Tuesday, December 25, 2018

திருவலிதாயம்:

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: சென்னை

திருக்கோயில்: அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத் தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்:

சென்னை பாடியில் அமைந்துள்ளது ஞானசம்பந்தப் பெருமானால் பாடல் பெற்றுள்ள திருவலிதாயம். வில்லிவாக்கத்திலிருந்து 3 கி.மீ பயணத்தும் இத்தலத்தை அடையலாம்.

சாபம் ஒன்றினால் கருங்குருவியாக (வலியன் பறவையாக) மாறிய பரத்வாஜ முனிவர் வழிபட்டு விமோசனம் பெற்றுள்ள தலம், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, அனுமன், சூரியன், சந்திரன், இந்திரன் ஆகியோரும் இத்தல இறையவரை பூசித்துப் பேறு பெற்றுள்ளனர் என்று தலபுராணம் அறிவிக்கின்றது. பிறை சூடும் பரம்பொருள் இத்தலத்தில் ஸ்ரீவல்லீசுவரர் எனும் திருநாமம் தாங்கி எழுந்தருளி இருக்கின்றார், உமையன்னையின் திருநாமம் ஜகதாம்பிகை.

உட்பிரகாரத்தினை வலம் வருகையில், மூலக் கருவறையின் பின்புறம், தனிச்சன்னிதியில், ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களுடன், இருமருங்கிலும் தேவியர் எழுந்தருளி இருக்க, பின்புறம் மயிலுடன் கூடிய நின்ற திருக்கோலத்தில், 3 அடி உயரத் திருமேனியுடன் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி இருக்கின்றான், காண்பதற்கரிய திருக்கோலம். அருணகிரியார் இம்மூர்த்திக்கென ஒரு திருப்பாடலை அருளியுள்ளார்.

(Google Maps: Thiruvalidhayam,Padal Petra Temple, 207/152, Raja St, Padi, Chennai, Tamil Nadu 600050, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனதய்ய தானதன ...... தனதான

மருமல்லியார் குழலின் மடமாதர்
மருளுள்ளி நாயடியன் அலையாமல்
இருநல்லவாகும் உனதடிபேண
இனவல்ல மான மனதருளாயோ
கருநெல்லி மேனிஅரி மருகோனே
கன வள்ளியார் கணவ முருகேசா
திருவல்லிதாயமதில் உறைவோனே
திகழ்வல்ல மாதவர்கள் பெருமாளே

(2024  நவம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)





















2 comments:

  1. excellent work sir,, i am marking thirupugazh temples in wikimapia.your blog is very helpful and informative.thirupugazh temples are marked with abbreviation TPuT. Thanks and regards, Rajesh K

    ReplyDelete
  2. நன்றி, தேவார வைப்புத் தலங்கள் உடன் , திருப்புகழ், திருவருட்பா குறிப்புகளையும் சேகரிக்கிறேன். உங்கள் தகவல் உதவியாக இருந்தது நன்றி.

    ReplyDelete