Monday, April 30, 2018

திருக்கோணமலை (கோணேஸ்வரம்)

(ஈழ நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: கிழக்கு மாகாணம் (திரிகோணமலை மாவட்டம்)

திருக்கோயில்: (இரு திருக்கோயில்கள்) 'அருள்மிகு மாதுமையாள் அன்னை சமேத ஸ்ரீகோணேசப் பெருமான் திருக்கோயில்' மற்றும் தம்பலகாமம் பகுதியிலுள்ள 'ஹம்ச கமானாம்பிகா தேவி சமேத ஸ்ரீஆதிகோணநாயக சுவாமி திருக்கோயில்' 

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்)


அமைவிடம் (செல்லும் வழி):

கொழும்பு விமான நிலையத்திலிருந்து சுமார் 250 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

போர்த்துகீசியர் 1624 ஆம் ஆண்டு கோணேஸ்வரம் திருக்கோயிலைத் தரைமட்டமாக்குவதற்கு முன்னரே ஆலயத்திலிருந்த விக்கிரக மூர்த்தங்கள் அனைத்தையும் அடியவர்களும் அர்ச்சகர்களும் வேறு இடத்தில் மறைத்து வைத்திருந்தனர், இம்மூர்த்தங்களைக் கொண்டே பின்னர் தம்பலகாமம் பகுதியில் மற்றொரு ஆலயம் எழுப்பப்பட்டது.

போர்துகீசியரால் இடிக்கப்பட்ட கோணேஸ்வரம் ஆலயம் இருந்த இடத்திலேயே (கடற்கரையில்) 1952ஆம் ஆண்டு மீண்டும் திருக்கோயில் எழுப்பப் பெற்றுள்ளது.a

(Google Maps: Koneswaram Kovil, Trincomalee, Sri Lanka)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனத்த தானன தனத்தான தானன
     தனத்த தானன தனத்தான தானன
          தனத்த தானன தனத்தான தானன ...... தனதான

விலைக்கு மேனியில் அணிக்கோவை மேகலை
     தரித்த ஆடையும் மணிப்பூணும் ஆகவே
          மினுக்கு மாதர்கள் இடக்காமம் மூழ்கியே ...... மயலூறி

மிகுத்த காமியன் எனப் பாருளோர் எதிர்
     நகைக்கவே உடலெடுத்தே வியாகுல
          வெறுப்பதாகியெ உழைத்தே விடாய்படு ...... கொடியேனைக்

கலக்கமாகவே மலக்கூடிலே மிகு
     பிணிக்குளாகியெ தவிக்காமலே உனை
          கவிக்குளாய் சொலி கடைத்தேறவே செயும்  ...... ஒருவாழ்வே

கதிக்கு நாதன்நி உனைத்தேடியே புகழ்
     உரைக்கும் நாயெனை அருட் பார்வையாகவே
          கழற்குளாகவே சிறப்பான தாயருள் ...... தரவேணும்

மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
     திருக்குமாரனே முகத்தாறு தேசிக
          வடிப்பமாதொரு குறப்பாவையாள் மகிழ் ...... தருவேளே

வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
     அகத்யமாமுநி இடைக்காடர் கீரனும்
          வகுத்த பாவினில் பொருள் கோலமாய்வரு ...... முருகோனே

நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
     திருக்கொணாமலை தலத்தாரு கோபுர
          நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் ...... வருவோனே

நிகழ்த்தும்ஏழ்பவ கடற்சூறையாகவே
     எடுத்த வேல்கொடு பொடித் தூளதாஎறி
          நினைத்த காரியம் அநுக்கூலமே புரி ...... பெருமாளே.

No comments:

Post a Comment