Thursday, December 27, 2018

சேயூர் (செய்யூர், வளவாபுரி):

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: காஞ்சிபுரம் 

திருக்கோயில்: அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்

தல வகை: முருகன் திருக்கோயில்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக்குறிப்புகள்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மதுராந்தகத்திலிருந்து 26 கி.மீ தொலைவிலும், மேல்மருவத்தூரிலிருந்து 23 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து சுமார் 100 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது செய்யூர், ஆதியில் இத்தலம் 'வளவாபுரி' என்றே அறியப்பட்டு வந்துள்ளது, அருணகிரிப் பெருமானும் 'வளவாபுரி வாழ் மயில்வாகனப் பெருமாளே' என்று இப்பெயரினைக் கொண்டே போற்றியுள்ளார்.  

மூலக் கருவறையில் திருப்புகழ் தெய்வம் 'நான்கு திருக்கரங்களோடு கூடிய கம்பீரமான நின்ற திருக்கோலத்தில், வள்ளி தெய்வயானை தேவியரும் உடனிருக்க ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றான், வெளிப்பிரகாரத்தில் அருணகிரிநாதர் சிறிய சன்னிதியொன்றில் எழுந்தருளி இருக்கின்றார்.

திருக்கோயிலைச் சுற்றி 27 நட்சத்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே ஒரு வேதாள கணம் எனும் கணக்கில் 27 வேதாளங்களுக்கான தனிச்சன்னிதி அமைக்கப் பெற்றுள்ளது. சிவகணங்களாக விளங்கும் இவ்வேதாளங்கள் சூர சம்ஹார யுத்தத்தில் முருகப் பெருமானுக்கு உடனிருந்துத் தொண்டாற்றும் பேறு பெற்றவர்களாவர், 'வேதாளகணம் புகழ் வேலவனை' என்று கந்தர் அனுபூதி பேசுகின்றது. அருணகிரிநாதர் இத்தலத்திற்கென ஒரு திருப்புகழ் திருப்பாடலை அருளியுள்ளார், அவசியம் தரிசித்துப் பயன்பெற வேண்டிய திருத்தலம்.

(Google Maps: Shri Kandasamy Temple, State Highway 115, Cheyur, Tamil Nadu, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனனாதன தானன தானன
     தனனாதன தானன தானன
          தனனாதன தானன தானன ...... தனதான

முகிலாமெனும் வார்குழலார் சிலை
     புருவார்கயல் வேல் விழியார் சசி
          முகவார் தரளாம்எனவே நகை...புரிமாதர்

முலை மால்இணை கோபுரமாம்என
     வடமாடிடவே கொடி நூலிடை
          முதுபாளித சேலை குலாவிய... மயில் போல்வார்

அகிசேரல்குலார் தொடை வாழையின்
     அழகார் கழலார் தர ஏய்தரு
          அழகார்கன நூபுரம்ஆடிட... நடைமேவி

அனமாமென யாரையும் மால்கொள
     விழியால் சுழலாவிடு பாவையர்
          அவர்பாயலிலே அடியேனுடல்... அழிவேனோ

ககனார் பதியோர்முறை கோவென
     இருள்கார் அசுரார்படை தூள்பட
          கடலேழ்கிரி நாகமும் நூறிட... விடும்வேலா

கமலாலய நாயகி வானவர்
     தொழும் ஈசுசுரனார் இடமேவிய
          கருணாகர ஞான பராபரை... அருள்பாலா

மகிழ்மாலதி நாவல் பலா!கமு 
     குடனாட நிலாமயில் கோகில
          மகிழ்நாடுறை மால்வளி நாயகி... மணவாளா

மதிமா முகவா அடியேனிரு
     வினை தூள் படவே அயிலேவிய
          வளவாபுரி வாழ் மயில்வாகன பெருமாளே

(2019 ஜனவரி மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)


No comments:

Post a Comment