(ஈழ நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: யுவா மாகாணம்
திருக்கோயில்: அருள்மிகு கதிர்காமக் கந்தன் திருக்கோயில்
தல வகை: முருகன் திருக்கோயில்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
அமைவிடம் (செல்லும் வழி):
இலங்கையில் மூன்று விமான நிலையங்கள் உள்ளன, அவற்றுள் கொழும்பினை அடையும் இரு விமான நிலையங்களிலிருந்து இத்திருக்கோயில் 250 கி.மீ தூரத்திலும், ஹம்பன்டோடா விமான நிலையத்திலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்திலும் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
திஸமராம (Tissamaharama) எனும் ஊரிலிருந்து 23 கி.மீ தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
(Google Maps: Kathirgamam Murugan Kovil, Kataragama, Sri Lanka)
திஸமராம (Tissamaharama) எனும் ஊரிலிருந்து 23 கி.மீ தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
(Google Maps: Kathirgamam Murugan Kovil, Kataragama, Sri Lanka)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 13.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தனதனன தான தனதனன தான
தனதனன தானத் ...... தனதான
திருமகள் உலாவும் இருபுய முராரி
திருமருக நாமப் ...... பெருமாள்காண்
செகதலமும் வானும் மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் ...... பெருமாள்காண்
மருவும் அடியார்கள் மனதில்விளையாடு
மரகத மயூரப் ...... பெருமாள்காண்
மணிதரளம் வீசி அணியருவி சூழ
மருவு கதிர்காமப் ...... பெருமாள்காண்
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர் பொருத வீரப் ...... பெருமாள்காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர் குருநாதப் ...... பெருமாள்காண்
இருவினையிலாத தருவினை விடாத
இமையவர் குலேசப் ...... பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியின்அதிபார
இருதன விநோதப் ...... பெருமாளே.
திருப்பாடல் 2:
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
அலகின் மாறு மாறாத கலதி பூத வேதாளி
அடைவில் ஞாளி கோமாளி ...... அறம்ஈயா
அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ்மாதர்
அருளிலாத தோள்தேய ...... மருளாகிப்
பலகலாகரா மேரு மலைகராசலா வீசு
பருவ மேகமே தாருஎன யாதும்
பரிவுறாத மாபாதர் வரிசை பாடிஓயாத
பரிசில் தேடி மாயாத ...... படிபாராய்
இலகு வேலை நீள்வாடை எரிகொள் வேலை மாசூரில்
எறியும் வேலை மாறாத ...... திறல்வீரா
இமய மாது பாகீரதி நதிபாலகா சாரல்
இறைவி கான மால்வேடர் ...... சுதைபாகா
கலக வாரி போல்மோதி வடஐயாறு சூழ்சீத
கதிரகாம மூதூரில் ...... இளையோனே
கனக நாடு வீடாய கடவுள் யானை வாழ்வான
கருணை மேருவே தேவர் ...... பெருமாளே.
திருப்பாடல் 3:
தனத்தத் தனதான தானன
தனத்தத் தனதான தானன
தனத்தத் தனதான தானன ...... தனதான
உடுக்கத் துகில்வேணும் நீள்பசி
அவிக்கக் கனபானம் வேணும்நல்
ஒளிக்குப் புனலாடை வேணும் மெய்யுறு நோயை
ஒழிக்கப் பரிகாரம் வேணும்உள்
இருக்கச் சிறுநாரி வேணுமொர்
படுக்கத் தனிவீடு வேணும்இவ் ...... வகையாவும்
கிடைத்துக் க்ருஹவாசியாகிய
மயக்கக் கடலாடி நீடிய
கிளைக்குப் பரிபாலனாய்உயிர் ...... அவமேபோம்
க்ருபைச் சித்தமும் ஞான போதமும்
அழைத்துத் தரவேணும் ஊழ்பவ
கிரிக்குள் சுழல்வேனை ஆளுவதொருநாளே
குடக்குச் சிலதூதர் தேடுக
வடக்குச் சிலதூதர் நாடுக
குணக்குச் சிலதூதர் தேடுக ...... எனமேவிக்
குறிப்பில் குறிகாணு மாருதி
இனித் தெற்கொரு தூது போவது
குறிப்பில் குறிபோன போதிலும் ...... வரலாமோ
அடிக் குத்திரகாரராகிய
அரக்கர்க்கிளையாத தீரனும்
அலைக்கப் புறமேவி மாதுறு ...... வனமே!சென்
றருள் பொற் திருவாழி மோதிரம்
அளித்துற்றவர்மேல் மனோகரம்
அளித்துக் கதிர்காம மேவிய ...... பெருமாளே.
திருப்பாடல் 4:
தனன தான தத்த ...... தனதான
தனன தான தத்த ...... தனதான
எதிரிலாத பத்தி ...... தனைமேவி
இனிய தாள் நினைப்பை ...... இருபோதும்
இதய வாரிதிக்குள் ...... உறவாகி
எனதுளே சிறக்க ...... அருள்வாயே
கதிரகாம வெற்பில் ...... உறைவோனே
கனக மேருஒத்த ...... புயவீரா
மதுர வாணியுற்ற ...... கழலோனே
வழுதி கூன்நிமிர்த்த ...... பெருமாளே.
திருப்பாடல் 5:
தனதன தனதன தனதன தனதன
தானத் தனந்தந் ...... தனதான
கடகட கருவிகள் தபவகிர் அதிர்!கதிர்
காமத் தரங்கம் ...... மலைவீரா
கனகத நககுலி புணரித குணகுக
காமத்தன் அஞ்சம்புயனோட
வடசிகரகிரி தவிடுபட நடமிடு
மாவிற் புகும்கந்த வழாது
வழிவழி தமரென வழிபடுகிலன்!என
வா விக்கினம் பொன்றிடுமோதான்
அடவியிருடி அபிநவ !குமரியடிமை
யாயப் புனம் சென்றயர்வோனே
அயில்அவசமுடன்அ ததிதிரி தருகவி
ஆளப் புயம் கொண்டருள்வோனே
இடமொரு மரகத மயில்மிசை வடிவுள
ஏழைக்கிடம் கண்டவர் வாழ்வே
இதமொழி பகரினும் மதமொழி பகரினும்
ஏழைக்கிரங்கும் ...... பெருமாளே.
திருப்பாடல் 6:
தனதனன தானத்த தனதனன தானத்த
தனதனன தானத்த ...... தனதான தானனா
சமரமுக வேலொத்த விழிபுரள வாரிட்ட
தனமசைய வீதிக்குள் ...... மயில்போல்உலாவியே
சரியைக்ரியை யோகத்தின் வழிவரு க்ருபாசுத்தர்
தமையுணர ராகத்தின் ...... வசமாக மேவியே
உமதடி உனாருக்கும் அனுமரண மாயைக்கும்
உரியவர் மகாதத்தை ...... எனுமாய மாதரார்
ஒளிரமளி பீடத்தில் அமடுபடுவேனுக்கும்
உனதருள் க்ருபாசித்தம் ...... அருள்கூர வேணுமே
இமகிரி குமாரத்தி அநுபவை பராசத்தி
எழுதரிய காயத்ரி ...... உமையாள் குமாரனே
எயினர் மடமானுக்கு மடலெழுதி மோகித்து
இதணருகு சேவிக்கும் ...... முருகா விசாகனே
அமரர்சிறை மீள்விக்க அமர்செய்து ப்ரதாபிக்கும்
அதிகவித சாமர்த்ய ...... கவிராஜ ராஜனே
அழுதுலகை வாழ்வித்த கவுணியகுலாதித்த
அரிய கதிர்காமத்தில் ......உரியஅபிராமனே.
திருப்பாடல் 7:
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
தனத்தா தனத்தா ...... தனதான
சரத்தே உதித்தாய் உரத்தே குதித்தே
சமர்த்தாய் எதிர்த்தே ...... வருசூரைச்
சரிப்போன மட்டே விடுத்தாய் அடுத்தாய்
தகர்த்தாய் உடல்தான் ...... இருகூறாச்
சிரத்தோடுரத்தோடறுத்தே குவித்தாய்
செகுத்தாய் பலத்தார் ...... விருதாகச்
சிறைச்சேவல் பெற்றாய் வலக்காரம் உற்றாய்
திருத்தாமரைத் தாள் ...... அருள்வாயே
புரத்தார் வரத்தார் சரச்சேகரத்தார்
பொரத்தான் எதிர்த்தே ...... வருபோது
பொறுத்தார் பரித்தார் சிரித்தார் எரித்தார்
பொரித்தார் நுதற் பார்வையிலே பின்
கரித்தோலுரித்தார் விரித்தார் தரித்தார்
கருத்தார் மருத்தூர் ...... மதனாரைக்
கரிக்கோலமிட்டார் கணுக்கான முத்தே
கதிர்க்காமம் உற்றார் ...... முருகோனே.
திருப்பாடல் 8:
தனதனா தத்தனத் தனதனா தத்தனத்
தனதனா தத்தனத் ...... தனதான
சரியையாளர்க்கும்அக் கிரியையாளர்க்கும்நற்
சகல யோகர்க்கும் எட்டரிதாய
சமயபேதத்தினுக்கணுகொணா மெய்ப்பொருள்
தரு பராசத்தியின் ...... பரமான
துரியமேலற்புதப் பரம ஞானத்தனிச்
சுடர்வியாபித்த நற் ...... பதிநீடு
துகளில் சாயுச்சியக் கதியை ஈறற்றசொல்
சுகசொரூபத்தை உற்றடைவேனோ
புரிசைசூழ் செய்ப்பதிக்குரிய சாமர்த்ய!சத்
புருஷ வீரத்து விக்ரம சூரன்
புரளவேல் தொட்டகைக் குமரமேன்மைத்!திருப்
புகழை ஓதற்கெனக்கருள்வோனே
கரியஊகத்திரள் பலவின் மீதிற்சுளைக்
கனிகள் பீறிப் புசித்தமராடிக்
கதலி சூதத்தினில் பயிலும் ஈழத்தினில்
கதிரகாமக் கிரிப் ...... பெருமாளே.
திருப்பாடல் 9:
தானதன தத்தத்த தானதன தத்தத்த
தானதன தத்தத்த ...... தனதான
பாரவித முத்தப்படீர புளகப்பொற்!ப
யோதர நெருக்குற்ற ...... இடையாலே
பாகளவு தித்தித்த கீதமொழியில்புட்ப
பாணவிழியில் பொத்தி ...... விடுமாதர்
காரணி குழல் கற்றை மேல் மகரம் ஒப்பித்த
காதில்முக வட்டத்தில் ......அதிமோக
காமுகன்அகப்பட்ட ஆசையை மறப்பித்த
கால்களை மறக்கைக்கும் ...... வருமோதான்
தேரில்ரவி உட்கிப் புகாமுது புரத்தில்!தெ
சாசிரனை மர்த்தித்த ...... அரிமாயன்
சீர்மருக அதிஉக்ர யானைபடும் ரத்ந!த்ரி
கோண சயிலத் துக்ர ...... கதிர்காம
வீரபுன வெற்பில் கலாபி எனச்சிக்கு
மேகலை இடைக்கொத்தின் ...... இருதாளின்
வேரிமழையில் பச்சை வேயில் அருணக் கற்றை
வேல்களில்அகப்பட்ட ...... பெருமாளே.
திருப்பாடல் 10:
தனதனா தத்த தனதனா தத்த
தனதனா தத்த ...... தனதான
மருஅறா வெற்றி மலர்தொடா விற்கை
வலிசெயா நிற்கும் ......அதனாலும்
மதில்கள் தாவுற்ற கலைபடா வட்ட
மதிசுடா நிற்கும் ...... அதனாலும்
இருகணால் முத்த முதிர யாமத்தின்
இரவினால் நித்தம் ...... மெலியாதே
இடருறா மெத்த மயல்கொளா நிற்கும்
இவளை வாழ்விக்க ...... வரவேணும்
கரிகள்சேர் வெற்பில் அரிய வேடிச்சி
கலவிகூர் சித்ர ...... மணிமார்பா
கனக மாணிக்க வடிவனே மிக்க
கதிரகாமத்தில் உறைவோனே
முருகனே பத்தர் அருகனே முத்தி
முதல்வனே பச்சை ...... மயில்வீரா
முடுகி மேலிட்ட கொடியசூர் கெட்டு
முறியவேல் தொட்ட ...... பெருமாளே.
திருப்பாடல் 11:
தானதன தானத் ...... தனதான
மாதர் வசமாய் உற்றுழல்வாரும்
மாதவம் எணாமல் ...... திரிவாரும்
தீதகல ஓதிப் ...... பணியாரும்
தீ நரகமீதில் ...... திகழ்வாரே
நாதஒளியே நற்குணசீலா
நாரி இருவோரைப் ...... புணர்வேலா
சோதி சிவஞானக் ...... குமரேசா
தோமில் கதிர்காமப் ...... பெருமாளே.
திருப்பாடல் 12:
தனன தான தான தத்த தனன தான தான தத்த
தனன தான தான தத்த ...... தனதான
முதிரும் மாரவாரம் நட்பொடிலகும் ஆரவாரம்எற்றி
முனியும்ஆரவாரம் உற்ற ...... கடலாலே
முடிவிலாததோர் வடக்கில் எரியும்ஆலம் ஆர்பிடத்து
முழுகியேறி மேலெறிக்கும் ...... நிலவாலே
வெதிரில்ஆயர் வாயில் வைத்து மதுர ராகம் நீடிசைக்கும்
வினைவிடாத தாயருக்கும் அழியாதே
விளையும் மோக போகம் முற்றி அளவிலாத காதல் பெற்ற
விகட மாதை நீஅணைக்க ...... வரவேணும்
கதிரகாம மாநகர்க்குள் எதிரிலாத வேல்தரித்த
கடவுளே கலாப சித்ர ...... மயில்வீரா
கயலுலாம் விலோசனத்தி களபமார் பயோதரத்தி
ககன மேவு வாளொருத்தி ...... மணவாளா
அதிர வீசியாடும் வெற்றி விடையிலேறும் ஈசர் கற்க
அரிய ஞான வாசகத்தை ......அருள்வோனே
அகில லோக மீதுசுற்றி அசுரர் லோக நீறெழுப்பி
அமரர் லோகம் வாழ வைத்த ...... பெருமாளே.
திருப்பாடல் 13:
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
வருபவர்கள்ஓலை கொண்டு நமனுடைய தூதரென்று
மடிபிடியதாக நின்று ...... தொடர்போது
மயலதுபொலாத வம்பன் விரகுடையன் ஆகுமென்று
வசைகளுடனே தொடர்ந்து ...... அடைவார்கள்
கருவிஅதனாலெறிந்து சதைகள் தனையேஅரிந்து
கரியபுனலே சொரிந்து ...... விடவேதான்
கழுமுனையிலேஇரென்று விடுமெனும் அவேளை கண்டு
கடுகி வரவேணும் எந்தன் ...... முனமேதான்
பரகிரி உலாவு செந்தி மலையினுடனே இடும்பன்
பழநிதனிலே இருந்த ...... குமரேசா
பதிகள் பல ஆயிரங்கள் மலைகள்வெகு கோடி நின்ற
பதம் அடியர் காண வந்த ...... கதிர்காமா
அரவுபிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை
அணிவர் சடையாளர் தந்த ...... முருகோனே
அரகர சிவாய சம்பு குருபர குமார நம்பும்
அடியர்தமை ஆள வந்த ...... பெருமாளே.
No comments:
Post a Comment