(காப்பு - விநாயகர் வணக்கத் திருப்பாடல்)
நெஞ்சக்கன கல்லு நெகிழ்ந்துருகத்
தஞ்சத்தருள் சண்முகனுக்கியல் சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்
நெஞ்சக்கன கல்லு நெகிழ்ந்துருகத்
தஞ்சத்தருள் சண்முகனுக்கியல் சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்
(திருப்பாடல் 1)
ஆடும் பரிவேல் அணிசேவல்எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவில்
சாடுந் தனியானைச் சகோதரனே
(திருப்பாடல் 2)
உல்லாச நிராகுல, யோக இதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ?
எல்லாம்அற என்னை இழந்த நலம்
சொல்லாய், முருகா, சுர பூபதியே
(திருப்பாடல் 3)
வானோ, புனல் பார் கனல் மாருதமோ
ஞானோதயமோ, நவில் நான்மறையோ
யானோ மனமோ, எனையாண்ட இடந்
தானோ? பொருளாவது சண்முகனே
(திருப்பாடல் 4)
வளைபட்ட கைம்மாதொடு மக்கள்எனும்
தளைபட்டழியத் தகுமோ தகுமோ?
கிளைபட்டெழு சூர் உரமுங் கிரியும்
தொளை பட்டுருவத் தொடு வேலவனே
(திருப்பாடல் 5)
மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகம்ஆறும் மொழிந்தொழிந்திலனே
அகம் மாடை மடந்தையர் என்றயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே
(திருப்பாடல் 6)
திணியான மனோ சிலை மீதுனதாள்
அணியார் அரவிந்தம் அரும்புமதோ?
.. பணியா? என வள்ளி பதம்பணியும்
தணியா, அதிமோக தயாபரனே
(திருப்பாடல் 7)
கெடுவாய் மனனே கதிகேள், !கரவா
திடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே
(திருப்பாடல் 8)
அமரும் பதி கேள் அகமாம் எனும்இப்
பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா
குமரன், கிரிராச குமாரி மகன்
சமரம் பெரு தானவ நாசகனே
(திருப்பாடல் 9)
மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசற் படும் பரிசென்றொழிவேன்?
தட்டூடற வேல் சயிலத்தெறியும்
நிட்டூர நிராகுல நிர்பயனே
(திருப்பாடல் 10)
கார் மாமிசை காலன் வரில், கலபத்
தேர்மா மிசைவந்து எதிரப் படுவாய்
தார் மார்ப, வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத்தொடு வேலவனே
(திருப்பாடல் 11)
கூகாவென என்கிளை கூடி அழப்
போகா வகை மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ, நாலு கவித்
தியாகா, சுரலோக சிகாமணியே
(திருப்பாடல் 12)
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மாஇரு சொல்அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே
(திருப்பாடல் 13)
முருகன், தனிவேல் முனி, நம் !குருவென்
றருள் கொண்டறியார் அறியும் தரமோ
உருவன்(று) அருவன்(று) உளதன்(று), இலதன்(று),
இருளன்(று), ஒளிஅன்றென நின்றதுவே
(திருப்பாடல் 14)
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்!பெற்
றுய்வாய் மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே
(திருப்பாடல் 15)
முருகன் குமரன் குகன் என்று !மொழிந்
துருகுஞ் செயல் தந்துணர்வென்றெருள்வாய்
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ, எண்குண பஞ்சரனே
(திருப்பாடல் 16)
பேராசை எனும் பிணியில் !பிணிபட்
டோரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா, முதுசூர் பட வேல்எறியும்
சூரா, சுர லோக துரந்தரனே
(திருப்பாடல் 17)
யாம் ஓதிய கல்வியும், எம்அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததனால்
பூமேல் மயல்போய் அறம் மெய்ப்புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே
(திருப்பாடல் 18)
உதியா மரியா உணரா மறவா
விதிமால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா, !அமரா
பதி காவல, சூர பயங்கரனே
(திருப்பாடல் 19)
வடிவுந் தனமும் மனமுங் குணமும்
குடியுங் குலமும் குடி போகியவா
அடிஅந்தம் இலா அயில்வேல் அரசே
மிடி என்றொரு பாவி வெளிப்படினே
(திருப்பாடல் 20)
அரிதாகிய மெய்ப் பொருளுக்கடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
புரிதாரக, நாக புரந்தரனே
(திருப்பாடல் 21)
கருதா மறவா நெறிகாண எனக்கு
இருதாள் வனசம் தர என்றிசைவாய்
வரதா முருகா மயில் வாகனனே
விரதா, சுர சூர விபாடணனே
(திருப்பாடல் 22)
காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி, மேருவையே
(திருப்பாடல் 23)
அடியைக் குறியாதறியாமையினால்
முடியக் கெடவோ? முறையோ முறையோ?
வடிவிக்ரம வேல் மகிபா, குறமின்
கொடியைப் புணருங் குணபூதரனே
(திருப்பாடல் 24)
கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ
சூர்வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல, புரந்தர பூபதியே
(திருப்பாடல் 25)
மெய்யே என வெவ்வினை வாழ்வை !உகந்
தையோ அடியேன் அலையத் தகுமோ?
கையோ அயிலோ கழலோ, முழுதுஞ்
செய்யோய், மயில் ஏறிய சேவகனே
(திருப்பாடல் 26)
ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத, மன
அதீதா சுரலோக சிகாமணியே
(திருப்பாடல் 27)
மின்னேநிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கிதுவோ?
பொன்னே மணியே பொருளே அருளே
மன்னே, மயில் ஏறிய வானவனே
(திருப்பாடல் 28)
ஆனா அமுதே, அயில்வேல் அரசே
ஞானாகரனே நவிலத் தகுமோ?
யான்ஆகிய என்னை விழுங்கி, வெறுந்
தானாய் நிலை நின்றது தற்பரமே
(திருப்பாடல் 29)
இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையுஞ் சுடர் வேலவனே
(திருப்பாடல் 30)
செவ்வான் உருவில் திகழ் வேலவன் !அன்
றொவ்வாததென உணர்வித்தது தான்
அவ்வாறறிவார் அறிகின்றதலால்
எவ்வாறொருவர்க்(கு) இசைவிப்பதுவே
(திருப்பாடல் 31)
பாழ்வாழ்வு எனும்இப் படுமாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ?
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே
(திருப்பாடல் 32)
கலையே பதறிக் கதறித் !தலையூ
டலையே படுமாறதுவாய் விடவோ?
கொலையே புரி வேடர் குலப்பிடி தோய்
மலையே, மலை கூறிடு வாகையனே
(திருப்பாடல் 33)
சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்று விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா முருகா கருணாகரனே
(திருப்பாடல் 34)
சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல, சண்முகனே
கங்காநதி பால, க்ருபாகரனே
(திருப்பாடல் 35)
விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழல் என்றருள்வாய்?
மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா, சுர பூபதியே
(திருப்பாடல் 36)
நாதா குமரா நம என்றரனார்
ஓதாய் என 'ஓதியதெப் பொருள் தான்?'
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா, குறமின் பத சேகரனே
(திருப்பாடல் 37)
கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே
(திருப்பாடல் 38)
ஆதாளியை, ஒன்றறியேனை, அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கிறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே
(திருப்பாடல் 39)
மாவேழ் சனனம் கெட மாயைவிடா
மூவேடணை என்று முடிந்திடுமோ
கோவே, குறமின் கொடிதோள் புணரும்
தேவே, சிவ சங்கர தேசிகனே
(திருப்பாடல் 40)
வினைஓட விடுங் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ?
சுனையோடருவித் துறையோடு பசுந்
தினையோடிதணோடு திரிந்தவனே
(திருப்பாடல் 41)
சாகாதெனையே சரணங்களிலே
காகா, நமனார் கலகஞ் செயும்நாள்
வாகா, முருகா மயில் வாகனனே
யோகா, சிவ ஞான உபதேசிகனே
(திருப்பாடல் 42)
குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவற்றுலகோடுரை சிந்தையுமற்(று)
அறிவற்றறியாமையும் அற்றதுவே
(திருப்பாடல் 43)
தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினதன்பருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே
(திருப்பாடல் 44)
சாடும் தனிவேல் முருகன் சரணஞ்
சூடும் படி தந்தது சொல்லுமதோ?
வீடுஞ் - சுரர் மாமுடி - வேதமும் - வெங்
காடும் - புனமுங் கமழும் கழலே
(திருப்பாடல் 45)
கரவாகிய கல்வியுளார் கடை !சென்
றிரவா வகை மெய்ப்பொருள் ஈகுவையோ?
குரவா குமரா குலிசாயுத !குஞ்
சரவா சிவயோக தயாபரனே
(திருப்பாடல் 46)
எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்தெனையாள்
கந்தா கதிர் வேலவனே, உமையாள்
மைந்தா குமரா, மறை நாயகனே
(திருப்பாடல் 47)
ஆறாறையும் நீத்ததன் மேல் நிலையைப்
பேறா அடியேன், பெறுமாறுளதோ?
சீறாவரு சூர் சிதைவித்திமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே
(திருப்பாடல் 48)
அறிவொன்றற நின்று, அறிவார் அறிவில்
பிறிவொன்றற நின்ற பிரான் அலையோ?
செறிவொன்றற வந்து, இருளே சிதைய
வெறி வென்றவரோடுறும் வேலவனே
(திருப்பாடல் 49)
தன்னந் தனி நின்றது, தான் அறிய
இன்னம் ஒருவர்க்கிசைவிப்பதுவோ?
மின்னுங் கதிர்வேல் விகிர்தா, நினைவார்
கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே
(திருப்பாடல் 50)
மதிகெட்டறவாடி மயங்கி, அறக்
கதிகெட்டு, அவமே கெடவோ? - கடவேன்
நதி புத்திர, ஞான சுகாதிப, !அத்
திதி புத்திரர் வீறுஅடு சேவகனே
(திருப்பாடல் 51)
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
No comments:
Post a Comment