(தேவாரத் தலம்) எனும் அடைப்புக் குறியுடன் காணப்படும் தலங்கள் 'திருப்புகழ் பாடல் பெற்றுள்ளதோடு மட்டுமல்லாது தேவாரத் தலங்களாகவும்' திகழ்வதைக் குறிக்கின்றது.
கிழக்கு மாகாணம் (திரிகோணமலை மாவட்டம்):
திருக்கோணமலை (கோணேஸ்வரம்) (தேவாரத் தலம்)
வடக்கு மாகாணம் (ஜாப்னா (Jaffna) மாநிலம்):
அருக்கொணாமலை (நகுலேஸ்வரம்)
யுவா மாகாணம்:
கதிர்காமம்
வணக்கம் ஐயா. தங்கள் பணி அருமை ஐயா.அடியேன் இலங்கையை சார்ந்தவன். திருப்புகழ் பாடல் பெற்ற ஈழநாட்டுத் திருத்தலங்களில் தாம் சில திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று எண்ணுகின்றேன்.
ReplyDeleteமுதல் திருத்தலம் திருக்கோணமலை மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப்பெருமானின் திருத்தலம். அமைவிடம் இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து 243 KM தொலைவில் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை (திரிகோணமலை அல்ல.) மாவட்டத்தில் அமைந்துள்ளது.
கடலோரம் அமைந்துள்ள சிறு குன்றின் மீது சுவாமியின் ஆலயம் அமையப்பெற்றுள்ளது. 1624 இல் போர்த்துக்கேயாரால் அழிக்கப்பட்ட இவ்வாலயம் தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது. அருணகிரியார் இத்தல கோபுர நிலைக்குள் எழுந்தருளியுள்ள முருகப்பெருமானையே பாடியுள்ளார். எனினும் அந்த மூர்த்தி தற்போது கிடையாது. புனரமைக்கப்பட்ட புதிய ஆலயத்தின் முருகன் சன்னிதியை நாம் திருப்புகழ் தலமாக கொள்ளலாம். அங்கு முருகப்பெருமான் தேவியர் இருவர் அருகிருக்க மயில் மீது அமர்ந்த கோலத்தில் ஒருதிருமுகத்துடன் நான்கு திருக்கரங்களுடன் எழுந்தருளியிருக்கின்றார்.
இரண்டாவது திருத்தலமான அருக்கோணமலை(நகுலேச்சரம்) இலங்கையின் வட மாகணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் (ஜாப்னா மாநிலம் என்ற ஒன்று இல்லை. Jaffna என்பது யாழ்ப்பாணத்தின் ஆங்கில பெயர்) அமைந்துள்ளது. யாழ்ப்பாண நகரிலிருந்து வடக்கே 20 KM தொலைவில் கீரிமலை எனும் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் நகுலேஸ்வரர். அம்பாள் நகுலாம்பாள். இங்கு எழுந்தருளியுள்ள முருகப்பெருமான் மீது அல்லது இக்கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ள மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் அருளியிருக்க வேண்டும். உக்கிர சோழனின் மகள் மாருதப்புரவீகவல்லியின் குதிரை முகம் நீங்க திருச்செந்தூர் செந்திலாண்டவ மூர்த்தியின் ஆணைப்படி இத்தலம் வந்து முருகனை வழிபட்டு குதிரை முகம் நீங்கப்பெற்றாள். இத்தல எம்பெருமான் தேவியர் இருவருடன் நின்ற திருக்கோலத்தில் ஒரு திரு முகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும்எழுந்தருளியிருக்கின்றான்.
மூன்றாம் திருத்தலம் சூரசம்ஹாரத்திற்காக எம்பெருமான் படைவீடு அமைத்து தங்கிய ஏமகூடம் இன்றைய கதிர்காமம் (Katharagama) ஆகும். வனமுறை வேடர் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே என்று அருணகிரியான் அருளியதற்கிணங்க இன்றும் இங்கு பாரம்பரிய முறையிலான பூஜையே நடைபெறுகின்றது. இத்திருத்தலம் ஊவா மாகணத்தில் (யுவா மாகாணம் அல்ல.) மொனராகலை மாவட்டத்தில் அடர் வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு மூன்று ஆலயங்கள் அமையப் பெற்றுள்ளன. முதலாவது செல்லக்கதிர்காமம் அருள்மிகு மாணிக்க விநாயகர் ஆலயம். இரண்டாவது பிரதான தலம் மாணிக்க கங்கை கரையில் அமைந்துள்ள கதிர்காமம் பெரிய கோவில் (Ruhuna Katharagama Maha Devalaya) ஆகும். இது ஓலைகளால் வேயப்பட்ட பாரம்பரியமான சிறிய ஆலயம் ஆகும். கருவறையில் சுவாமி யந்திர வடிவில் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம். எனினும் இத்தலத்தில் கருவறை மூர்த்தததை காண இயலாது. திரையிட்டு மறைக்கப்பட்டிருக்கும். சுவாமி திரை ரூபில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். திரையில் தோகைவிரித்தாடும் மயில் மீது முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடன் பன்னிரு திருக்கரங்களுடன் ஆயுதங்கள் ஏந்தி அமர்ந்திருப்பார். அருகில் தேவிமார் இருவரும் அமர்ந்திருப்பர். இத்தலத்தில் விநாயகர் , தெய்வானை நாச்சியார் , வள்ளி நாச்சியார் ஆகியோருக்கு தனிச்சன்னதி அமைந்துள்ளது. அங்கும் திரை ரூபமாகத்தான் அவர்களை காண இயலும். கதிர்காம பகுதியில் ஒரு மலை அமைந்துள்ளது. அம்மலையை அடியவர்கள் ஏழுமலை ,கதிரமலை என்றழைப்பர். இம்மலை உச்சியிலும் முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கின்றார். அங்கும் அதே திரைரூபம் தான். இம்மலையை அருணகிரிநாதர் "கதிரகாம வெற்பில் உறைவோனே" என்று பாடியுள்ளார். அடியேன் அறிந்தவற்றை கூறியுள்ளேன். நன்றி .