Thursday, March 23, 2017

கந்தர் அலங்காரம்:


(காப்பு - விநாயகர் வணக்கத் திருப்பாடல்)
அடலருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வடவருகிற் சென்று கண்டுகொண்டேன், வருவார் தலையிற்
தடபடெனப் படுகுட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக்கிளைய களிற்றினையே

(திருப்பாடல் 1)
பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத என்னை ப்ரபஞ்சமென்னும்
சேற்றைக் கழிய வழிவிட்ட வா, செஞ்சடாடவி மேல்
ஆற்றைப் - பணியை - இதழியைத் - தும்பையை - அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன், க்ருபாகரனே

(திருப்பாடல் 2)
அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீர், எரிமூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்கு வெங்கூற்றன் விடுங்கயிற்றால் 
கழுத்திற் சுருக்கிட்டிழுக்கும்அன்றோ கவி கற்கின்றதே

(திருப்பாடல் 3)
தேரணியிட்டுப் புரமெரித்தான் மகன் செங்கையில்வேற் 
கூரணியிட்(டு) - அணுவாகிக் கிரெளஞ்சங் குலைந்து - அரக்கர்
நேரணியிட்டு வளைந்த கடக நெளிந்தது - சூர்ப்
பேரணி கெட்டது, தேவந்த்ர லோகம் பிழைத்ததுவே

(திருப்பாடல் 4)
ஓரவொட்டார், ஒன்றை உன்னஒட்டார், மலரிட்டுனதாள்
சேரவொட்டார் ஐவர், செய்வதென் யான்? சென்று தேவர்உய்யச்
சோர நிட்டூரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக்
கூர கட்டாரியிட்டோர் இமைப்போதினிற் கொன்றவனே

(திருப்பாடல் 5)
திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற்பாவை திருமுலைப்பால்
அருந்திச், சரவணப் பூந்தொட்டிலேறி, அறுவர்கொங்கை
விரும்பிக், கடலழக் - குன்றழச் - சூரழ விம்மியழுங்
குருந்தைக், குறிஞ்சிக் கிழவன் என்றோதுங் குவலயமே

(திருப்பாடல் 6)
பெரும்பைம் புனத்தினுள் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்புங் குமரனை, மெய்யன்பினால் மெல்ல மெல்லஉள்ள
அரும்புந் தனிப் பரமானந்தத் தித்தித்தறிந்த அன்றே,
கரும்புந் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக் கைத்ததுவே

(திருப்பாடல் 7)
சளத்திற் பிணிபட்டசட்டு க்ரியைக்குள் தவிக்குமெந்தன் 
உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பாய், அவுணர் உரத்துதிரக்
குளத்திற் குதித்துக் - குளித்துக் - களித்துக் - குடித்து, வெற்றிக்
களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே

(திருப்பாடல் 8)
ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத்துச்சியின் மேல்
அளியில் விளைந்ததொர் ஆநந்தத் தேனை, அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பியவா, முகம்ஆறுடைத் தேசிகனே

(திருப்பாடல் 9)
தேனென்று பாகென்றுவமிக்கொணா மொழித் தெய்வ வள்ளி
கோன் அன்றெனக்(கு) உபதேசித்ததொன்றுண்டு, கூறவற்றோ,
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன்(று) அசரீரியன்று சரீரியன்றே

(திருப்பாடல் 10)
சொல்லுகைக்கில்லை என்(று) எல்லாம் இழந்து சும்மா இருக்கும்
எல்லையுள் செல்ல எனைவிட்டவா, இகல் வேலன், நல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் - கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற, மால்வரைத் தோள் அண்ணல் வல்லபமே

(திருப்பாடல் 11)
குசைநெகிழா வெற்றிவேலோன், அவுணர் குடர்குழம்பக்
கசையிடு வாசி விசை கொண்ட வாகனப் பீலியின் !கொத்
தசைபடு - கால் பட்டசைந்தது மேரு, அடியிட - எண்
திசைவரை தூள்பட்ட - அத்தூளின் வாரி திடர்பட்டதே

(திருப்பாடல் 12)
படைபட்ட வேலவன்பால் வந்த வாகைப் பதாகை என்னுந்
தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் - சலதி கிழிந்(து)
உடைபட்டதண்ட கடாகம் - உதிர்ந்ததுடுபடலம்
இடைபட்ட குன்றமும் மாமேரு வெற்பும் இடிபட்டவே

(திருப்பாடல் 13)
ஒருவரைப் பங்கில்உடையாள் குமாரனுடை மணிசேர்
திருவரைக் கிண்கிணி ஓசைபடத் - திடுக்கிட்டரக்கர்
வெருவரத் - திக்குச் செவிடு பட்(டு) -  எட்டு வெற்புங் கனகப்
பருவரைக் குன்றும் அதிர்ந்தன, தேவர் பயங்கெட்டதே

(திருப்பாடல் 14)
குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரிற் கொட்படைந்த
இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய், இரு நான்குவெற்பும்
அப்பாதியாய் விழ, மேருங் குலுங்க, விண்ணாரும்உய்யச்
சப்பாணி கொட்டிய கையாறிரண்டுடைச் சண்முகனே

(திருப்பாடல் 15)
தாவடியோட்டு மயிலிலும், தேவர் தலையிலும், என்
பாவடிஏட்டிலும் பட்டதன்றோ, படி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன் தன் சிற்றடியே

(திருப்பாடல் 16)
தடுங்கோள் மனத்தை, விடுங்கோள் வெகுளியைத், தானமென்றும்
இடுங்கோள், இருந்தபடி இருங்கோள், எழுபாரும் உய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றந் திறக்கத் தொளைக்க வைவேல்
விடுங் கோன்அருள் வந்து தானேஉமக்கு வெளிப்படுமே

(திருப்பாடல் 17)
வேதாகம சித்ர வேலாயுதன் வெட்சி பூத்த தண்டைப்
பாதார விந்தம் அரணாக, அல்லும் பகலும்இல்லாச்
சூதானதற்ற வெளிக்கே ஒளித்துச் சும்மாஇருக்கப்
போதாய் இனிமனமே, தெரியாதொரு பூதர்க்குமே

(திருப்பாடல் 18)
வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி, வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள், நுங்கட்கிங்ஙன்
வெய்யிற்கொதுங்க உதவா உடம்பின் வெறுநிழல் போற்
கையிற் பொருளும் உதவாது காணுங் கடைவழிக்கே

(திருப்பாடல் 19)
சொன்ன கிரெளஞ்ச கிரியூடுருவத் தொளைத்த வைவேல்
மன்ன, கடம்பின் மலர்மாலை மார்ப, மெளனத்தை உற்று
நின்னை உணர்ந்துணர்ந்(து) எல்லாம் ஒருங்கிய நிர்குணம் !பூண்
டென்னை மறந்திருந்தேன், இறந்தே விட்டதிவ்வுடம்பே

(திருப்பாடல் 20)
கோழிக் கொடியன் அடிபணியாமற் குவயலத்தே
வாழக் கருது மதியிலிகாள், உங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலி உண்ணவொட்டாது, உங்கள் அத்தமெல்லாம்
ஆழப் புதைத்து வைத்தால் வருமோ நும் அடிப்பிறகே

(திருப்பாடல் 21)
மரண ப்ரமாத(ம்) நமக்கில்லை, யாமென்றும் வாய்த்த துணை
கிரணக் கலாபியும் வேலுமுண்டே, கிண்கிணி முகுள
சரண ப்ரதாப, சசிதேவி மங்கல்ய !தந்துரக்ஷா
பரண க்ருபாகர, ஞானாகர சுர பாஸ்கரனே

(திருப்பாடல் 22)
மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழவைப்போன், வெய்ய வாரணம்போற்
கைதான் இருபதுடையான் தலைப்பத்துங் கத்தரிக்க
எய்தான் மருகன், உமையாள் பயந்த இலஞ்சியமே

(திருப்பாடல் 23)
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவனே, மறவேன் உனைநான்
ஐவர்க்கிடம் பெறக் கால்இரண்டோட்டி அதில்இரண்டு
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே

(திருப்பாடல் 24)
கின்னங் குறித்தடியேன் செவி நீஅன்று கேட்கச்சொன்ன
குன்னங் குறிச்சி வெளியாக்கி விட்டது, கோடுகுழல்
சின்னங் குறிக்க, குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை
முன்னங் குறிச்சியிற் சென்று கல்யாணம் முயன்றவனே

(திருப்பாடல் 25)
தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கி உன்னைத்
திண்டாட வெட்டி விழவிடுவேன், செந்தில் வேலனுக்குத்
தொண்டாகிய என்அவிரோத ஞானச் சுடர்வடிவாள்
கண்டாயடா அந்தகா, வந்து பார் சற்றென் கைக்கெட்டவே

(திருப்பாடல் 26)
நீலச் சிகண்டியில்ஏறும் பிரான், எந்த நேரத்திலுங்
கோலக் குறத்தியுடன் வருவான், குருநாதன் சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறிவார் சிவயோகிகளே
காலத்தை வென்றிருப்பார், மரிப்பார் வெறுங் கர்மிகளே

(திருப்பாடல் 27)
ஓலையுந் தூதருங் கண்டு திண்டாடல் ஒழித்தெனக்குக்
காலையு மாலையும் முன்னிற்குமே - கந்தவேள் மருங்கிற்
சேலையுங் - கட்டிய சீராவுங் - கையிற் சிவந்தசெச்சை
மாலையுஞ் - சேவற் பதாகையுந் - தோகையும் வாகையுமே

(திருப்பாடல் 28)
வேலே விளங்கு கையான் செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சி
மாலே கொள இங்ஙன் காண்பதல்லால், மனவாக்குச் !செய
லாலே அடைதற்கரிதாய் - அருவுருவாகி - ஒன்று
போலேயிருக்கும் பொருளை எவ்வாறு புகல்வதுவே

(திருப்பாடல் 29)
கடத்திற் குறத்தி பிரான் அருளால் கலங்காத சித்தத்
திடத்திற் புணையென யான் கடந்தேன், சித்ர மாதர்அல்குல்
படத்திற் - கழுத்திற் - பழுத்த செவ்வாயிற் - பணையில்உந்தித்
தடத்தில் - தனத்திற் கிடக்கும் வெங்காம சமுத்திரமே

(திருப்பாடல் 30)
பால் என்பது மொழி - பஞ்சென்பது பதம் - பாவையற்கண்
சேல் என்பதாகத் திரிகின்ற நீ, செந்திலோன் திருக்கை
வேல்என்கிலை - கொற்ற மயூரம் என்கிலை - வெட்சித் தண்டைக்
கால்என்கிலை, மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே

(திருப்பாடல் 31)
பொக்கக் குடிலிற் புகுதா வகை புண்டரீகத்தினுஞ்
செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள், சிந்துவெந்து
கொக்குத் தறிபட்டெறிபட்(டு) உதிரங் குமுகுமெனக்
கக்கக் கிரியுருவக் கதிர்வேல் தொட்ட காவலனே

(திருப்பாடல் 32)
கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்புடன் கிரியூடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேற்கந்தனே, துறந்தோர் உளத்தை
வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்குங் கண்ணார்க்(கு)
இளைத்துத் தவிக்கின்ற என்னை, எந்நாள் வந்து இரட்சிப்பையே

(திருப்பாடல் 33)
முடியாப் பிறவிக் கடலிற் புகார், முழுதுங் கெடுக்கு
மிடியாற் படியில் விதனப் படார், வெற்றிவேற் பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள், அவுணர் குலம்அடங்கப்
பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே

(திருப்பாடல் 34)
பொட்டாக வெற்பைப் பொருத கந்தா, தப்பிப் போனதொன்றற்(கு)
எட்டாத ஞானகலை தருவாய், இருங்காம விடாய்ப்
பட்டாருயிரைத் திருகிப் பருகிப் பசி தணிக்குங்
கட்டாரி வேல்விழியார் வலைக்கே மனங் கட்டுண்டதே

(திருப்பாடல் 35)
பத்தித் துறை இழிந்தாநந்த வாரி படிவதினால்
புத்தித் தரங்கந் தெளிவதென்றோ?, பொங்கு வெங்குருதி
மெத்திக் குதிகொள்ள வெஞ்சூரனை விட்ட சுட்டியிலே
குத்தித் தரங் கொண்டமராவதி கொண்ட கொற்றவனே

(திருப்பாடல் 36)
சுழித்தோடும் ஆற்றிற் பெருக்கானது செல்வம், துன்பம்இன்பங்
கழித்தோடுகின்றது எக்கால நெஞ்சே?, கரிக்கோட்டு முத்தைக்
கொழித்தோடு காவிரிச் செங்கோடன் என்கிலை, குன்றம்எட்டுங்
கிழித்தோடு வேல் என்கிலை, எங்ஙனே முத்தி கிட்டுவதே

(திருப்பாடல் 37)
கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக்கலவிக் கள்ளை
மொண்டுண்டயர்கினும் வேல் மறவேன், முது கூளித்திரள்
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக் கொட்டியாட வெஞ்சூர்க் கொன்ற ராவுத்தனே

(திருப்பாடல் 38)
நாளென் செயும், வினை தான்என் செயும், எனை நாடிவந்த
கோளென் செயும், கொடுங்கூற்றென் செயும், குமரேசர் இரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமும்
தோளுங் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே

(திருப்பாடல் 39)
உதித்தாங்குழல்வதுஞ் சாவதும் தீர்த்தெனை உன்னில்ஒன்றா
விதித்தாண்டருள் தருங் காலம்உண்டோ?, வெற்பு நட்டுரக
பதித்தாம்பு வாங்கி நின்றம்பரம் பம்பரம் பட்டுழல
மதித்தான் திருமருகா, மயிலேறிய மாணிக்கமே

(திருப்பாடல் 40)
சேல் பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில், தேங்கடம்பின்
மால் பட்டழிந்தது பூங்கொடியார் மனம், மாமயிலோன்
வேல் பட்டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்பும், அவன்
கால் பட்டழிந்த(து) இங்கென் தலைமேல் அயன் கையெழுத்தே

(திருப்பாடல் 41)
பாலே அனைய மொழியார்தம் இன்பத்தைப் பற்றிஎன்றும்
மாலே கொண்டுய்யும் வகையறியேன், மலர்த்தாள் தருவாய்
காலே மிகவுண்டு காலேஇலாத கணபணத்தின்
மேலே துயில்கொள்ளு மாலோன் மருக, செவ்வேலவனே

(திருப்பாடல் 42)
நிணங்காட்டுங் கொட்டிலை விட்டொரு வீடெய்தி நிற்க நிற்குங்
குணங்காட்டி ஆண்ட குருதேசிகன், அங்குறச் சிறுமான்
பணங்காட்(டு) அல்குற்குருகுங் குமரன் பதாம்புயத்தை
வணங்காத் தலை வந்திதெங்கே எனக்கிங்ஙன் வாய்த்ததுவே

(திருப்பாடல் 43)
கவியாற் கடலடைத்தோன் மருகோனைக், கணபணக் கட்
செவியாற் பணியணி கோமான் மகனைத், திறலரக்கர்
புவிஆர்ப்பெழத் தொட்ட போர்வேல் முருகனைப் போற்றிஅன்பாற்
குவியாக் கரங்கள் வந்தெங்கே எனக்கிங்ஙன் கூடியவே

(திருப்பாடல் 44)
தோலாற் சுவர்வைத்து - நாலாறு காலிற் சுமத்தி - இரு
காலால் எழுப்பி - வளை முதுகோட்டிக் - கைந்நாற்றி - !நரம்
பால் ஆர்க்கையிட்டுத் தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
வேலாற் கிரி தொளைத்தோன் இரு தாளன்றி வேறில்லையே

(திருப்பாடல் 45)
'ஒருபூதரும் அறியாத் தனி வீட்டில் உரை !உணர்வற்
றிரு பூத வீட்டில் இராமல்' என்றான் இரு கோட்டொரு கைப்
பொரு பூதரம் உரித்தேகாசமிட்ட புராந்தகற்குக்
குரு, பூத வேலவன், நிட்டூர சூர குலாந்தகனே

(திருப்பாடல் 46)
'நீயான ஞான விநோதந் தனை என்று நீஅருள்வாய்'
சேயான வேற்கந்தனே, செந்திலாய், சித்ர மாதர்அல்குல் 
தோயா உருகிப் பருகிப் பெருகித் துவளுமிந்த
மாயா விநோத மநோ துக்கமானது மாய்வதற்கே

(திருப்பாடல் 47)
பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித்திருக்கும் அமுது கண்டேன், செயல் மாண்டடங்கப்
புத்திக் கமலத்துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுரளும் பரமாநந்த சாகரத்தே

(திருப்பாடல் 48)
புத்தியை வாங்கிநின் பாதாம் புயத்திற் புகட்டி அன்பாய்
முத்தியை வாங்க அறிகின்றிலேன், முதுசூர் நடுங்கச்
சத்தியை வாங்கத் தரமோ, குவடு தவிடுபடக்
குத்திய காங்கேயனே - வினையேற்கென் குறித்தனையே?

(திருப்பாடல் 49)
சூரிற் கிரியிற் கதிர்வேல் எறிந்தவன் தொண்டர்குழாஞ்
சாரிற் கதியன்றி வேறிலை காண், தண்டு தாவடிபோய்த்
தேரிற் கரியிற் பரியில் திரிபவர் செல்வமெல்லாம்
நீரிற் பொறி என்றறியாத பாவி நெடுநெஞ்சமே

(திருப்பாடல் 50)
படிக்குந் திருப்புகழ் போற்றுவன், கூற்றுவன் பாசத்தினாற்
பிடிக்கும் பொழுது வந்தஞ்சல் என்பாய், பெரும் பாம்பினின்று
நடிக்கும் பிரான் மருகா, கொடுஞ் சூரன் நடுங்க வெற்பை
இடிக்குங் கலாபத் தனிமயிலேறும் இராவுத்தனே

(திருப்பாடல் 51)
மலையாறு கூறெழ வேல் வாங்கினானை வணங்கி அன்பின்
நிலையான மாதவஞ் செய்குமினோ, நும்மை நேடிவருந்
தொலையா வழிக்குப் பொதிசோறும் உற்ற துணையுங் கண்டீர்
இலையாயினும் வெந்ததேதாயினும் பகிர்ந்தேற்றவர்க்கே

(திருப்பாடல் 52)
சிகராத்ரி கூறிட்ட வேலுஞ் செஞ்சேவலுஞ் செந்தமிழாற்
பகரார்வம் ஈ பணி, பாச சங்க்ராம பணாமகுட
நிகராட்சம பட்ச பட்சி துரங்க, ந்ருப, குமரா
குகராட்சச, பட்ச விட்சோப, தீர குணதுங்கனே

(திருப்பாடல் 53)
வேடிச்சி கொங்கை விரும்புங் குமரனை மெய்யன்பினாற்
பாடிக் கசிந்(து) - உள்ள போதே கொடாதவர், பாதகத்தாற்
தேடிப் புதைத்துத் திருட்டிற் கொடுத்துத் திகைத்திளைத்து
வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே

(திருப்பாடல் 54)
சாகைக்கு மீண்டு பிறக்கைக்கும் அன்றித் தளர்ந்தவர்க்கொன்(று)
ஈகைக்கெனை விதித்தாய்இலையே, இலங்காபுரிக்குப்
போகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொளுந்த
வாகைச் சிலை வளைத்தோன் மருகா, மயில் வாகனனே

(திருப்பாடல் 55)
ஆங்காரமும் அடங்கார், ஒடுங்கார் பரமாநந்தத்தே
தேங்கார் நினைப்பு மறப்பும் அறார், தினைப் போதளவும்
ஓங்காரத்துள் ஒளிக்குள்ளே முருகன் உருவங் கண்டு
தூங்கார், தொழும்பு செய்யார், என்செய்வார் யம தூதருக்கே?

(திருப்பாடல் 56)
கிழியும் படி அடற் குன்றெறிந்தோன் கவி கேட்டுருகி
இழியுங் கவி கற்றிடாதிருப்பீர், எரிவாய் நரகக்
குழியுந் துயரும் விடாய்ப்படக், கூற்றுவனுார்க்குச் செல்லும்
வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே

(திருப்பாடல் 57)
பொருபிடியுங் களிறும் விளையாடும் புனச்சிறுமான்
தருபிடி காவல - சண்முகவா எனச் சாற்றி நித்தம்
இருபிடி சோறு கொண்டிட்டுண்டிரு, வினையோம் இறந்தால்
ஒருபிடி சாம்பருங் காணாது மாய உடம்பிதுவே

(திருப்பாடல் 58)
நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீலவள்ளி
முற்றாத் தனத்திற்கினிய பிரான், இக்கு முல்லையுடன்
பற்றாக்கையும் வெந்து சங்க்ராம வேளும் படவிழியாற்
செற்றார்க்கினியவன் - தேவேந்த்ர லோக சிகாமணியே

(திருப்பாடல் 59)
பொங்கார வேலையில் வேலைவிட்டோன் அருள்போல் உதவ
எங்காயினும் வரும் ஏற்பவர்க்கிட்ட(து), இடாமல் வைத்த
வங்காரமும் உங்கள் சிங்கார வீடு மடந்தையருஞ்
சங்காதமோ, கெடுவீர் உயிர் போம் அத்தனிவழிக்கே

(திருப்பாடல் 60)
சிந்திக்கிலேன், நின்று சேவிக்கிலேன், தண்டைச் சிற்றடியை
வந்திக்கிலேன், ஒன்றும் வாழ்த்துகிலேன், மயில் வாகனனைச்
சந்திக்கிலேன், பொய்யை நிந்திக்கிலேன், உண்மை சாதிக்கிலேன்
புந்திக் கிலேசமுங் காயக் கிலேசமும் போக்குதற்கே

(திருப்பாடல் 61)
வரையற்றவுணர் சிரமற்று வாரிதி வற்றச்செற்ற
புரையற்ற வேலவன் போதித்தவா, பஞ்ச பூதமும் அற்று
உரையற்றுணர்வற்(று), உடலற்றுயிரற்(று), உபாயமற்றுக்
கரையற்(று) இருளற்று எனதற்றிருக்கும் அக்காட்சியதே 

(திருப்பாடல் 62)
ஆலுக்கணிகலம் வெண்தலை மாலை, அகிலம்உண்ட
மாலுக்கணிகலந் தண்ணந் துழாய், மயிலேறும் ஐயன்
காலுக்கணிகலம் வானோர் முடியுங் கடம்புங், கையில்
வேலுக்கணிகலம் வேலையுஞ் சூரனும் மேருவுமே

(திருப்பாடல் 63)
பாதித் திருவுருப் பச்சென்றவர்க்குத் தன் பாவனையைப்
போதித்த நாதனைப் - போர் வேலனைச் - சென்று போற்றி உய்யச்
சோதித்த மெய்யன்பு பொய்யோ?, அழுது தொழுதுருகிச்
சாதித்த புத்தி வந்தெங்கே எனக்கிங்ஙன் சந்தித்ததே?

(திருப்பாடல் 64)
பட்டிக் கடாவில் வரும் அந்தகா, உனைப் பாரறிய
வெட்டிப் புறங்கண்டலாது விடேன், வெய்ய சூரனைப்போய்
முட்டிப் பொருத செவ்வேற் பெருமாள் திருமுன்பு நின்றேன்
கட்டிப் புறப்படடா, சத்தி வாள் என்றன் கையதுவே

(திருப்பாடல் 65)
வெட்டுங் கடாமிசைத் தோன்றும் வெங்கூற்றன் விடுங் கயிற்றாற்
கட்டும் பொழுது விடுவிக்க வேண்டுங், கராசலங்கள்
எட்டுங் குலகிரியெட்டும் விட்டோட, எட்டாத வெளி
மட்டும் புதைய விரிக்குங் கலாப மயூரத்தனே

(திருப்பாடல் 66)
நீர்க் குமிழிக்கு நிகரென்பர் யாக்கை, நில்லாது செல்வம்
பார்க்கும் இடத்தந்த மின்போலும் என்பர், பசித்துவந்தே
ஏற்கும் அவர்க்கிட என்னின் எங்கேனும் எழுந்திருப்பார்
வேற் குமரற்கன்பிலாதவர் ஞானம் மிகவும் நன்றே

(திருப்பாடல் 67)
பெறுதற்கரிய பிறவியைப் பெற்றுநின் சிற்றடியைக்
குறுகிப் பணிந்து பெறக் கற்றிலேன், மத கும்ப கம்பத்
தறுகண் சிறுகண் சங்க்ராம சயில, சரசவல்லி
இறுகத் தழுவுங் கடகாசல பன்னிரு புயனே

(திருப்பாடல் 68)
சாடுஞ் சமரத் தனிவேல் முருகன் சரணத்திலே
ஓடுங் கருத்தை இருத்த வல்லார்க்கு, உகம் போய்ச் சகம்போய்ப்
பாடுங் கவுரி பவுரி கொண்டாடப், பசுபதி !நின்
றாடும் பொழுது பரமாய் இருக்கும் அதீதத்திலே

(திருப்பாடல் 69)
தந்தைக்கு முன்னந் தனிஞான வாளொன்று சாதித்தருள்
கந்தச்சுவாமி எனைத் தேற்றிய பின்னர்க், காலன் வெம்பி
வந்து இப்பொழுதென்னை என்செய்யலாஞ், சத்தி வாள் ஒன்றினாற்
சிந்தத் துணிப்பன், தணிப்பருங் கோபத்ரி சூலத்தையே

(திருப்பாடல் 70)
விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள், முன்புசெய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலுஞ் செங்கோடன் மயூரமுமே

(திருப்பாடல் 71)
துருத்திஎனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றி முறித்(து)
அருத்தி உடம்பை ஒருக்கில் என்னாஞ், சிவயோகம் என்னுங்
குருத்தை அறிந்து முகம்ஆறுடைக் குருநாதன் சொன்ன
கருத்தை மனத்தில்இருத்துங் கண்டீர், முத்தி கைகண்டதே

(திருப்பாடல் 72)
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச், செஞ்சுடர்வேல்
வேந்தனைச், செந்தமிழ் நூல் விரித்தோனை, விளங்குவள்ளி
காந்தனைக், கந்தக் கடம்பனைக், கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவாதவர்க்கொரு தாழ்வில்லையே

(திருப்பாடல் 73)
போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும் உள்ளும்
வாக்கும் வடிவு முடிவும் இல்லாதொன்று வந்துவந்து
தாக்கு(ம்) - மநோலயந் தானே தரும் - எனைத் தன்வசத்தே
ஆக்கும், அறுமுகவா - சொல்லொணாதிந்த ஆனந்தமே

(திருப்பாடல் 74)
அராப்புனை வேணியன் சேய்அருள் வேண்டும், அவிழ்ந்த அன்பாற்
குராப்புனை தண்டையந் தாள்தொழல் வேண்டும், கொடிய ஐவர்
பராக்கறல் வேண்டும், மனமும் பதைப்பறல் வேண்டும், அன்றால்
இராப்பகலற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே

(திருப்பாடல் 75)
படிக்கின்றிலை பழநித் திருநாமம், படிப்பவர்தாள்
முடிக்கின்றிலை, முருகா என்கிலை, முசியாமல்இட்டு
மிடிக்கின்றிலை, பரமாநந்த மேற்கொள விம்மிவிம்மி
நடிக்கின்றிலை, நெஞ்சமே தஞ்சமேது நமக்கினியே

(திருப்பாடல் 76)
கோடாத வேதனுக்கு  யான்செய்த குற்றமென்? குன்றெறிந்த
தாடாளனே - தென்தணிகைக் குமர, நின் தண்டையந்தாள்
சூடாத சென்னியும் - நாடாத கண்ணுந் - தொழாத கையும்
பாடாத நாவும் எனக்கே தெரிந்து படைத்தனனே

(திருப்பாடல் 77)
சேல்வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரஞ் சேரஎண்ணி
மால்வாங்கி ஏங்கி மயங்காமல், வெள்ளி மலையெனவே
கால்வாங்கி நிற்குங் களிற்றான் கிழத்தி கழுத்திற்கட்டு
நூல் வாங்கிடாதன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்கு நெஞ்சே

(திருப்பாடல் 78)
கூர்கொண்ட வேலனைப் போற்றாமல் ஏற்றங் கொண்டாடுவிர்காள்
போர்கொண்ட காலன் உமைக்கொண்டு போம்அன்று, பூண்பனவுந்
தார்கொண்ட மாதரும் - மாளிகையும் - பணச் சாளிகையும் 
ஆர்கொண்டு போவர் ஐயோ, கெடுவீர் நும் அறிவின்மையே

(திருப்பாடல் 79)
பந்தாடு மங்கையர் செங்கயற் பார்வையிற் பட்டுழலுஞ்
சிந்தாகுலந் தனைத் தீர்த்தருள்வாய், செய்யவேல் முருகா
கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிக் குன்றில் நிற்குங்
கந்தா, இளங்குமரா, அமராவதி காவலனே

(திருப்பாடல் 80)
மாகத்தை முட்டி வரு நெடுங்கூற்றவன் வந்தால் - என்முன்னே
தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய், சுத்த நித்தமுத்தித்
த்யாகப் பொருப்பைத் - த்ரிபுராந்தகனைத் - த்ரியம்பகனைப்
பாகத்தில் வைக்கும் பரம கல்யாணி தன் பாலகனே

(திருப்பாடல் 81)
தாரா கணமெனுந் தாய்மார் அறுவர்தரு முலைப்பால்
ஆரா(து) உமை முலைப் பாலுண்ட பாலன் அரையிற் கட்டுஞ்
சீராவுங் - கையிற் சிறுவாளும் - வேலும் என் சிந்தையவே
வாராதகல் அந்தகா, வந்த போதுயிர் வாங்குவனே

(திருப்பாடல் 82)
தகட்டிற் சிவந்த கடம்பையும் நெஞ்சையுந் தாளிணைக்கே
புகட்டிப் பணியப் பணித்தருளாய், புண்டரீகன் அண்ட
முகட்டைப் பிளந்து வளர்ந்து - இந்த்ர லோகத்தை முட்ட வெட்டிப்
பகட்டிற் பொருதிட்ட நிட்டூர சூர பயங்கரனே

(திருப்பாடல் 83)
தேங்கிய அண்டத்திமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே
பூங்கழல் கட்டும் பெருமாள், கலாபப் புரவிமிசை
தாங்கி நடப்ப - முறிந்தது சூரன்தளம்,  தனிவேல்
வாங்கி அனுப்பிடக் குன்றங்கள் எட்டும் வழிவிட்டவே

(திருப்பாடல் 84)
மைவருங் கண்டத்தர் மைந்த கந்தா என்று வாழ்த்தும்இந்தக்
கைவருந் தொண்டன்றி மற்றறியேன், கற்ற கல்வியும் போய்ப்
பைவருங் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும்
ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன் அடைக்கலமே

(திருப்பாடல் 85)
காட்டிற் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின்
வீட்டிற் புகுதல் மிகஎளிதே, விழிநாசி வைத்து
மூட்டிக் கபால மூலாதார நேரண்ட மூச்சையுள்ளே
ஓட்டிப் பிடித்தெங்கும் ஒடாமற் சாதிக்கும் யோகிகளே

(திருப்பாடல் 86)
வேலாயுதன், சங்கு சக்ராயுதன் விரிஞ்சன் அறியாச்
சூலாயுதன் தந்த கந்தச்சுவாமி, சுடர்க் குடுமிக்
காலாயுதக் கொடியோன் அருளாய கவசமுண்டு, என்
பால் ஆயுதம் வருமோ யமனோடு பகைக்கினுமே

(திருப்பாடல் 87)
குமரா சரணஞ் சரணம் என்றண்டர் குழாந் துதிக்கும்
அமராவதியிற் பெருமாள் திருமுகம் ஆறுங்கண்ட
தமராகி வைகுந் தனியான ஞான தபோதனர்க்கிங்(கு)
எமராசன் விட்ட கடையேடு வந்தினி என்செயுமே

(திருப்பாடல் 88)
வணங்கித் துதிக்க அறியா மனிதருடன் இணங்கிக்
குணங்கெட்ட துட்டனை ஈடேற்றுவாய், கொடியுங் கழுகும்
பிணங்கத் - துணங்கை அலகை கொண்டாடப் - பிசிதர்தம் வாய்
நிணங்கக்க விக்ரம வேலாயுதந் தொட்ட நிர்மலனே

(திருப்பாடல் 89)
பங்கேருகன் எனைப் பட்டோலையில்இடப் பண்டுதளை
தங்காலில் இட்டது அறிந்திலனோ? தனி வேலெடுத்துப்
பொங்கோதம் வாய்விடப் பொன்னஞ் சிலம்பு புலம்பவரும்
எங்கோன் அறியின் - இனி நான்முகனுக்கிரு விலங்கே

(திருப்பாடல் 90)
மாலோன் மருகனை, மன்றாடி மைந்தனை, வானவர்க்கு
மேலான தேவனை, மெய்ஞ்ஞான தெய்வத்தை, மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டுதொழ
நாலாயிரங் கண் படைத்திலனே அந்த நான்முகனே

(திருப்பாடல் 91)
கருமான் மருகனைச், செம்மான் மகளைக் களவுகொண்டு
வரும் ஆகுலவனைச், சேவற்கைக் கோளனை, வானமுய்யப்
பொருமா வினைச்செற்ற போர்வேலனைக், கன்னிப் பூகமுடன்
தருமா மருவு செங்கோடனை வாழ்த்துகை சாலநன்றே

(திருப்பாடல் 92)
தொண்டர் கண்டண்டி மொண்டுண்டிருக்குஞ் சுத்த ஞானமெனுந்
தண்டையம் புண்டரிகந் தருவாய், சண்ட தண்ட வெஞ்சூர்
மண்டலங் கொண்டு - பண்டண்டர் அண்டங் கொண்டு - மண்டிமிண்டக்
கண்டுருண்டண்டர் விண்டோடாமல் வேல்தொட்ட காவலனே

(திருப்பாடல் 93)
மண்கமழ் உந்தித் திருமால் வலம்புரியோசை அந்த
விண்கமழ் சோலையும் வாவியுங் கேட்டது, வேலெடுத்துத்
திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருவரையிற்
கிண்கிணி ஓசை பதினாலு உலகமுங் கேட்டதுவே

(திருப்பாடல் 94)
தெள்ளிய ஏனலிற் கிள்ளையைக் - கள்ளச் சிறுமியெனும்
வள்ளியை வேட்டவன் தாள்வேட்டிலை, சிறு வள்ளை தள்ளித்
துள்ளிய கெண்டையைத் - தொண்டையைத் - தோதகச் சொல்லை - நல்ல
வெள்ளிய நித்தில வித்தார மூரலை வேட்டநெஞ்சே

(திருப்பாடல் 95)
யான்-தான் எனுஞ்சொல் இரண்டுங் கெட்டாலன்றி யாவருக்குந்
தோன்றாது சத்தியம், தொல்லைப் பெருநிலஞ் சூகரமாய்க்
கீன்றான் மருகன் முருகன் க்ருபாகரன் கேள்வியினாற்
சான்றாரும் அற்ற தனிவெளிக்கே வந்து சந்திப்பதே

(திருப்பாடல் 96)
தடக்கொற்ற வேள்மயிலே - இடர் தீரத் தனிவிடில் நீ
வடக்கிற் கிரிக்கப்புறத்தும், நின் தோகையின் வட்டமிட்டுக்
கடற்குப்புறத்துங், கதிர்க்கப்புறத்துங், கனகசக்ரத்
திடர்க்கப்புறத்துந், திசைக்கப்புறத்துந் திரிகுவையே

(திருப்பாடல் 97)
சேலில் திகழ்வயற் செங்கோடை வெற்பன் செழுங்கலபி
ஆலித்தநந்தன் பணாமுடி தாக்க, அதிர்ந்ததிர்ந்து
காலிற் கிடப்பன மாணிக்க ராசியுங், காசினியைப்
பாலிக்கு மாயனுஞ் - சக்ராயுதமும்- பணிலமுமே

(திருப்பாடல் 98)
கதிதனை ஒன்றையுங் காண்கின்றிலேன் கந்தவேல் முருகா
நதிதனை அன்னபொய் வாழ்விலன், பாய்நரம்பாற் பொதிந்த
பொதிதனையுங் கொண்டு திண்டாடுமாறெனைப் போதவிட்ட
விதிதனை நொந்து நொந்திங்கே என்றன் மனம் வேகின்றதே

(திருப்பாடல் 99)
காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருளாய்
தூவிக் குலமயில் வாகனனே, துணை ஏதுமின்றித்
தாவிப் படரக் கொழுகொம்பிலாத தனிக்கொடிபோல்
பாவித் தனிமனந் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே

(திருப்பாடல் 100)
இடுதலைச் சற்றுங் கருதேனைப்- போதமிலேனை - அன்பாற்
கெடுதல்இலாத் தொண்டரிற் கூட்டியவா, கிரெளஞ்ச வெற்பை
அடுதலைச் சாதித்த வேலோன் பிறவியற - இச்சிறை
விடுதலைப் பட்டது, விட்டது பாச வினைவிலங்கே

(திருப்பாடல் 101)
சலங்காணும் வேந்தர் தமக்கும் அஞ்சார், யமன் சண்டைக்கஞ்சார்
துலங்கா நரகக் குழிஅணுகார், துட்ட நோய்அணுகார்
கலங்கார் புலிக்குங் - கரடிக்கும் - யானைக்குங், கந்தன் நன்னூல்
அலங்கார நூற்றுளொரு கவிதான் கற்றறிந்தவரே

(திருப்பாடல் 102)
திருவடியுந் தண்டையுஞ் சிலம்புஞ், சிலம்பூடுருவப்
பொருவடி வேலுங், கடம்புந், தடம்புயம் ஆறிரண்டும்
மருவடிவான வதனங்கள்ஆறும், மலர்க்கண்களுங்
குருவடிவாய் வந்தென் உள்ளங் குளிரக் குதிகொண்டவே

(திருப்பாடல் 103)
இராப்பகலற்ற இடங்காட்டி யானிருந்தே துதிக்கக்
குராப்புனை தண்டையந் தாள்அருளாய், கரி கூப்பிட்டநாள்
கராப்படக் கொன்(று), அக் கரிபோற்ற நின்ற கடவுள் மெச்சும்
பராக்ரம வேல நிருதசங்கார பயங்கரனே

(திருப்பாடல் 104)
செங்கேழ் அடுத்த சின வடிவேலுந் திருமுகமும்
பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும், பதுமமலர்க்
கொங்கே தரளஞ் சொரியுஞ் செங்கோடைக் குமரனென
எங்கே நினைப்பினும் அங்கேஎன்முன் வந்தெதிர் நிற்பனே

(திருப்பாடல் 105)
ஆவிக்கு மோசம் வருமாறறிந்துன் அருட்பதங்கள்
சேவிக்க என்று நினைக்கின்றிலேன் - வினை தீர்த்தருளாய்
வாவித் தடவயல் சூழுந் திருத்தணி மாமலைவாழ்
சேவற் கொடியுடையானே, அமர சிகாமணியே

(திருப்பாடல் 106)
கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமெந்தன் 
உள்ளத் துயரை ஒழித்தருளாய், ஒருகோடி முத்தந்
தெள்ளிக் கொழிக்குங் கடற்செந்தில் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவனே, மயிலேறிய மாணிக்கமே

(திருப்பாடல் 107)
சூலம் பிடித்தெமபாசஞ் சுழற்றித் தொடர்ந்துவருங்
காலன் தனக்கொரு காலும் அஞ்சேன், கடல் மீதெழுந்த
ஆலங் குடித்த பெருமான் குமாரன் - அறுமுகவன்
வேலுந் திருக்கையும் உண்டே நமக்கொரு மெய்த்துணையே

No comments:

Post a Comment