Tuesday, May 29, 2018

மாயாபுரி (ஹரித்வார்):

(வட நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: வட நாடு

மாவட்டம்: ஹரித்வார் (உத்தர்காண்ட் மாநிலம்):

திருக்கோயில்: தக்ஷேஸ்வர் மகாதேவர் ஆலயம்

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக்குறிப்புகள் :

இந்து தர்மத்தின் 'பிரதான முத்தித் தலங்கள் ஏழினுள்' ஒன்றாகக் கொண்டாடப் பெறுகின்றது 'உத்தர்காண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஹரித்வார்' (புராணப் பெயர் 'மாயாபுரி'), மற்ற ஆறு தலங்கள் (வாரணாசி, அவந்தி எனும் உஜ்ஜயினி, அயோத்தி, மதுரா, துவாரகை, காஞ்சிபுரம்). கும்பமேளா நடந்தேறும் நான்கு புண்ணியத் தலங்களுள் ஒன்றாகவும் ஹரித்வார் திகழ்கின்றது. 

சைவ சமய அருளாளர்களுள் 'வடநாட்டிலுள்ள ஹரித்வார் தலத்தினை நேரில் சென்று தரிசித்தது' அருணகிரிப் பெருமான் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலத்திலுள்ள கனகல் (Khankal) எனும் பகுதியில் அமைந்துள்ளது திருப்புகழ் திருக்கோயிலான 'தக்ஷேஸ்வர் மகாதேவர் ஆலயம்'.

பிரம்ம புத்திரனான தட்சன் 'அறியாமையாலும் ஆணவத்தாலும் மதியிழந்து', வரமருளிய சிவபரம்பொருளையே அவமதிக்கும் பொருட்டு இவ்விடத்தில் நடத்திய பெருயாகமொன்றினை, வீரபத்திரரும் மகாகாளியும் முற்றிலுமாய் அழித்தொழித்த நிகழ்வினைச் சிவபுராணம் பதிவு செய்கின்றது. 

ஆதிபராசக்தியின் அம்சமாக தோன்றியருளிய அன்னை சதி தேவி 'யோகாக்னியால் தன் திருமேனியை மாய்த்தருளிய யாக குண்டத்தினை' இவ்விடத்தில் இன்றும் தரிசிக்கலாம். சக்தி பீடங்களின் துவக்கத்திற்கு வித்திட்ட தலம், சர்வ நிச்சயமாய் இறை அதிர்வுகளை இத்திருக்கோயில் வளாகத்தில் உணர இயலும். கருணைப் பெருவெள்ளமான நம் கந்தக் கடவுளுக்கு இத்தலத்தில் தனிச்சன்னிதி இல்லை, அருவ நிலையிலேயே பேரருள் புரிந்து வருகின்றான்.

அமைவிடம் (செல்லும் வழி):

ஹரித்வாரிலிருந்து 5 கி.மீ தூரத்திலுள்ள கனகல் (Khankal) எனும் பகுதியில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

(Google Maps): 
Daksheshwar Mahadev, Daksheshwar Mahadev Temple, Kankhal, Brahm Vihar Colony, Mayapur, Haridwar, Uttarakhand 249407, India

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனன தனந்த தானன ...... தனதான
தனன தனந்த தானன ...... தனதான

சிகரம் அருந்த வாழ்வது ...... சிவஞானம்
சிதறி அலைந்து போவது ...... செயலாசை

மகர நெருங்க வீழ்வது ...... மகமாய
மருவி நினைந்திடா அருள் ...... புரிவாயே

அகர நெருங்கின் ஆமயம் உறவாகி
அவசமொடும் கையாறொடு ...... முனமேகிக்

ககனம் இசைந்த சூரியர் ...... புக மாயை
கருணை பொழிந்து மேவிய ...... பெருமாளே.

No comments:

Post a Comment