(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: காஞ்சிபுரம்
திருக்கோயில்: அருள்மிகு பால சுப்ரமண்ய சுவாமி திருக்கோயில்
தல வகை: முருகன் திருக்கோயில்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
செங்கல்பட்டிலிருந்தும் காஞ்சிபுரத்திலிருந்தும் சுமார் 30 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது திருப்புகழ் தலமான உத்தரமேரூர். ஆலய வளாகத்திற்கு வெளியே திருக்குள தீர்த்தம் அமைந்துள்ளது. சற்றே விசாலமான திருக்கோயில், வெளிப் பிரகாரத்தில் சுவாமி ஐயப்பனின் சிறு சன்னிதியொன்றினைத் தவிர்த்துப் பிறிதொரு சன்னதிகளேதும் அமையப் பெறவில்லை. காசிப முனிவரின் தவத்தைக் காத்து அருள் புரியும் பொருட்டு இத்தல மூர்த்தி தன் திருக்கை வேலால் இரு அசுரர்களை சம்ஹாரம் புரிந்துள்ளான் என்று தல புராணம் அறிவிக்கின்றது.
மூலக் கருவறையில் திருப்புகழ் தெய்வமான நம் கந்தக் கடவுள் பாலசுப்பிரமண்யர் எனும் திருநாமத்தில், ஆறடி உயரத் திருமேனியோடு நின்ற திருக்கோலத்தில், ருத்ராக்ஷங்களையே திருமார்பில் மாலையாகவும்; முப்புரி நூலாகவும் கொண்டு, சிவபூஜை புரியும் நிலையில், சிவஞானமே ஒரு திருவடிவாய் ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றான். அறுமுக தெய்வம் பூசித்த சிவலிங்க மூர்த்தங்களைக் கருவறையினுள் வலப்புறத்தில் தரிசித்து மகிழலாம்.
சிவகுருநாதனின் வலது திருக்கரம் சற்றே வலப்புறமாகச் சாய்ந்த நிலையில் 'சிவமே பரம்' என்று சுட்டும் விதமாய் அமைந்துள்ளது, காண்பதற்கரிய திருக்காட்சி. அருணகிரிப் பெருமான் இம்மூர்த்திக்கென 4 திருப்பாடல்களை அருளியுள்ளார், தில்லை மூவாயிரம் அந்தணர்களைப் போன்று இத்தலத்தில் 1200 மறையோர்கள் சிறப்புற்று விளங்கியதாக அருணகிரியார் பதிவு செய்கின்றார்.
முருகப் பெருமான் திருக்கோயிலுக்கு மிகஅருகில் பிரசித்தி பெற்ற சுந்தர வரதராஜப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது, மூன்று தளங்களாக அமையப் பெற்றுள்ள இத்திருக்கோயிலில் ஸ்ரீமன் நாராயண மூர்த்தி 9 திருக்கோலங்களில் அதி அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றார். ஒரு சிறு சிவாலயத்தையும் இத்தலத்தில் தரிசித்து மகிழலாம்.
(Google Maps: Murugan Temple, Uthiramerur, Tamil Nadu, India)
(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 4.(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தனன தனன தனதான தனன தனன தனதான
தனன தனன தனதான ...... தனதான
சுருதி மறைகள் இருநாலு திசையில் அதிபர் முநிவோர்கள்
துகளில் இருடி எழுபேர்கள் ...... சுடர்மூவர்
சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர்
தொலைவில் உடுவின் உலகோர்கள் ...... மறையோர்கள்
அரிய சமயம் ஒருகோடி அமரர் சரணர் சதகோடி
அரியும்அயனும் ஒருகோடி ...... இவர்கூடி
அறிய அறிய அறியாத அடிகள் அறிய அடியேனும்
அறிவுள் அறியும் அறிவூற ...... அருள்வாயே
வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியும் அழிவாக
மகர சலதி அளறாக ...... முதுசூரும்
மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக
மவுலி சிதறி இரைதேடி ...... வருநாய்கள்
நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிகள்அலைமோத
நமனும் வெருவி அடிபேண ...... மயிலேறி
நளின உபய கரவேலை முடுகு முருக வடமேரு
நகரில் உறையும் இமையோர்கள் ...... பெருமாளே.
திருப்பாடல் 2:
தான தந்த தான தந்த தான தந்த தான தந்த
தான தந்த தான தந்த ...... தனதான
தோலெலும்பு சீநரம்பு பீளை துன்று கோழை பொங்கு
சோரி பிண்டமாய் உருண்டு ...... வடிவான
தூல பங்க காயம் வம்பிலே சுமந்து நான்மெலிந்து
சோரும் இந்த நோயகன்று ...... துயராற
ஆலமுண்ட கோன்அகண்ட லோகமுண்ட மால் விரிஞ்சன்
ஆரணங்கள் ஆகமங்கள் ...... புகழ்தாளும்
ஆனனங்கள் மூவிரண்டும் ஆறிரண்டும் தோளும் அங்கை
ஆடல் வென்றி வேலுமென்று ...... நினைவேனோ
வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபிஅம்பை
வாணி பஞ்ச பாணி தந்த ...... முருகோனே
மாயைஐந்து வேகம்ஐந்து பூதம்ஐந்து நாதம்ஐந்து
வாழ்பெரும் சராசரங்கள் ...... உறைவோனே
வேலையன்பு கூர வந்த ஏகதந்த யானை கண்டு
வேடர் மங்கைஓடி அஞ்ச ...... அணைவோனே
வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவுகின்ற
மேரு மங்கை ஆளவந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 3:
தானனத் தனதான தானனத் தனதான
தானனத் தனதான ...... தனதான
நீள்புயல் குழல்மாதர் பேரினில் க்ருபையாகி
நேசமுற்றடியேனும் ...... நெறிகேடாய்
நேமியில் பொருள்தேடி ஓடிஎய்த்துளம் வாடி
நீதியில் சிவவாழ்வை ...... நினையாதே
பாழினுக்கிரையாய நாமம் வைத்தொருகோடி
பாடல்உற்றிடவே செய்திடு மோச
பாவிஎப்படி வாழ்வன் நேயர்கட்குளதான
பார்வை சற்றருளோடு ...... பணியாயோ
ஆழியில் துயில்வோனும் மாமலர்ப் பிரமாவும்
ஆகமப் பொருளோரும் ...... அனைவோரும்
ஆனை மத்தகவோனும் ஞானமுற்றியல்வோரும்
ஆயிரத்திருநூறு ...... மறையோரும்
வாழும்உத்தரமேருர் மேவி அற்புதமாக
வாகு சித்திர தோகை ...... மயிலேறி
மாறெனப் பொருசூரன் நீறெழப் பொரும்வேல
மான் மகட்குளனான ...... பெருமாளே.
திருப்பாடல் 4:
தான தந்தன தத்தா தத்தன
தான தந்தன தத்தா தத்தன
தான தந்தன தத்தா தத்தன ...... தனதான
மாதர் கொங்கையில் வித்தாரத்திரு
மார்பிலங்கியல் முத்தாரத்தினில்
வாசமென் குழலில் சேலைப் பொரும் ...... விழிவேலில்
மாமைஒன்று மலர்த்தாள் வைப்பினில்
வாகு வஞ்சியில் மெய்த் தாமத்தினில்
வானிளம் பிறையைப் போல் நெற்றியில் ...... மயலாகி
ஆதரம்கொடு கெட்டேஇப்படி
ஆசையின் கடலுக்கே மெத்தவும்
ஆகி நின்று தவித்தே நித்தலும் ...... அலைவேனோ
ஆறிரண்டு பணைத்தோள் அற்புத
ஆயிரம்கலை கத்தா !மத்திப
னாய் உழன்றலைகிற்பேனுக்கருள் ...... புரிவாயே
சாதனம்கொடு தத்தா !மெத்தென
வே நடந்து பொய் பித்தா உத்தரம்
ஏதெனும்படி தற்காய் நிற்பவர் ...... சபையூடே
தாழ்வில் சுந்தரனைத்தான் ஒற்றிகொள்
நீதி தந்திர நற்சார்புற்றருள்
சால நின்று சமர்த்தா வெற்றிகொள் ...... அரன்வாழ்வே
வேதமும் கிரியைச்சூழ் நித்தமும்
வேள்வியும் புவியில் தாபித்தருள்
வேர்விழும்படி செய்த்தேர் மெய்த்தமிழ் ...... மறையோர்வாழ்
மேரு மங்கையில் அத்தா வித்தக
வேலொடும் படை குத்தா ஒற்றிய
வேடர் மங்கைகொள் சித்தா பத்தர்கள் ...... பெருமாளே.
No comments:
Post a Comment