(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: திருவள்ளூர்
திருக்கோயில்: அருள்மிகு மாசிலாமணீசுவரர் திருக்கோயில்
தல வகை: சிவத் தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சுந்தரர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
சென்னை ஆவடியிலிருந்து 7 கி.மீ தொலைவிலும், அம்பத்தூரிலிருந்து சுமார் 4.5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள தொண்டை நாட்டுத் திருத்தலம். சுந்தர மூர்த்தி சுவாமிகள், இரு கண்பார்வையும் இழந்த நிலையில் இத்தலத்திற்கு வருகை புரிந்து, (அகக்கண்களால் தரிசித்துவாறு) உள்ளத்தைக் கசிவிக்கும் திருப்பதிகமொன்றினை அருளிச் செய்துள்ளார். தொண்டைமானான் கட்டுவித்த திருக்கோயில், ஓரளவு விசாலமான ஆலய வளாகம்.
(1) தொண்டைமான் இப்பகுதி வழியே யானை மீது செல்லுகையில், முல்லைக்கொடிகளில் யானையின் கால்கள் சிக்கிக் கொள்ள, மன்னன் மேலிருந்தவாறே அதனை வெட்ட, அங்கிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வருகின்றது. அச்சமுறும் மன்னன் உடனிறங்கி அக்கொடிகளை விலக்க, சிவலிங்கத் திருமேனியொன்றின் திருமுடி அங்கு வெளிப்படக் கண்டு பதறுகின்றான். அபராதம் இழைத்தோமென்று இன்னுயிரைப் போக்க முனைய, இறைவர் அசரீரியாய் 'அன்பனே, வெட்டுப் பெற்றாலும் நாம் மாசிலா மணியாவோம்' என்றருள் புரிகின்றார்.
இவ்வற்புத நிகழ்வினை நம் சுந்தரனார் 10ஆம் திருப்பாடலில் அகச்சான்றாகப் பதிவு செய்து போற்றுகின்றார்,
சொல்லரும் புகழால் தொண்டைமான் களிற்றைச் சூழ்கொடி முல்லையால் கட்டிட்டு
எல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்டருளிய இறைவனே, என்றும்
நல்லவர் பரவுந் திருமுல்லைவாயில் நாதனே, நரைவிடை ஏறீ
பல்கலைப் பொருளே, படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே
(2) மாசிலாமணீஸ்வரப் பரம்பொருள் நெடிதுயர்ந்த பிரமாண்டமான திருமேனியோடு, திருமுடியில் வெட்டுப் பெற்ற வடுவுடனும் அற்புதத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார். ஆண்டு முழுவதுமே சந்தனக் காப்புடன் திருக்காட்சி தருகின்றார், ஆவுடைக்கு மட்டுமே அபிஷேகம். சித்திரை சதயமன்று மட்டுமே காப்பு நீங்கப் பெற்று, மீண்டும் புதிதாய்க் காப்பிடப் பெறுகின்றார்.
(3) நம் அம்மை கொடியிடை நாயகியாய், வார்த்தைகளால் விளக்கவொண்ணா அற்புதத் திருக்கோலத்தில் பிரத்யட்சமாய் எழுந்தருளி இருக்கின்றாள். பிறவிப் பயனை நல்கும் திருக்காட்சி, நேரில் தரிசிப்பது போன்றே உணரப் பெறுகின்றோம்.
சென்னை மீஞ்சூருக்கு அருகிலுள்ள மேலூர் திருவுடை நாயகியைக் காலையிலும், ஒற்றியூர் வடிவுடை அம்மையை மதியத்திலும், முல்லைவாயில் கொடியிடை நாயகியை மாலையிலும் தரிசிப்பது அம்மையின் திருவருளைப் பரிபூரணமாய்ப் பெற்றுத் தரவல்ல உத்தமமான மரபு.
(4) திருப்புகழ் தெய்வமான நம் கந்தப் பெருமான் இவ்வாலயத்தில் 4 இடங்களில் திருக்காட்சி தருகின்றான்,
துவாபர பாலகர்களுக்கு அருகாமையில் தேவியருடன் நின்ற திருக்கோலம்.
உட்பிரகாரச் சுற்றின் பின்புறம் ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களோடு கூடிய திருக்கோலம், அருகிலேயே பாலசுப்ரமண்யராய் மற்றொரு திருக்கோலம்.
உட்பிரகாரச் சுற்றின் முடிவில் நின்ற திருக்கோலம் - இம்மூர்த்தியின் நேரெதிரே வணங்கிய திருக்கோலத்தில் திருப்புகழ் மாமுனிவரான அருணகிரிப் பெருமான் எழுந்தருளி இருக்கின்றார்.
வெளிப்பிரகாரச் சுற்றில் தனிக்கோயில் போன்றதொரு அமைப்பில் திருப்புகழ் பெற்றுள்ள பிரதான மூர்த்தி ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களுடன், இரு தேவியரும் உடனிருக்க, நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். அற்புதத் திருக்காட்சி.
(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 3.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தனதய்ய தானன தானன
தனதய்ய தானன தானன
தனதய்ய தானன தானன ...... தனதான
அணிசெவ்வியார் திரை சூழ்புவி
தனநிவ்வியே கரையேறிட
அறிவில்லியாம் அடியேன்இடர் ...... அதுதீர
அருள் வல்லையோ நெடுநாளினம்
இருள் இல்லிலேயிடுமோ!உன
தருள் இல்லையோ இனமானவை ...... அறியேனே
குணவில்லதா மகமேரினை
அணி செல்வியாய் அருணாசல
குருவல்ல மாதவமேபெறு ...... குணசாத
குடில் இல்லமேதரு நாளெது
மொழிநல்ல யோகவரேபணி
குணவல்லவா சிவனேசிவ ...... குருநாதா
பணிகொள்ளி மாகண !பூதமொ
டமர்கள்ளி கானக நாடக
பரமெல்லியார் பரமேசுரி ...... தருகோவே
படரல்லி மாமலர் !பாணம
துடை வில்லி மாமதனார்அனை
பரிசெல்வியார் மருகா சுர ...... முருகேசா
மணமொல்லையாகி நகாகன
தனவல்லி மோகனமோடமர்
மகிழ்தில்லை மாநடமாடினர் ...... அருள்பாலா
மருமல்லி மாவன நீடிய
பொழில் மெல்லி காவன மாடமை
வடமுல்லைவாயிலில் மேவிய ...... பெருமாளே
தான தானன தானன தந்தன
தான தானன தானன தந்தன
தான தானன தானன தந்தன ...... தனதான
சோதி மாமதி போல்முகமுங் கிளர்
மேருலாவிய மாமுலையுங்கொடு
தூரவேவரும் ஆடவர் தங்கள்முன் ...... எதிராயே
சோலி பேசி முனாளில் இணங்கிய
மாதர் போல்இரு தோளில் விழுந்தொரு
சூதினால் வரவே மனை கொண்டவர் ...... உடன்மேவி
மோதியேகனி வாய்அதரந்தரு
நாளிலேபொருள் சூறைகள் கொண்டுபின்
மோனமாய்அவமே சில சண்டைகளுடன்ஏசி
மோசமேதரு தோதக வம்பியர்
மீதிலே மயலாகி மனந்தளர்
மோடனாகிய பாதகனுங் கதி ...... பெறுவேனோ
ஆதியேஎனும் வானவர் தம்!பகை
யான சூரனை மோதியரும் !பொடி
யாகவே மயிலேறி முனிந்திடு ...... நெடுவேலா
ஆயர் வாழ்பதி தோறும் உகந்துரல்
ஏறியேஉறி மீதளையும்!கள
வாகவேகொடு போதம் நுகர்ந்தவன் ...... மருகோனே
வாதினால்வரு காளியை வென்றிடும்
ஆதி நாயகர் வீறுதயங்குங் கை
வாரி ராசனுமே பணியுந்திரு ...... நடபாதர்
வாச மாமலரோனொடு செந்திரு
மார்பில் வீறிய மாயவனும்பணி
மாசிலாமணி ஈசர் மகிழ்ந்தருள் ...... பெருமாளே
திருப்பாடல் 3:
தய்யதன தான தந்தன
தய்யதன தான தந்தன
தய்யதன தான தந்தன ...... தனதான
மின்னிடை கலாப !தொங்கலொ
டன்னமயில் நாண விஞ்சிய
மெல்லியர் குழாம் இசைந்தொரு ...... தெருமீதே
மெள்ளவும்உலாவி இங்கித
சொல்குயில் குலாவி நண்பொடு
வில்லியல்புரூர கண்கணை ...... தொடுமோக
கன்னியர்கள் போல் இதம்பெறு
மின்னணி கலார கொங்கையர்
கண்ணியில் விழாமல்அன்பொடு ...... பதஞான
கண்ணியில் உளாக சுந்தர
பொன்னியல் பதாரமுங் கொடு
கண்ணுறு வராமல் இன்பமொடெனை ஆள்வாய்
சென்னியில் உடாடிளம்பிறை
வன்னியும்அராவு கொன்றையர்
செம்மணி குலாவும் எந்தையர் ...... குருநாதா
செம்முக இராவணன்தலை
விண்ணுறவில் வாளியுந்தொடு
தெய்விக பொனாழி வண்கையன் ...... மருகோனே
துன்னியெதிர் சூரர் மங்கிட
சண்முகம்அதாகி வன்கிரி
துள்ளிட வெலாயுதம் தனை ...... விடுவோனே
சொல்லு முனிவோர் தவம்புரி
முல்லை வடவாயில் வந்தருள்
துல்ய பரஞான உம்பர்கள் ...... பெருமாளே
No comments:
Post a Comment