Saturday, June 30, 2018

கொடும்பை:

(மலை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: மலை நாடு

மாவட்டம்: பாலக்காடு 

திருக்கோயில்: அருள்மிகு கல்யாண சுப்ரமண்ய சுவாமி திருக்கோயில்

தல வகை: முருகன் திருக்கோயில்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

பாலக்காடு இரயில் நிலையத்திலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது 'கொடும்பை'. மலை நாட்டில் திருப்புகழ் பெற்றுள்ள திருத்தலம் இதுவொன்றேயாகும், அருணகிரிப் பெருமான் நேரில் தரிசித்துப் பரவியுள்ள புண்ணியப் பதி. 

'கல்யாண சுப்ரமண்ய சுவாமி திருக்கோயில்' என்று பிரசித்தமாய் அறியப் பெற்று வரும் இவ்வாலயக் கருவறையில் நம் திருப்புகழ் தெய்வம் நின்ற திருக்கோலத்தில், இரு தேவியரும் உடனிருக்க அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றான். மலையாள தேசத்திலுள்ள ஆலயம் எனினும் திருக்கோயிலெங்கிலும் தமிழ் மிளிர்கின்றது. உட்பிரகாரத் திருச்சுவற்றில் இத்தலத்திற்கான திருப்புகழ் திருப்பாடல் பொறிக்கப் பெற்றுள்ளது. ஆண்டு தோறும் இத்தலத்தில் நடந்தேறும் தைப்பூச உற்சவத்தைக் கூனம்பட்டி ஆதீன குருமகா சன்னிதானம் அவர்களே கொடியேற்றித் துவக்கி வைப்பதாக அறிகின்றோம்.    

ஆலயத்திற்கு மிக அருகில் 'சோக நாசினி' எனும் புண்ணியப் புனல் ஓடுகின்றது. 12 ஆண்டுகளுக்கொரு முறை மகாமகப் பெருவிழா போன்றே இங்கும் வெகுசிறப்பாய் உற்சவமொன்று கொண்டாடப் பெறுகின்றது. அன்று நம் சுப்ரமண்ய சுவாமி இப்புனலுக்கு எழுந்தருளி வந்து தீர்த்தவாரி கண்டருள் புரிகின்றான்.      

அருணை மாமுனிவர் இத்தலத்திற்கு ஒரு திருப்புகழ் திருப்பாடலை அருளியுள்ளார், 

(Google Maps: Kodumbu Subramanya Swamy Temple, Kerala)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனதனனந் தத்தத் தனதனனந் தத்தத்
     தனதனனந் தத்தத் ...... தனதான
-
கலைஞரெணும் கற்புக் கலியுக பந்தத்துக்
     கடனபயம் பட்டுக் ...... கசடாகும்
-
கரும சடங்கச்சட் சமயிகள் பங்கிட்டுக்
     கலகலெனும் கொட்புற்றுடன் மோதும்
-
அலகில்பெரும் தர்க்கப் பலகலையின் !பற்றற்
     றரவியிடம் தப்பிக் ...... குறியாத
-
அறிவையறிந்தப் பற்றதனினொடும் !சற்றுற்
     றருள் வசனம் கிட்டப் ...... பெறலாமோ
-
கொலைஞரெனும் கொச்சைக் குறவரிளம் பச்சைக்
     கொடிமருவும் செச்சைப் ...... புயமார்பா
-
கொடியநெடும் கொக்குக் குறுகவுணன் பட்டுக்
     குரைகடல் செம்பச் சக்கரவாளச்
-
சிலைபக எண் திக்குத் திகிரிகளும் பத்துத்
     திசைகளினும் தத்தச் ...... செகமேழும்
-
திருகு சிகண்டிப் பொற் குதிரைவிடும் செட்டித்
     திறல கொடும்பைக்குள் ...... பெருமாளே


(2021 டிசம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:

Post a Comment