Tuesday, December 25, 2018

திருமயிலை

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: சென்னை

திருக்கோயில்: அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத் தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்:

சென்னையின் பிரதானப் பகுதியில், மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் திருக்கோயிலை அறியாதாரும் இருப்பரோ? ஞானசம்பந்தர் பாடல் பெற்றுள்ள தலம், சம்பந்த மூர்த்தி எலும்பைப் பூம்பாவை எனும் பெண்ணாக உயிர்த்தெழச் செய்து சைவ சமயத்தின் ஏற்றத்தினைப் பறைசாற்றிய தலம். அப்பர் அடிகளின் திருப்பாடல்களில் குறிக்கப் பெற்று அப்பர் தேவார வைப்புத் தலமாகவும் திகழ்கின்றது. ஐயடிகள் காடவர்கோன் நாயனாரால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது, வாயிலார் நாயனாரின் முத்தித் தலம்.

மூலக்கருவறையில் இனிமையிலும் இனிமையாய், அருமையிலும் அருமையாய், தனிப்பெரும் தெய்வமான கபாலீஸ்வரப் பரம்பொருள் அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றார், காண்பதற்கரிய திருக்கோலம், உமையன்னை கற்பகாம்பிகையாய் எழுந்தருளிப் பேரருள் புரிந்து வருகின்றாள். ஞானசம்பந்தரைப் பணிந்து வணங்கும் பூம்பாவையின் திருச்சன்னிதி அற்புதமானது. 

திருப்புகழ் தெய்வமான நம் கந்தக் கடவுள் ஆறு திருமுகங்கள்; பன்னிரு திருக்கரங்களோடும், இரு தேவியரும் உடனிருக்க, மயில் மீதமர்ந்த அதி கம்பீரத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரிப் பெருமான் இம்மூர்த்திக்கு 10 திருப்பாடல்களை அருளி மகிழ்ந்துள்ளார், பன்முறை தரிசித்துப் போற்றிப் பயன்பெற வேண்டிய திருத்தலம். 

(Google Maps: Arulmigu Kapaleeswarar Temple, Kapaleesvarar Sannadhi Street, Vinayaka Nagar Colony, Mylapore, Vinayaka Nagar Colony, Mylapore, Chennai, Tamil Nadu 600004, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 10.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனன தனதனன தனன தனதனன
     தனன தனதனன ...... தனதான

அமரும் அமரரினில் அதிகன் அயனும்அரி
     அவரும் வெருவ வரும் ...... அதிகாளம்

அதனை அதகரண விதன பரிபுரணம் 
     அமை அனவர்கரண ...... அகிலேச

நிமிர அருள்சரண நிபிடம் அதெனஉன
     நிமிர சமிரமய ...... நியமாய

நிமிடம் அதனில்உணவல சிவசுதவர
     நினது பதவிதர ...... வருவாயே

சமர சமரசுர அசுர விதரபர
     சரத விரதஅயில் ...... விடுவோனே

தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு
     தரர ரரரரிரி ...... தகுர்தாத

எமர நடனவித மயிலின் முதுகில்வரும்
     இமைய மகள்குமர ...... எமதீச

இயலின் இயல்மயிலை நகரில் இனிதுறையும்
     எமது பரகுரவ ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தனனத் தனதன ...... தனதான

அயிலொத்தெழும் இரு ...... விழியாலே
அமுதொத்திடும் அரு ...... மொழியாலே
சயிலத்தெழு துணை ...... முலையாலே
தடையுற்றடியனும் ...... மடிவேனோ
கயிலைப் பதிஅரன் ...... முருகோனே
கடலக் கரைதிரை ...... அருகேசூழ்
மயிலைப் பதிதனில் ...... உறைவோனே
மகிமைக்கடியவர் ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தனன தானன தானன தந்தத் ...... தனதான

அறமிலாஅதி பாதக வஞ்சத் ...... தொழிலாலே
அடியனேன் மெலிவாகி மனம் சற்றிளையாதே
திறல் குலாவிய சேவடி வந்தித்தருள்கூடத்
தினமுமே மிக வாழ்வுறும் இன்பைத் ...... தருவாயே
விறல் நிசாசரர் சேனைகள் அஞ்சப் ...... பொரும்வேலா
விமல மாதபிராமி தரும்செய்ப் ...... புதல்வோனே
மறவர் வாணுதல் வேடைகொளும் பொற் ...... புயவீரா
மயிலை மாநகர் மேவிய கந்தப் ...... பெருமாளே.

திருப்பாடல் 4:
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

இகல வருதிரை பெருகிய சலநிதி
     நிலவும் உலகினில் இகமுறு பிறவியின்
          இனிமை பெறவரும் இடருறும் இருவினை ...... அதுதீர

இசையும்உனதிரு பதமலர் தனைமனம்
     இசைய நினைகிலி இதமுற உனதருள்
          இவரஉருகிலி அயர்கிலி தொழுகிலி ...... உமைபாகர்

மகிழு மகவென அறைகிலி நிறைகிலி
     மடமை குறைகிலி மதிஉணர்வறிகிலி
          வசன மறவுறு மவுனமொடுறைகிலி ...... மடமாதர்

மயமதடரிட இடருறும் அடியனும்
     இனிமை தரும் உனதடியவர் உடனுற
          மருவ அருள்தரு கிருபையின் மலிகுவதொருநாளே

சிகர தனகிரி குறமகள் இனிதுற
     சிலத நலமுறு சிலபல வசனமும்
          திறைய அறைபயில் அறுமுக நிறைதரு ...... அருள்நீத

சிரண புரண விதரண விசிரவண
     சரணு சரவண பவகுக சயனொளி
          திரவ பரவதி சிரமறை முடிவுறு ...... பொருள்நீத

அகர உகரதி மகரதி சிகரதி
     அகர அருளதி தெருளதி வலவல
          அரண முரணுறும் அசுரர்கள் கெடஅயில் ...... விடுவோனே

அழகும்இலகிய புலமையும் மகிமையும்
     வளமும் உறைதிரு மயிலையில் அநுதினம்
          அமரும் அரகர சிவசுத அடியவர் ...... பெருமாளே.

திருப்பாடல் 5:
தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான

இணையதிலதாம் இரண்டு கயல்கள்எனவே புரண்டு
     இருகுழையின் மீதடர்ந்து ...... அமராடி

இலகுசிலை வேள்துரந்த கணையதிலுமே சிறந்த
     இருநயனர் வாரிணங்கு ...... மதபாரப்

பணைமுலையின் மீதணிந்த தரளமணியார் துலங்கு
     பருவ ரதி போல வந்த ...... விலைமானார்

பயிலுநடையால் உழன்று அவர்களிடம் மோகமென்ற
     படுகுழியிலே மயங்கி ...... விழலாமோ

கணகணென வீர தண்டை சரணமதிலே விளங்க
     கலபமயில் மேலுகந்த ...... குமரேசா

கறுவிவரு சூரனங்கம் இருபிளவதாக விண்டு
     கதறிவிழ வேலெறிந்த ...... முருகோனே

மணிமகுட வேணி கொன்றை அறுகுமதி ஆறணிந்த
     மலைய விலின் நாயகன்தன் ...... ஒருபாக

மலைஅரையன் மாது தந்த சிறுவன்எனவே வளர்ந்து
     மயிலைநகர் வாழ வந்த ...... பெருமாளே.

திருப்பாடல் 6:
தனதனன தான தத்த தனதனன தான தத்த
     தனதனன தான தத்த ...... தனதான

களபமணி ஆரமுற்ற வனசமுலை மீதுகொற்ற
     கலகமத வேள்தொடுத்த ...... கணையாலும்

கனிமொழி மினார்கள் முற்றும் இசைவசைகள் பேசவுற்ற
     கனலென உலாவு வட்ட ...... மதியாலும்

வளமையணி நீடு புஷ்ப சயனஅணை மீதுருக்கி
     வனிதைமடல் நாடி நித்தம்...... நலியாதே

வரியளிஉலாவு துற்ற இருபுயம்அளாவி வெற்றி
மலரணையில் நீஅணைக்க ...... வரவேணும்

துளபமணி மார்ப சக்ரதரன் அரிமுராரி சர்ப்ப
     துயிலதரன் ஆதரித்த ...... மருகோனே

சுருதிமறை வேள்வி மிக்க மயிலைநகர் மேவும்உக்ர
     துரகத கலாப பச்சை ...... மயில்வீரா

அளகை வணிகோர் குலத்தில் வனிதை உயிர் மீளழைப்ப
     அருள்பரவு பாடல் சொற்ற ...... குமரேசா

அருவரையை நீறெழுப்பி நிருதர்தமை வேரறுத்து
     அமரர்பதி வாழ வைத்த ...... பெருமாளே.

திருப்பாடல் 7:
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

கடிய வேக மாறாத விரத சூதர்ஆபாதர்
     கலகமேசெய் பாழ்மூடர் ...... வினைவேடர்

கபட வீனர்ஆகாத இயல்பு நாடியேநீடு
     கனவிகாரமேபேசி ...... நெறி பேணாக்

கொடியனேதும் ஓராது விரக சாலமேமூடு
     குடிலின் மேவியே நாளும் ...... மடியாதே

குலவு தோகை மீதாறு முகமும் வேலும் ஈராறு
     குவளை வாகும் நேர்காண ...... வருவாயே

படியினோடு மாமேரு அதிர வீசியேசேட
     பணமும்ஆடவே நீடு ...... வரைசாடிப்

பரவையாழி நீர்மோத நிருதர் மாள வானாடு
     பதியதாக வேலேவு ...... மயில்வீரா

வடிவுலாவி ஆகாச மிளிர் பலாவின் நீள்சோலை
     வனச வாவி பூவோடை ...... வயலோடே

மணிசெய் மாட மாமேடை சிகரமோடு வாகான
     மயிலை மேவி வாழ்தேவர் ...... பெருமாளே.

திருப்பாடல் 8:
தனனா தனனாதன தனனா தனனாதன
     தனனா தனனாதன ...... தனதான

திரைவார் கடல்சூழ்புவிதனிலே உலகோரொடு
     திரிவேன் உனைஓதுதல் ...... திகழாமே

தினநாளும் முனேதுதி மனதார பினேசிவ
     சுதனே திரிதேவர்கள் ...... தலைவா மால்

வரைமாதுமையாள் தரு மணியே குகனேஎன
     அறையா அடியேனும் உன்  ...... அடியாராய்

வழிபாடுறுவாரொடு அருளா தரமாயிடு
     மகநாள் உளதோசொல ...... அருள்வாயே

இறை வாரண தேவனும் இமையோரவர் ஏவரும்
     இழிவாகி முனேஇயல்  ...... இலராகி

இருளா மனதேயுற அசுரேசர்களே மிக
     இடரே செயவேஅவர்  ...... இடர்தீர

மறமா அயிலேகொடு உடலேஇருகூறெழ
     மதமா மிகுசூரனை ...... மடிவாக

வதையே செயுமாவலி உடையா அழகாகிய
     மயிலாபுரி மேவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 9:
தனதன தனதன தாந்த தானன
     தனதன தனதன தாந்த தானன
          தனதன தனதன தாந்த தானன ...... தனதான

நிரைதரு மணியணி ஆர்ந்த பூரித
     ம்ருகமத களபகில் சாந்து சேரிய
          இளமுலை உரமிசை தோய்ந்து மாமலர்  ......அணைமீதே

நெகிழ்தர அரைதுகில் வீழ்ந்து மாமதி
     முகம் வெயர்வெழ விழி பாய்ந்து வார்!குழை
          யொடுபொர இருகரமேந்து நீள்வளை ...... ஒலிகூர

விரைமலர் செறிகுழல் சாய்ந்து நூபுரம்
     இசைதர இலவிதழ் மோந்து !வாயமு
          தியல்பொடு பருகிய வாஞ்சையே தக ...... இயல்நாடும்

வினையனை இருவினை ஈண்டும்ஆழ்கடல்
     இடர்படு சுழியிடை தாழ்ந்து போமதி
          இருகதி பெறஅருள் சேர்ந்து வாழ்வதும்  ...... ஒருநாளே

பரைஅபிநவைசிவை சாம்பவீஉமை
     அகிலமும் அருளஅருளேய்ந்த கோமளி
          பயிரவி திரிபுரை ஆய்ந்த நூல்மறை ...... சதகோடி

பகவதி இருசுடரேந்து காரணி
     மலைமகள் கவுரி விதார்ந்த மோகினி
          படர்சடையவன்இட நீங்குறாதவள் ...... தருகோவே

குரைகடல் மறுகிட மூண்ட சூரர்கள்
     அணிகெட நெடுவரை சாய்ந்து தூளெழ
          முடுகிய மயில்மிசை ஊர்ந்து வேல்விடு ...... முருகோனே

குலநறை மலரளி சூழ்ந்துலாவிய
     மயிலையில் உறைதரு சேந்த சேவக
          குகசரவணபவ வாய்ந்த தேவர்கள் ...... பெருமாளே.

திருப்பாடல் 10:
தனதன தத்தன தானா தானன
     தனதன தத்தன தானா தானன
          தனதன தத்தன தானா தானன ...... தனதான

வருமயில் ஒத்தவர் ஈவார் மாமுக
     மதியென வைத்தவர் தாவா காமிகள்
          வரிசையின் முற்றிய வாகாராம்இயல் ...... மடமாதர்

மயலினில் உற்றவர் மோகா வாரிதி
     அதனிடை புக்கவர் ஆளாய் நீள்நிதி
          தருஇயலுத்தர்கள் மாடா மாமதி ...... மிகமூழ்கி

தருபர உத்தம வேளே சீருறை
     அறுமுக நற்றவ லீலா கூருடை
          அயிலுறை கைத்தல சீலா பூரண ...... பரயோக

சரவண வெற்றி விநோதா மாமணி
     தரும்அரவைக்கடி நீதா ஆமணி
          மயில்உறைவித்த உனாதாராம்அணி ...... பெறுவேனோ

திரிரிரி தித்திதி தீதீ தீதிதி
     தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு
          திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி ...... தொதிதீதோ

எனஅரி மத்தள மீதார் தேமுழ
     திடுஎனமிக்கியல் வேதாவே தொழு
          திருநடமிட்டவர் காதே மூடிய ...... குருபோதம்

உரை செயும்உத்தம வீரா நாரணி
     உமையவள்உத்தர பூர்வா காரணி
          உறுஜக ரக்ஷணி நீரா வாரணி ...... தருசேயே

உயர்வரம் உற்றிய கோவே ஆரண
     மறைமுடி வித்தக தேவே காரண
          ஒருமயிலைப்பதி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.

(2020 நவம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:

Post a Comment