் பட்டுள்ளது (வைப்புத் தலங்கள் இவற்றுள் சேராது). 

ஒவ்வொரு தலத்திற்கான பக்கத்திலும் அத்தலத்திற்கான 'கூகுள் மேப்ஸின் நேரடி வழிகாட்டி' மற்றும் பாராயணம் புரிவதற்கு எளிதான வகையில்; சந்த ஓசை மாறாத வண்ணம் அத்தலத்தின் திருப்புகழ் திருப்பாடல்களையும் பிரித்துத் தொகுத்துள்ளேன். 

இத்தளத்தில் 206 திருப்புகழ் தலங்கள் இடம்பெறுகின்றன, அவற்றுள் 105 தலங்கள் 'தேவாரப் பாடல் பெற்றுள்ளவையாகவும் விளங்குகின்றன (சிவ சிவ).

15 comments:

  1. சிறப்பான பணி. வாழ்த்துகளும் நன்றியும்.🙏

    ReplyDelete
  2. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி. சிவ சிவ!!!

      Delete
  3. Great service. .A nice classification of devara sthalam aMd thiruppugazh sthalam . Thanks

    ReplyDelete
    Replies
    1. Glad to know you are finding the site resourceful. One minor clarification, this site is only dedicated to Thirupugazh Temples. While categorizing them, I have additionally marked the temples which has Devaram Hymns too in addition to Thirupugazh. Hoping it's clear.

      Delete
  4. முருக பெருமானின் அருளோடு தங்கள் பணி இனிதே ஈடேற என் பிரார்த்தனைகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி. சிவ சிவ!!!

      Delete
  5. ஐயா வணக்கம்,

    சிறு சந்தேக நிவர்த்தி வேண்டும் ,

    அருணகிரிப் பெருமான் அருளிய திருப்புகழில் காஞ்சி பதியில் மொத்தம் 44 பாடல்கள்,அவை எந்த எந்த தலத்தில் பாடியது விவரம் அறிய முடியுமா/கிடைக்குமா .

    ReplyDelete
    Replies
    1. பிரசாத் இராஜந்திரன்
      மொத்தம் 44 திருப்பாடல்களைக் காஞ்சிபுரம் தலத்திற்கென அருணகிரிப் பெருமான் அருளியுள்ளார், அவற்றுள் 5 முக்கியத் திருக்கோயில்களைத் திருப்புகழ் ஆலயங்களாகத் திரு.வலையப் பேட்டை கிருஷ்ணன் அவர்கள் தம்முடைய 'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' எனும் நூலில் பட்டியலிடுகின்றார்.

      1. குமரக்கோட்டம்: 'அறிவிலாப் பித்தர்', 'புனமடந்தைக்கு' என்று தொடங்கும் இரு திருப்பாடல்கள் இத்தலத்திற்கு உரியது.
      2. காமாட்சியம்மை திருக்கோயில்: 'கவுரி திருகொட்டமர்ந்த இந்திரர் தம்பிரானே' என்று இரு திருப்புகழ் திருப்பாடல்களில் இத்தலத்து முருகக் கடவுளைப் போற்றுகின்றார் (தலை வலையத்து, சலமலம் விட்ட என்று தொடங்கும் இரு திருப்பாடல்கள்).
      3. ஏகாம்பரேசுவரர் திருக்கோயில்: பிரதான திருப்புகழ் திருப்பாடல்கள் பெற்றுள்ள இத்திருக்கோயிலில் மூன்று திருவுருவங்களில் முருகக் கடவுள் எழுந்தருளி இருக்கின்றான், மாவடிக் கந்தன் திருச்சன்னிதி, சன்னிதிப் பிரகாரத்தில் ஒரு ஆறுமுகன் திருச்சன்னிதி, மற்றொரு ஆறுமுகப் பெருமான் திருச்சன்னிதி.
      4. கச்சபேசுவரர் திருக்கோயில்: பன்னிரு திருக்கரங்களுடன், இரு புறமும் தேவிமார்கள் அருள் புரிந்திருக்க, மயில் ,மீதமர்ந்த திருக்கோலம்.
      5. திருக்கச்சி மேற்றளி: ஒரு திருமுகம், நான்கு திருக்கரங்களுடன் மயில் மீதமர்ந்த திருக்கோலம்

      Delete
    2. சிறந்த பணி
      ஓம் முருகா

      Delete
  6. மிக்க நன்றி ஐயா.....

    ReplyDelete
  7. வணக்கம்.

    தங்கள் முயற்சிகள் பாராட்டுக்குரியது. இந்த நற்பணி தொடர, முருகக்கடவுள் உங்களுக்கு அருள் புரியட்டும்.

    ReplyDelete
  8. மிகச் சிறந்த பணி..முருகனருள் உரித்தாகுக.விக்கிமேப்பியாவில் சுமார் தேவார(NCN001..., SCN001,,,),108 திருப்பதி (DD001..),சக்தி பீடங்கள், திருப்புகழ் தலங்கள்(TPuT) இன்னும் பல தலங்களை வரிசைக்கிரமமாக குறித்து வருகிறேன்.உங்கள் உதவியால் பல திருப்புகழ் திருத்தலங்களை அடையாளப்படுத்த முடிந்தது.மிக்க நன்றி.இப்போது திருப்புகழ் திருத்தலங்களை விக்கிமேப்பியாவில் TPuT எனத் தேடினால் கிடைத்து விடும்.ஆனால் திருப்புகழ் தலங்கள் வரிசை எண்கள் இல்லாமல் TPuT என்று மட்டுமே குறிக்கப்பட்டு உள்ளன.தேவார, வைணவ திருப்பதிகளை போல பொதுவான வரிசை எண்களை உருவாக்கினால் தலங்களை எண்களுடன் குறிக்க முடியும். நன்றி,, ராஜேஷ் கண்ணன். சென்னை

    ReplyDelete
  9. அருமை. முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. மிகவும் அருமை.... எல்லாம் வல்ல வள்ளி தெய்வசேனா சமேத ஶ்ரீ செல்வ முத்துக்குமாரசாமி அருளால் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐

    ReplyDelete