(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: திருவள்ளூர்
திருக்கோயில்: அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத் தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்)
அமைவிடம் (செல்லும் வழி):
சென்னை கோயம்பேட்டிலிருந்து (10 கி.மீ) பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) செல்லும் வழியில் திருவேற்காடு அமைந்துள்ளது.
(Google Maps: Sri Vedapureeswarar Temple, Thiruverkadu, Tiruverkadu, Tamil Nadu, India)
திருப்பாடல் 2:
(Google Maps: Sri Vedapureeswarar Temple, Thiruverkadu, Tiruverkadu, Tamil Nadu, India)
தலக்குறிப்புகள்:
பிரசித்தி பெற்ற திருவேற்காடு கருமாரியம்மன் திருக்கோயிலிலிருந்து சுமார் 1 - 1/2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது வேதபுரீஸ்வரர் திருக்கோயில், ஞான சம்பந்த மூர்த்தியால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. அகத்தியர் அம்மையப்பரின் திருக்கல்யாண தரிசனம் பெற்று மகிழ்ந்த தலங்களுள் வேற்காடும் ஒன்று. முருகப் பெருமான் பூசித்த தலம், கந்தக் கடவுள் தன் திருக்கை வேலால் உருவாக்கிய அற்புத தீர்த்தத்தினை ஆலய வளாகத்தின் வெளியே தரிசிக்கலாம். நன்கு பராமரிக்கப் பெற்று வரும் ஆலயம்.
மூலக் கருவறையில் வேதபுரீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியிலும் அதன் பின்னே அம்மையப்பராய் உருவத் திருமேனியினிலும் எழுந்தருளி இருக்கின்றார். உமையன்னை பாலாம்பிகை எனும் திருநாமத்தில் தனிச்சன்னிதியில் எழுந்தருளி இருக்கின்றாள். உட்பிரகாரச் சுற்றின் பின்புறம், வலது புறத்தில் திருப்புகழ் தெய்வமான முருகப் பெருமான் பால சுப்ரமண்யராய், ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களோடு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான், முன்னே இம்மூர்த்தி பூசித்த சிறிய சிவலிங்கத் திருமேனியினையும் தரிசித்து மகிழலாம்.
அருணகிரியார் இம்மூர்த்திக்கென 'ஆலம் போலெழு', 'கார்ச்சார் குழலார்' எனும் இரு திருப்புகழ் திருப்பாடல்களை அருளியுள்ளார், மேலும் பிரகாரச் சுற்றில் சேக்கிழார் அடிகளும், அநபாயச் சோழனும் அருகருகே எழுந்தருளி இருக்கின்றனர், இங்குள்ள துர்க்கையின் திருக்கோலம் காண்பதற்கரியது, நின்ற திருக்கோலத்தில் அதி அற்புதமான புன்முறுவலோடு காட்சி தருகின்றாள். அவசியம் தரிசித்துப் பணிந்துப் பயன்பெற வேண்டிய திருத்தலம்,
(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தானந்தா தனதான தானந்தா தனதான
தானந்தா தனதான ...... தனதான
ஆலம்போலெழு நீல மேல்அங்காய் வரிகோல
மாளம்போர் செயும்மாய ...... விழியாலே
ஆரம்பால் தொடைசால ஆலும் கோபுரவார
ஆடம்பார் குவிநேய ...... முலையாலே
சாலம் தாழ்வுறும் மால ஏலங்கோர் பிடியாய
வேள்அங்கார் துடிநீப ...... இடையாலே
சாரம் சார்விலனாய் அநேகங்காய் எமன்மீறு
காலம்தான் ஒழிவேது ...... உரையாயோ
பாலம்பால் மணநாறு கால்அங்கேஇறிலாத
மாதம்பா தருசேய ...... வயலூரா
பாடம்பார் திரிசூல நீடந்தாகர வீர
பாசம்தா திருமாலின் ...... மருகோனே
வேல்அம்பார் குறமாது மேல்உம்பார் தருமாதும்
வீறங்கே இருபாலும் ...... உறவீறு
வேதந்தா அபிராம நாதந்தா அருள்பாவு
வேலங்காடுறை சீல ...... பெருமாளே.
தாத்தாதன தானன தானன
தாத்தாதன தானன தானன
தாத்தாதன தானன தானன ...... தனதான
கார்ச்சார் குழலார் விழியார்!அயி
லார்ப் பால் மொழியார் இடைநூல்!எழு
வார்ச்சார் இளநீர்முலை மாதர்கள் ...... மயலாலே
காழ்க் காதலதாம் மனமேமிக
வார்க் காமுகனாய் உறு சாதக
மாப்பாதகனாம் அடியேனைநின் ..... அருளாலே
பார்ப்பாயலையோ அடியாரொடு
சேர்ப்பாயலையோ உனதார்அருள்
கூர்ப்பாயலையோ உமையாள்தரு ...... குமரேசா
பார்ப் பாவலர்ஓது சொலால்முது
நீர்ப் பாரினில் மீறிய கீரரை
ஆர்ப்பாய்உனதாம் அருளால்ஓர்சொல் ...... அருள்வாயே
வார்ப்பேரருளே பொழி காரண
நேர்ப் பாவச காரணமாம் மத
ஏற்பாடிகளே அழிவேயுற ...... அறைகோப
வாக்காசிவ மாமதமேமிக
ஊக்காதிப யோகமதே உறு
மாத்தா சிவ பாலகுகா அடியர்கள் வாழ்வே
வேற்காடவல் வேடர்கள் மா!மக
ளார்க்கார்வ நன் மாமகிணா!திரு
வேற்காடுறை வேதபுரீசுரர் ...... தருசேயே
வேட்டார் மகவான் மகளானவள்
ஏட்டார்திரு மாமணவா பொனின்
நாட்டார்பெரு வாழ்வெனவே வரு ...... பெருமாளே.
(2020 நவம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment