Tuesday, December 25, 2018

திருவொற்றியூர்:

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: சென்னை

திருக்கோயில்: அருள்மிகு படம்பக்கநாதர் (தியாகராஜ சுவாமி) திருக்கோயில்

தல வகை: சிவத் தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர் ,  திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்:

சென்னையில் பிரசித்தி பெற்ற தலமாக விளங்குவது திருஒற்றியூர், தேவார மூவராலும் பாடல் பெற்ற திருத்தலம், 63 நாயன்மார்களுள் கலிய நாயனாரின் முத்தித் தலம், பன்னிரு திருமுறை ஆசிரியர்களுள் பட்டினத்தாரின் முத்தித் தலம், சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கும் சங்கிலி நாச்சியாருக்கும் திருமண நிகழ்வு நடந்தேறிய புண்ணியத் தலம், ஆலய வளாகத்திலுள்ள மகிழ மரத்திற்கு அருகிலேயே சுந்தரனார் 'உன்னைப் பிரியேன்' என்று வாக்களித்துச் சங்கிலியாரின் திருக்கரம் பற்றினார். ஆதிப் பரம்பொருளான சிவமூர்த்தி இத்தலத்தில் 'ஆதிபுரீஸ்வரர்; படம்பக்கநாதர்; தியாகராஜ சுவாமி' எனும் பல்வேறு திருநாமங்களில் பிரமாண்ட திருமேனியுடன் எழுந்தருளி இருக்கின்றார், வடிவுடை அம்மை என்று போற்றப் பெறும் அம்பிகை இத்தலத்தினில் மிகவும் பிரசித்தம், இவளின் திருமுகப் பொலிவினையும், பேரழகுத் திருத்தோற்றத்தினையும் தரிசிப்பது விளக்கவொண்ணா ஆன்மீக அனுபவத்தினை நல்கும் என்பது திண்ணம்.

எண்ணிறந்த திருச்சன்னிதிகளோடு அமைந்துள்ள மிக விசாலமான திருக்கோயில், ஆலயத்தினுள் நுழைந்ததும், மூலவர் திருச்சன்னிதிக்குப் பயணிக்கும் வழியில், நேரெதிரே மூன்று திருச்சன்னிதிகள் அமையப்பெற்றுள்ளன, அவற்றுள் நடுநாயகமாக நம் திருப்புகழ் தெய்வத்தின் திருச்சன்னிதி, ஒரு திருமுகம் மற்றும் நான்கு திருக்கரங்களுடன், பின்புறம் மயிலுடன், சுமார் 5 அடி உயரத் திருமேனியில் வேலாயுதக் கடவுள் ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றான், அருணகிரியார் இம்மூர்த்திக்கென இரு திருப்பாடல்களை அருளிச் செய்துள்ளார்.

(Google Maps: Arulmigu Thiyagarajaswamy Temple, Sannathi Street, TS Gopal Nagar, Gopal Nagar, Tiruvottiyur, Chennai, Tamil Nadu 600019, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனதனன தான தனதனன தான
     தனதனன தான ...... தனதான

கரியமுகில் போலும் இருள்அளக பார
     கயல்பொருத வேலின் ...... விழிமாதர்

கலவிகளில் மூழ்கி ம்ருகமத படீர
     களபமுலை தோய ...... அணையூடே

விரகம்அதுவான மதனகலை ஓது
     வெறியனென நாளும் ...... உலகோர்கள்

விதரணமதான வகைநகைகள் கூறி
     விடுவதன்முன் ஞான ...... அருள்தாராய்

அரிபிரமர் தேவர் முனிவர் சிவயோகர்
     அவர்கள் புகழோத ...... புவிமீதே

அதிக நடராஜர் பரவுகுரு ராஜ
     அமரர்குல நேச ...... குமரேசா

சிரகர கபாலர் அரிவையொரு பாகர்
     திகழ்கநக மேனி ...... உடையாளர்

திருவளரும் ஆதி புரியதனில் மேவும்    
    ஜெயமுருக தேவர் ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தனதத்தன தானதன தனதத்தன தானதன
     தனதத்தன தானதன ...... தனதானா

சொருபப் பிரகாச விசுவருபப் பிரமாகநிச
     சுக விப்பிர தேசரச ...... சுபமாயா

துலியப் பிரகாசமத சொலியற்ற ரசா சவித
     தொகைவிக்ரம மாதர் வயிறிடையூறு

கருவிற் பிறவாதபடி உருவிற் பிரமோத!அடி
     களை எத்திடிராவகை ...... அதின் மீறிக்

கருணைப் பிரகாச உனதருள் உற்றிடஆசில்சிவ
     கதிபெற்றிடர் ஆனவையை ...... ஒழிவேனோ

குருகுக்குட வாரகொடி செருஉக்கிர ஆதபயில்
     பிடிகைத்தல ஆதிஅரி ...... மருகோனே

குமரப் பிரதாபகுக சிவசுப்பிர மாமணிய
     குணமுட்டர் அவாஅசுரர் ...... குலகாலா

திருவொற்றி உறாமருவு நகர்ஒற்றியுர் வாரிதிரை
     அருகுற்றிடும் ஆதிசிவன் அருள்பாலா

திகழ்உற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்கள்
     இதயத்திடமே மருவு ...... பெருமாளே.

(2019 ஜூலை மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

2 comments: