Friday, March 13, 2015

திருப்புகழ் தலங்கள் - சில விளக்கங்கள்:

Arunagirithar and Lord Muruga
அருணகிரிநாதர் பாடியருளியவை மொத்தம் 16,000 திருப்புகழ் பாடல்கள். அவற்றுள் நமக்கு இன்று கிடைத்துள்ளவை 1334 பாடல்கள்.

(குறிப்பு: பாடல்களின் எண்ணிக்கை குறித்த சிறு கருத்து பேதங்களும் அறிஞர் பெருமக்களுக்குள் உண்டு. ஒரு சாரார் பாடல்கள் மொத்தம் 1307 என்றும் மற்றொரு தரப்பினர் 1325 என்றும் குறிக்கின்றனர். எனினும் புதிதாகக் கிடைக்கப் பெற்ற சில பாடல்களுடன் சேர்த்து மொத்தம் 1334 பாடல்கள் என்று கொள்வது ஏற்புடையது).

எண்ணற்ற ஆன்றோர்களும் அறிஞர் பெருமக்களும் திருப்புகழ் பாடல்களனைத்தையும் உய்த்து உணர்ந்து அதன் மூலம் 'பாடல் பெற்ற தலங்களையும் அத்தலங்களில் அமைந்துள்ள திருக்கோயில்களையும்'  (இயன்ற வரையில்) கண்டறிந்து நமக்கு அறிவித்துள்ளனர்.

அவ்வகையில் நமக்கு கிடைத்துள்ள திருப்புகழ் தலங்கள் மொத்தம் 198. திருப்புகழ் பாடல் பெற்றுள்ள இத்தலங்களுள் 100 தேவாரத் தலங்களும், 2 திருவாசகத் தலங்களும், 2 திருவிசைப்பா தலங்களும் இடம் பெறுவது குறிப்பிடத் தக்கது.

பிரதானமாகப் பாடல் பெற்றுள்ள (முழுப் பாடல்களைப் பெற்றுள்ள) தலங்கள் மட்டுமே இவ்வலைத் தலத்தில் தொகுக்கப் பட்டுள்ளன. பாடல்களில் ஆங்காங்கே குறிக்கப் படும் வைப்புத் தலங்கள் இவற்றுள் இடம்பெறாது.

சில தலங்களில் 'தலங்களையே குமாரக் கடவுள் உறையும் திருக்கோயில்களாக' அருணகிரிநாதர் பாடியருளி உள்ளார் (உதாரணம்: ஹரித்வார்). இங்குத் தனிக்கோயில் இல்லை எனினும் தலமே கோயில். (ஆறுமுகக் கடவுளுக்கு எல்லை என்பதும் உளதோ!!!).
Arunagirinathar
இவ்வலைத் தளம் வடிவமைக்கப் பட்டதன் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு:

திருப்புகழ் பாடல் பெற்ற தலங்களுக்கு பிரத்யேகமாகவும், ஆதார பூர்வமாகவும், தல யாத்திரை செல்ல விழைவோருக்கு மிகவும் பயனுள்ள வகையிலும் ஒரு வலைத் தலத்தை உருவாக்குவது.

தேவாரத் தலங்களைப் போன்று திருப்புகழ் தலங்களையும் 'தொண்டை நாடு; சோழ நாடு, நடு நாடு..' என்று பல்வேறு முக்கியப் பிரிவுகளாக முறைப்படுத்தித் தொகுப்பது. 

பகுக்கப்படும் ஒவ்வொரு பிரிவிற்குள்ளும் தலங்களை மாவட்ட வாரியாகவும் பிரித்துத் தொகுப்பது.

தலங்களின் பெயர் மட்டுமல்லாமல் அத்தலத்தின் பாடல் பெற்ற திருக்கோயில் பற்றிய விவரங்களையும் அளிப்பது (உ: பெயர், அமைவிடம், செல்லும் வழி, முருகப் பெருமானின் திருவுருவ வர்ணனை,
அருணகிரிநாதர் சம்பந்தப் பட்ட நிகழ்வுகள்).

Saturday, February 28, 2015

தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்:

(தே) என்று அடைப்புக் குறியுடன் காணப் படும் தலங்கள் 'திருப்புகழ் பாடல் பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல் தேவாரத் தலங்களாகாவும்' விளங்குவதைக் குறிக்கின்றது.

சென்னை மாவட்டம்:

திருவலிதாயம் (தே)
திருமயிலை (மயிலாப்பூர்) (தே)
திருவான்மியூர் (தே)
கோசைநகர் (கோயம்பேடு)

திருவள்ளூர் மாவட்டம்:
திருவாலங்காடு (தே)
திருவொற்றியூர் (தே)
திருவேற்காடு (தே)
திருத்தணிகை (தே)
(வட)திருமுல்லைவாயில்  
ஆண்டார்குப்பம்
சிறுவை (சிறுவாபுரி)

சித்தூர் மாவட்டம் (ஆந்திர மாநிலம்)
திருக்காளத்தி (தே)

காஞ்சிபுரம் மாவட்டம்:
திருக்கச்சி ஏகம்பம் (தே)
திருக்கழுக்குன்றம் (தே)
திருப்போரூர்
மாடம்பாக்கம்
உத்தரமேரூர்
பெருங்குடி
மதுராந்தகம்
சேயூர் (செய்யூர்)
விசுவை
கோடைநகர் (வல்லைக்கோட்டை)

திருவண்ணாமலை மாவட்டம்:
திருவோத்தூர் (தே)
வாகை மாநகர் (வாழ்கொளிப் புத்தூர், வாளப் புத்தூர், வாளொளிப் புத்தூர்) (தே)

வேலூர் மாவட்டம்:
விரிஞ்சிபுரம்
வேலூர்
வள்ளிமலை
காமத்தூர்
முள்வாய்
வெள்ளிகரம்
வேப்பூர் (நிம்பபுரம்)
ஞானமலை
பாக்கம்
திருவல்லம் (தே)

செங்கல்பட்டு மாவட்டம்:
பேறைநகர்
 
விழுப்புரம் மாவட்டம்:
திருவக்கரை (தே)

திருவலிதாயம்:

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)

பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: சென்னை

திருக்கோயில்: அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத் தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர் , தேவாரம் (ஞான சம்பந்தர்), வள்ளலார் (திருவருட்பா)


அமைவிடம் (செல்லும் வழி):

சென்னை பாடியில் அமைந்துள்ளது திருவலிதாயம். வில்லிவாக்கத்திற்கு 2 மைல் பயணத் தொலைவிலும் இத்தலத்தை அடையலாம்.

ஆவடி செல்லும் சாலையில் பாடி லூகாஸ் டிவிஸ் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள சாலை வழியாகச் சென்று இக்கோவிலை அடையலாம்.

தொலைபேசி:+91- 44-26540706

தலச் சிறப்புகள்:

பரத்வாஜர், ஸ்ரீராமர், ஆஞ்சநேயர், சூரியன், சந்திரன், இந்திரன் முதலானோர் வழிபட்டுப் பேறு பெற்றத் தலம்.

பரத்வாஜ முனிவர் வலியனாக (கருங் குருவியாக) மாறும் வண்ணம் சாபம் பெற்றார். அச்சாபம் நீங்க இத்தலத்து இறைவனைப் பூஜித்துச் சாபம் நீங்கப் பெற்றார்.

ஆறுமுகக் கடவுள் ஸ்ரீவள்ளி தெய்வயானைத் தாயாருடன் அருள் புரியும் தலம்.

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் ஒன்று.

மருமல்லியார் குழலின் மடமாதர்
மருளுள்ளி நாயடியன் அலையாமல்
இரு நல்லவாகும் உனதடி பேண
இனவல்ல மான மனது அருளாயோ
கருநெல்லி மேனி அரி மருகோனே
கன வள்ளியார் கணவ முருகேசா
திருவல்லிதாயம் அதில் உறைவோனே
திகழ்வல்ல மாதவர்கள் பெருமாளே!!!


Thiruvalithayam Shiva Temple
Lord Muruga in Thiruvalithayam Shiva Temple


திருமயிலை

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு தொண்டை நாடு
மாவட்டம் சென்னை
திருக்கோயில் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்
தல வகை சிவத் தலம்
பாடிய அருளாளர்கள் அருணகிரிநாதர், தேவாரம் (ஞான சம்பந்தர்), வள்ளலார் (திருவருட்பா)
அமைவிடம் (செல்லும் வழி):
சென்னை மாநகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது திருமயிலை (மயிலாப்பூர்).

தொலைபேசி: 91- 44 - 2464 1670
தலச் சிறப்புகள்::
அம்பிகை மயிலின் வடிவு கொண்டு பிறை சூடும் பெம்மானைப் பூஜித்த புண்ணியத் தலம்.ஞானசம்பந்தப் பெருமான் பாடிப் பரவிய பீடுடைய தலம்.

'மட்டிட்ட புன்னை' எனத் தொடங்கும் திருப்பதிகத்தால் சம்பந்தர் எலும்பைப் பெண்ணாக்கி உயிர்ப்பித்தருளிய ஏற்றமிகு தலம்.

வாயிலார் நாயனாரின் முக்தித் தலம். ஆறுமுகக் கடவுள் ஸ்ரீவள்ளி தெய்வயானைத் தாயாருடன் அருள் புரியும் தலம்.
திருப்புகழ் பாடல்கள்::
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் பத்து.

kapaleeswarar temple
Lord Muruga shrine in kapaleeswarar temple

கோசைநகர் (கோயம்பேடு):

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு தொண்டை நாடு
மாவட்டம் சென்னை
திருக்கோயில் அருள்மிகு குறுங்காலீஸ்வரர் (குசலவபுரீஸ்வரர்) திருக்கோயில்
தல வகை சிவத் தலம்
பாடிய அருளாளர்கள் அருணகிரிநாதர்
அமைவிடம் (செல்லும் வழி):
சென்னை கோயம்பேட்டில் 'சிவன் கோயில்' தெருவில் அமைந்துள்ளது இத்தலம்.

தாம்பரத்திலிருந்து ஆவடிக்குச் செல்லும் மார்கத்தில் வடபழனிக்கு அருகிலும், பாரிமுனையில் இருந்து பூவிருந்தவல்லி செல்லும் வழியில் அரும்பாக்கத்தை அடுத்தும் கோயம்பேடு அமைந்துள்ளது.

திருக்கோயில் வலைத் தள முகவரி:
http://www.kurungaleeswarartemple.tnhrce.in/

தொலைபேசி: 044 24796237
தலச் சிறப்புகள்:
அம்பிகையின் திருநாமம் அறம் வளர்த்த நாயகி (தர்ம சம்வர்த்தினி).
பிரமாண்டமான திருக்கோயில். ஆதியில் கோசை நகர் என்று இத்தலம் வழங்கப் பட்டு வந்துள்ளது. மிகப் புராதனமான திருக்கோயில்.

ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் புதல்வர்களான லவ - குசா பூஜித்த திருக்கோயில் எனில் இதன் தொன்மை விளங்கும். ஆலய வளாகத்தில் ஸ்ரீவைகுண்டவாசப் பெருமாளும் உறைகிறார்.

தற்பொழுது நடப்பது கலியுகம். இதற்கு முன்பு துவாபர யுகம் (8,64,000 ஆண்டுகள்). அதற்கு முந்தைய யுகமான த்ரேதா யுகத் திருக்கோயில் இது.

ஆறுமுகக் கடவுள் ஸ்ரீவள்ளி தெய்வயானை ஆகிய இரு தேவியருடன் உறைந்து அருளும் அற்புதத் தலம்.
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் ஒன்று.

ஆதவித பாரமுலை மாதரிடை நூல்வயிறது
     ஆலிலை எனா மதன கலைலீலை
யாவும் விளைவான குழியான திரிகோணமதில்
     ஆசை மிகவாய் அடியன் அலையாமல்
நாத சதகோடி மறையோலமிடு நூபுர
மு(ன்)னான பத மாமலரை நலமாக
நான் அநுதினா தினமுமே நினையவே கிருபை
     நாடியருளே அருள வருவாயே
சீதமதி ஆடரவு ஏர் அறுகு மா இறகு
     சீத சலம் மா சடில பரமேசர்
சீர்மை பெறவே உதவு கூர்மை தரு வேல சிவ
     சீறி வருமா அசுரர் குலகாலா
கோதை குறமாது குண தேவ மடமாதுமிரு
     பாலுமுற வீறிவரு குமரேசா
கோசைநகர் வாழவரும் ஈச அடியர் நேச சருவேச
     முருகா அமரர் பெருமாளே!!!
kurungaleeswarar temple
kurungaleeswarar temple
kurungaleeswarar temple

ஆண்டார்குப்பம்

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு தொண்டை நாடு
மாவட்டம் திருவள்ளூர்
திருக்கோயில் அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
தல வகை முருகன் திருக்கோயில்
பாடிய அருளாளர்கள் அருணகிரிநாதர்
அமைவிடம் (செல்லும் வழி):
சென்னை நகரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் பொன்னேரிக்கு செல்லும் வழியில் உள்ள திருத்தலம்.

செங்குன்றத்தில் (Red Hills) இருந்து 10 கி.மீ. பயண தூரத்திலும் இத்தலத்தை அடையலாம்.

தொலைபேசி: +91-44-27974193, 99629-60112
தலச் சிறப்புகள்::
மூலவர் பால சுப்ரமண்யர் அதிகாலையில் பாலகனாகவும், மதியம் வாலிபக் கோலத்திலும், மாலை வயோதிகக் கோலத்திலும் திருக்காட்சி அளித்து அருளுகிறார்.
திருப்புகழ் பாடல்கள்::
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் ஒன்று.

அருணகிரிநாதர் இத்தலத் திருப்புகழில் தலத்தின் பெயரை நேரடியாகக் குறிக்காமல் 'தச்சூர் வடக்காகும் மார்க்கத்து அமர்ந்த பெருமாளே' என்று சுட்டுகிறார்.

இது தச்சூருக்கு வடக்கில் அமைந்துள்ள ஆண்டார் குப்பத்தைக் குறிக்க வந்தது.

அச்சாய் இறுக்காணி காட்டிக் கடைந்த
     செப்பார் முலைக்கோடு நீட்டிச் சரங்களைப்
         போல் விழிக்கூர்மை நோக்கிக் குழைந்து உறவாடி

அத்தான் எனக்காசை கூட்டித் தயங்க
     வைத்தாயெனப் பேசி மூக்கைச் சொறிந்து
          அக்கால் ஒருக்காலம் ஏக்கற்றுறிருந்திர் இலை ஆசை

வைச்சாய் எடுப்பான பேச்சுக்கு இடங்கள்
     ஒப்பார் உனக்கீடு பார்க்கில் கடம்பன்
          மட்டோ எனப்பாரின் மூர்க்கத்தனங்கள் அதனாலே

மைப்பாகு எனக் கூறி வீட்டிற் கொணர்ந்து
     புல்பாயலில் காலம் வீற்றுக் கலந்து
          வைப்பார் தமக்காசையால் பித்தளைந்து திரிவேனோ

எச்சாய் மருட்பாடு மேற்பட்டிருந்த
     பிச்சு ஆசருக்கு ஓதி கோட்டைக் கிலங்க
          மிக்கா நினைப்போர்கள் வீக்கில் பொருந்தி நிலையாயே

எட்டாம் எழுத்தை ஏழையேற்குப் பகர்ந்த
     முத்தா வலுப்பான போர்க்குள் தொடங்கி
        எக்காலும் மக்காத சூர்க்கொத்து அரிந்த சினவேலா

தச்சா மயில் சேவலாக்கிப் பிளந்த
     சித்தா குறப்பாவை தாட்குள் படிந்து
          சக்காகி அப்பேடையாட்குப் புகுந்து மணமாகித்

தப்பாமல் இப் பூர்வ மேற்குத் தரங்கள்
     தெற்காகும் இப்பாரில் கீர்த்திக்கிசைந்த
          தச்சூர் வடக்காகு மார்க்கத்தமர்ந்த பெருமாளே!!!

andarkuppam murugan temple
andarkuppam murugan temple
andarkuppam murugan temple
 
 

மாடம்பாக்கம்:

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு தொண்டை நாடு
மாவட்டம் காஞ்சிபுரம்
திருக்கோயில்
அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்
தல வகை
சிவத் தலம்
பாடிய அருளாளர்கள் அருணகிரிநாதர்
அமைவிடம்: (செல்லும் வழி):
தாம்பரத்தின் அருகில் வண்டலூருக்கு 7 மைல் கிழக்கில் உள்ளது மாடம்பாக்கம்.

தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் பேருந்துகளில் 5 கி.மீ. தூரத்திலுள்ள ராஜகீழ்பாக்கம் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் சாலையில் 3 கி.மீ. சென்றால் மாடம்பாக்கம் கோயிலை அடையலாம்.

தொலைபேசி : +91- 44- 2228 0424, 93826 77442, 99411 49916.
தலச் சிறப்புகள்:
பசுவின் வடிவில் கபில முனிவர் சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்ற தலம்.

தேனுபுரீஸ்வரர் மிகச் சிறிய திருவுருவம் தாங்கி அருள் புரிகிறார். அம்பிகையின் திருநாமம் தேனுகாம்பாள்.

ஸ்ரீவள்ளி மற்றும் தெய்வயானை அம்மையாருடன் முருகக் கடவுள் பேரருள் புரிந்தருளும் அற்புதத் தலம்.
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் இரண்டு.

Dhenupureeswarar temple -madambakkam
Dhenupureeswarar temple -madambakkam