Thursday, December 27, 2018

வல்லக் கோட்டை:

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: காஞ்சிபுரம் 

திருக்கோயில்: அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

தல வகை: முருகன் திருக்கோயில்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

சென்னையிலிருந்து சுமார் 45 கி.மீ தொலைவிலும், ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 18 கிமீ பயணத் தொலைவிலும்,  தாம்பரத்திலிருந்து 28 கிமீ தொலைவிலும், சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து 18 கிமீ பயணத் தொலைவிலும் இத்தலத்தை அடையலாம். புராணப் பெயர் கோடை நகர் (தற்கால வழக்கில் வல்லக்கோட்டை).

கந்தக் கடவுள் வல்லன் எனும் அசுரனை சம்ஹாரம் புரிந்த தலமாதலால் வல்லக்கோட்டை, நாரத முனிவரிடம் அபச்சாரப்பட்ட காரணத்தால் 'கோரன்' எனும் அசுரனிடம் தோற்று தன்னுடைய நாட்டினையும் இழந்து துன்புற்ற பகீரதன் எனும் மன்னன், துர்வாச முனிவரின் வழிகாட்டுதலின் பேரில், இத்தல மூர்த்தியைப் பூசித்துப் பேறு பெற்றுள்ளான். மேலும் தேவ குருவான பிரஹஸ்பதியின் அறிவுறுத்தலின் பேரில் தேவேந்திரன் இத்தலத்தில் வஜ்ர தீர்த்தம் அமைத்து அறுமுகப் பெருமானைத் தொழுது அருள் பெற்ற நிகழ்வினையும் தலபுராணம் நமக்கு அறிவிக்கின்றது.

சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இத்திருத்தலத்தில் திருப்புகழ் தெய்வமான நம் கந்தக் கடவுள் 6 அடி உயரத் திருமேனியில், ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களுடனும், இருமருங்கிலும் வள்ளி தெய்வயானை தேவியர் விளங்கியிருக்க ஆச்சரியமான திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரிநாதர் இத்தலத்திற்கென 7 திருப்புகழ் திருப்பாடல்களை அருளியுள்ளார்,

(Google Maps: VallaKottai Murugan Temple, Vallakkottai, Tamil Nadu, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).

 

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 7.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான

ஆதிமுதனாளில் எந்தன் தாயுடலிலே இருந்து
     ஆக மலமாகி நின்று ...... புவிமீதில்

ஆசையுடனே பிறந்து நேசமுடனே வளர்ந்து
     ஆள்அழகனாகி நின்று ...... விளையாடிப்

பூதலமெலாம் அலைந்து மாதருடனே கலந்து
     பூமிதனில் வேணுமென்று ...... பொருள்தேடிப்

போகமதிலே உழன்று பாழ்நரகெய்தாமல் உந்தன்
     பூவடிகள் சேர அன்பு ...... தருவாயே

சீதைகொடு போகுமந்த ராவணனை மாள வென்ற
     தீரன்அரி நாரணன்தன் ...... மருகோனே.

தேவர் முநிவோர்கள் கொண்டல் மாலரி பிரமாவும் நின்று
     தேடஅரிதானவன் தன் ...... முருகோனே

கோதைமலை வாழுகின்ற நாதர்இடபாக நின்ற
     கோமளிஅநாதி தந்த ...... குமரேசா

கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட
     கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான

சால நெடுநாள் மடந்தை காயமதிலே அலைந்து
     சாமளவதாக வந்து ...... புவிமீதே

சாதகமுமான பின்பு சீறிஅழுதே கிடந்து
     தாரணியிலே தவழ்ந்து ...... விளையாடிப்

பாலன் எனவே மொழிந்து பாகுமொழி மாதர் தங்கள்
     பார தனம் மீதணைந்து ...... பொருள்தேடிப்

பார்மிசையிலே உழன்று பாழ்நரகெய்தாமல் ஒன்று
     பாதமலர் சேர அன்பு ...... தருவாயே

ஆலம்அமுதாக உண்ட ஆறுசடை நாதர் திங்கள்
     ஆடரவு பூணர் தந்த ...... முருகோனே

ஆனைமடு வாயிலன்று மூலமென ஓலமென்ற
     ஆதிமுதல் நாரணன்தன் ...... மருகோனே

கோலமலர் வாவியெங்கும் மேவுபுனம் வாழ்மடந்தை
     கோவை அமுதூறல்உண்ட ...... குமரேசா

கூடிவரு சூரடங்க மாள வடிவேலெறிந்த
     கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தானா தானா தானா தானா
     தானா தானா ...... தனதானா

ஏறானாலே நீறாய் மாயா
     வேளே வாசக் ...... கணையாலே

ஏயாய் ஏயாய் மாயா வேயால்
     ஆம்ஏழோசைத் ...... தொளையாலே

மாறாய் ஊறாய் ஈறாய் மாலாய்
     வாடா மானைக் ...... கழியாதே

வாராய் பாராய் சேராயானால்
     வாடா நீபத் ...... தொடை தாராய்

சீறா வீறா ஈரேழ் பார்சூழ்
     சீரார் தோகைக் ...... குமரேசா

தேவா சாவா மூவா நாதா
     தீரா கோடைப் ...... பதியோனே

வேறாய் மாறாய் ஆறாம் மாசூர்
     வேர்போய் வீழப் ...... பொருதோனே

வேதா போதா வேலா பாலா
     வீரா வீரப் ...... பெருமாளே.

திருப்பாடல் 4:
தான தந்த தனத்த தத்த ...... தனதானா

ஞாலமெங்கும் வளைத்தரற்று ...... கடலாலே
நாளும் வஞ்சியர் உற்றுரைக்கும் ...... வசையாலே
ஆலமுந்து மதித்தழற்கும் ...... அழியாதே
ஆறிரண்டு புயத்தணைக்க ...... வருவாயே
கோலமொன்று குறத்தியைத் தழுவுமார்பா
கோடையம்பதி உற்றுநிற்கும் ...... மயில்வீரா
காலனஞ்ச வரைத் தொளைத்த ...... முதல் வானோர்
கால் விலங்கு களைத்தறித்த ...... பெருமாளே.

திருப்பாடல் 5:
தானன தந்தன தந்த தந்தன
     தானன தந்தன தந்த தந்தன
          தானன தந்தன தந்த தந்தன ...... தனதான

தோழமை கொண்டு சலம்செய் குண்டர்கள்
     ஓதிய நன்றி மறந்த குண்டர்கள்
          சூழ்விரதங்கள் கடிந்த குண்டர்கள் ...... பெரியோரைத்

தூஷண நிந்தை பகர்ந்த குண்டர்கள்
     ஈவது கண்டு தகைந்த குண்டர்கள்
          சூளுறவென்பதொழிந்த குண்டர்கள் ...... தொலையாமல்

வாழ நினைந்து வருந்து குண்டர்கள்
     நீதிஅறங்கள் சிதைந்த குண்டர்கள்
          மான அகந்தை மிகுந்த குண்டர்கள் ...... வலையாலே

மாயையில் நின்று வருந்து குண்டர்கள்
     தேவர்கள் சொங்கள் கவர்ந்த குண்டர்கள்
          வாதை நமன்தன் வருந்திடும்குழி ...... விழுவாரே

ஏழு மரங்களும் வன்குரங்கெனும்
     வாலியும் அம்பரமும் பரம்பரை
          ராவணனும் சதுரங்க லங்கையும் ...... அடைவேமுன்

ஈடழியும்படி சந்த்ரனும்சிவ
     சூரியனும் சுரரும் பதம்பெற
          ராம சரம்தொடு புங்கவன்திரு ...... மருகோனே

கோழி சிலம்ப நலம்பயின்ற!க
     லாப நடம்செய மஞ்சு தங்கிய
          கோபுரமெங்கும் விளங்கும் மங்கல ...... வயலூரா

கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர்
     வேலன்எனும் பெயர்அன்புடன் புகழ்
          கோடையெனும் பதி வந்த இந்திரர் ...... பெருமாளே.

திருப்பாடல் 6:
தானத் தானத் தானத் தானத்
     தானத் தானத் ...... தனதான

தோள் தப்பாமல் தோய்தப் பாணிச்
     சூழ்துற்றார் துற்றழுவாரும்

தூரப் போகக் கோரப் பாரச்
     சூலப் பாசச் ...... சமனாரும்

பாடைக் கூடத் தீயில் தேறிப்
     பாழ்பட்டே பட்டழியாதே

பாசத் தேனைத் தேசுற்றார் பொற்
     பாதத்தே வைத்தருள்வாயே

ஆடல் சூர்கெட்டோடத் !தோயத்
     தாரச் சீறிப் ...... பொரும்வேலா

ஆனைச் சேனைக் கானில் !தேனுக்
     காரத் தாரைத் ...... தரும்வீரா

கூடற் பாடிக் கோவைப் பாவைக்
     கூடப் பாடித் ...... திரிவோனே

கோலச் சாலிச் சோலைச் சீலக்
     கோடைத் தேவப் ...... பெருமாளே.

திருப்பாடல் 7:
தானத்த தான தந்த தானத்த தான தந்த
     தானத்த தான தந்த ...... தனதான

வாசித்த நூல் மதங்கள் பேசிக்கொடாத விந்து
     வாய்மை ப்ரகாசமென்று ...... நிலையாக

மாசிக் கபாலமன்றில் நாசிக்குள் ஓடுகின்ற
     வாயுப் பிராணன்ஒன்று ...... மடைமாறி

யோசித்தயர் உடம்பை நேசித்துறாதலைந்து
     ரோமத்து வாரமெங்கும் ...... உயிர்போக

யோகச் சமாதி கொண்டு மோகப் பசாசு மண்டு
     லோகத்தில் மாய்வதென்றும் ஒழியாதோ

வீசப்பயோதி துஞ்ச வேதக் குலாலன் அஞ்ச
     மேலிட்ட சூர்தடிந்த ...... கதிர்வேலா

வீர ப்ரதாப பஞ்ச பாணத்தினால் மயங்கி
     வேடிச்சி காலில்அன்று ...... விழுவோனே

கூசிப் புகாஒதுங்க மாமன் திகாதரிந்த
     கூளப்புராரி தந்த ...... சிறியோனே

கோழிப்ப தாகை கொண்ட கோலக் குமார கண்ட
     கோடைக்குள் வாழ வந்த ...... பெருமாளே.


(2019 ஜூலை மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:

Post a Comment