Wednesday, May 30, 2018

வாரணாசி (காசி):

(வட நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: வட நாடு

மாவட்டம்: வாரணாசி

திருக்கோயில்: அருள்மிகு ஸ்ரீகேதாரேஸ்வரர் திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


அமைவிடம் (செல்லும் வழி):

கங்கை பிரவகித்துப் பாயும் இப்புண்ணிய ஷேத்திரத்தில் அமைந்துள்ள எண்ணிறந்த தீர்த்தக் கட்டங்களுள் கேதார கட்டமும் ஒன்று. இதன் கரையினில் சிவபரம்பொருள் கேதாரேஸ்வரர் எனும் திருநாமம் தாங்கி எழுந்தருளி இருக்கின்றார், அம்பிகை கேதார கௌரி.

திருப்பனந்தாள் திருமடத்தின் பராமரிப்பில் சிறப்புடன் இத்திருக்கோயில் திகழ்கின்றது, கரையிலிருந்து மேல்நோக்கிப் பார்க்கையில், திருக்கோயில் திருச்சுவற்றிலுள்ள 'சிவ சிவ' எனும் தீந்தமிழ் எழுத்துக்கள் தரிசிப்போரைப் பரவசப் படுத்தும். மூல மூர்த்தியான கேதாரேஸ்வர மூர்த்தியைத் தரிசிக்கும் நிலையில், வலது புறம் திருப்புகழ் நாயகனான நம் கந்தக் கடவுள் 'ஒரு திருமுகம் மற்றும் நான்கு திருக்கரங்களுடன்' இனிது எழுந்தருளி இருக்கின்றான்.

(Google Maps: Shri Kedareshwar Temple, Bangali Tola, Varanasi, Uttar Pradesh, IN)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 3.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தான தத்தன தான தானன
     தான தத்தன தான தானன
          தான தத்தன தான தானன ...... தனதான

தாரணிக் கதி பாவியாய் வெகு
     சூது மெத்திய மூடனாய் மன
          சாதனைக் களவாணியாய்உறு ...... மதிமோக

தாபமிக்குள வீணனாய் பொரு
     வேல் விழிச்சியர் ஆகுமாதர்கள்
          தாமுயச் செயும் ஏது தேடிய ...... நினைவாகிப்

பூரணச்சிவ ஞான காவியம்
     ஓதுதற் புணர்வான நேயர்கள்
          பூசு மெய்த்திரு நீறிடாஇரு ...... வினையேனைப்

பூசி மெய்ப்பதமான சேவடி
     காண வைத்தருள் ஞானமாகிய
          போதகத்தினை ஏயுமாறருள் ...... புரிவாயே

வாரணத்தினையே !கராவுமு
     னே வளைத்திடு போது மேவிய
          மாயவற்கிதமாக வீறிய ...... மருகோனே

வாழு முப்புர வீறதானது
     நீறெழப் புகையாகவே செய்த
          மாமதிப் பிறை வேணியார் அருள் ...... புதல்வோனே

காரணக் குறியான நீதியர்
     ஆனவர்க்கு முனாகவே நெறி
          காவியச்சிவ நூலை ஓதிய ...... கதிர்வேலா

கானகக் குறமாதை மேவிய
     ஞான சொற் குமரா பராபர
          காசியில் பிரதாபமாய் உறை ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தந்தத் தனதன தானன தானன
     தந்தத் தனதன தானன தானன
          தந்தத் தனதன தானன தானன ...... தனதான

மங்கைக் கணவனும் வாழ் சிவணா மயல்
     பங்கப் படமிசையே பனி போல் மதம்
          வந்துள் பெருகிடவே விதியானவன் ...... அருள்மேவி

வண்டுத் தடிகை பொலாகியெ நாள்பல
     பந்துப் பனை பழமோடிள நீர்குட
          மண்டிப் பல பலவாய் வினை கோலும் அவ்வழியாலே

திங்கள் பதுசெலவே தலைகீழுற
     வந்துப் புவிதனிலே மதலாயென
          சிந்தைக் குழவியெனா அனை தாதையும்  ...... அருள்கூரச்

செம்பொற் தடமுலை பால்குடி நாள்பல
     பண்புத் தவழ்நடை போய் விதமாய் பல
          சிங்கிப் பெருவிழியார் அவமாய்அதில் ...... அழிவேனோ

அங்கைத்தரி எனவே ஒரு பாலகன்
     இன்பக் கிருபையதாய் ஒரு தூண்மிசை
          அம்பல் கொடுஅரியாய் இரண்யாசுரன் ...... உடல்பீறி

அண்டர்க்கருள் பெருமான் முதிராஅணி
     சங்குத் திகிரிகரோன் அரி நார!அ
          ரங்கத் திருவணை மேல்துயில் நாரணன் ...... மருகோனே

கங்கைச் சடைமுடியோன் இடம் மேவிய
     தங்கப் பவளொளி பால்மதி போல்முக
          கங்குல் தரிகுழலாள் பரமேசுரி ...... அருள்பாலா

கந்துப் பரிமயில் வாகன மீதிரு
     கொங்கைக் குறமகள் ஆசையொடே மகிழ்
          கங்கைப் பதிநதி காசியில் மேவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தான தந்தன தானன ...... தனதான
     தான தந்தன தானன ...... தனதான

வேழ முண்ட விளாகனி ...... அதுபோல
     மேனி கொண்டு வியாபக ...... மயலூறி

நாளு மிண்டர்கள் போல்மிக ...... அயர்வாகி
     நானும் நைந்து விடாதருள் ...... புரிவாயே

மாள அன்றமணீசர்கள் ...... கழுவேற
     வாதில் வென்ற சிகாமணி ...... மயில்வீரா

காள கண்டன் உமாபதி ...... தருபாலா
     காசி கங்கையில் மேவிய ...... பெருமாளே.


No comments:

Post a Comment