Thursday, December 27, 2018

இளையனார் வேலூர்

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: காஞ்சிபுரம்

திருக்கோயில்: அருள்மிகு பாலசுப்ரமண்யர் திருக்கோயில்

தல வகை: முருகன் திருக்கோயில்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக்குறிப்புகள்:

காஞ்சிபுர மாவட்டத்தில், காஞ்சிபுரத்திலிருந்து 24 கி.மீ தொலைவிலும், உத்திரமேரூரிலிருந்து 19 கி.மீ தூரத்திலும், பயணப் பாதையின் இருமருங்கிலும் பச்சைப் பசேலென்று வயல் வெளிகளால் சூழப்பட்டு, நகரத்தின் ஆரவாரத்திலிருந்து முற்றிலுமாய் விலகியதொரு ஏகாந்தச் சூழலில் அமையப் பெற்றுள்ளது இளையனார் வேலூர்.

காசிப முனிவரின் வேள்வியினைக் காக்கும் பொருட்டு 'மலையன், மாகரன்' எனும் இரு அரக்கர்களை முருகப் பெருமான் சம்ஹாரம் புரிந்த தலம் இதுவென்றுத் தல புராணம் அறிவிக்கின்றது. 'ஞான சித்தர் சாமிநாத சுவாமிகள்' என்பார் இத்தல முருகப் பெருமானைப் பன்னெடுங்காலம் பூசித்து எண்ணிறந்த திருப்பணிகளையும் இந்த ஆலயத்திற்குப் புரிந்து வந்துள்ளார். இப்புண்ணிய சீலரின் ஜீவசமாதிச் சன்னிதியினை ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் தரிசிக்கலாம்.

மூலக் கருவறையில் அறுமுக தெய்வம் ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களோடு 'பால சுப்பிரமணியர்' எனும் திருநாமம் தாங்கி ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றான். வள்ளி; தெய்வயானை இரு தேவியருமாய்ச் சேர்ந்த 'கஜவள்ளி தேவி' தனிச்சன்னிதியில் எழுந்தருளி இருக்கின்றாள். அருணகிரிநாதர் இத்தலத்திற்கென இரு திருப்புகழ் திருப்பாடல்களை அருளியுள்ளார், அவசியம் தரிசித்துப் பயன்பெற வேண்டிய திருத்தலம்.

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனன தாத்தன தானா தானன
    தனன தாத்தன தானா தானன ...... தந்ததான

அதிகராய்ப் பொருள்ஈவார் நேர்படில்
     ரசனை காட்டிகள்ஈயார் கூடினும்
          அகலஓட்டிகள் மாயா ரூபிகள் ...... நண்புபோலே

அசடர் ஆக்கிகள் மார்மேலேபடு
     முலைகள் காட்டிகள் கூசாதே விழும்
          அழகு காட்டிகள் யாரோடாகிலும் ...... அன்புபோலே

சதிரதாய்த் திரி ஓயா வேசிகள்
     கருணை நோக்கமிலா மாபாவிகள்
          தரும் உபேட்சை செய் தோஷா தோஷிகள் ...... நம்பொணாத

சரச வார்த்தையினாலே வாதுசெய்
     விரகமாக்கி விடா மூதேவிகள்
          தகைமை நீத்துனதாளே சேர்வதும் ...... எந்தநாளோ

மதுரை நாட்டினிலே வாழ்வாகிய
     அருகர் வாக்கினிலே சார்வாகிய
          வழுதிமேல் திருநீறே பூசி நிமிர்ந்து கூனும்

மருவு மாற்றெதிர் வீறேடேறிட
     அழகி போற்றிய மாறாலாகிய
          மகிமையால் சமண் வேரோடே கெட ...... வென்ற கோவே

புதிய மாக்கனி வீழ் தேனூறல்கள்
     பகல்இராத்திரி ஓயா ஆலைகள்
          புரள மேற்செல ஊரூர் பாய அணைந்துபோதும்

புகழினால் கடல் சூழ்பார் மீதினில்
     அளகை போல் பல வாழ்வால் வீறிய
          புலவர் போற்றிய வேலூர் மேவிய ...... தம்பிரானே.

திருப்பாடல் 2:
தானான தந்த தந்த தானான தந்த தந்த
     தானான தந்த தந்த ...... தனதான

சேல் ஆலமொன்று செங்கண் வேலாலும் வென்று மைந்தர்
     சீர்வாழ்வு சிந்தை பொன்ற ...... முதல்நாடித்

தேன்மேவும் செஞ்சொல்இன்சொல் தானோதி வந்தணைந்து
     தீராத துன்ப இன்பம் ...... உறுமாதர்

கோலாகலங்கள் கண்டு மாலாகி நிந்தன்அன்பு 
     கூராமல் மங்கி அங்கம் ...... அழியாதே

கோள்கோடி பொன்ற வென்று நாள்தோறும் நின்றியங்கு
     கூர் வாய்மை கொண்டிறைஞ்ச ...... அருள்தாராய்

மாலால் உழன்றணங்கை ஆர்மாமதன் கரும்பின்
     வாகோடழிந்தொடுங்க ...... முதல் நாடி

வாழ்வான கந்த முந்த மாறாகி வந்தடர்ந்த
     மாசூரர் குன்ற வென்றி ...... மயிலேறீ

மேலாகும் ஒன்றமைந்த மேல்நாடர் நின்றிரங்க
     வேலாலெறிந்து குன்றை ...... மலைவோனே

வேய்போலவும்திரண்ட தோள்மாதர் வந்திறைஞ்சு
     வேலூர் விளங்க வந்த ...... பெருமாளே.


(2019 பிப்ரவரி மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை) 




No comments:

Post a Comment