Tuesday, July 24, 2018

தனிச்சயம்

(பாண்டிய நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: பாண்டிய நாடு 

மாவட்டம்: மதுரை 

திருக்கோயில்: (சிவாலயமோ அல்லது முருகன் திருகோயிலோ இத்தலத்தில் தற்பொழுது இல்லை)

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

மதுரையிலிருந்து 12 கி.மீ தொலைவிலுள்ள சமயநல்லூர் எனும் ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவில் தனிச்சயம் எனும் இத்தலம் அமைந்துள்ளது.

பாண்டிய மன்னன் இந்திரனைத் தனித்து நின்று வெற்றி கொண்ட இடமாதலால் தனிச்சயம் என்று இத்தலம் அறியப்பட்டு வருகின்றது.

இத்தலத்தில் ஆதியில் சிவாலயமோ அல்லது முருகன் திருகோயிலோ இருந்துப் பின் கால வெள்ளத்தில் மறைந்திருக்கக் கூடும். தற்பொழுது இத்தலத்தில் ஐயனார் கோயிலொன்றும், சிறு அம்மன் கோயிலொன்றும் விளங்கி வருகின்றது.

அருணகிரியார் இத்தலத்திற்கான திருப்புகழில் 'கொங்கிற் தனிச்சயம் தன்னில் இனிதுறை கந்தப் பெருமாளே' என்று குறித்துள்ளமையால் பண்டைய காலத்தில் இத்தலம் கொங்கு எல்லைக்குள் இருந்துப் காலப்போக்கில் நிகழ்ந்தேறிய எல்லை மாறுபாட்டினால் தற்பொழுது பாண்டிய மண்டலப் பகுதியாக மாறியிருக்கக் கூடும் என்று 'திரு.வலையப் பேட்டை கிருஷ்ணன்' அவர்கள் தம்முடைய 'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' நூலில் குறித்துள்ளார்.   


(Google Maps: Thanichiyam, Tamil Nadu 625221, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
     தனத்தனத் தனத்தனத் ...... தனதான

இலைச்சுருள் கொடுத்தணைத் தலத்திருத்தி மட்டைகட்
     கிதத்தபுள் குரல்கள் விட்டநுராகம்

எழுப்பிமைக் கயல்கணைக் கழுத்தை !முத்தமிட்டணைத்
     தெடுத்திதழ்க் கடித்துரத்திடை தாவி

அலைச்சலுற்றிலச்சையற்றரைப்பை தொட்டுழைத்துழைத்
     தலக்கணுற்றுயிர்க் களைத்திடவேதான்

அறத்தவித்திளைத்துறத் தனத்தினில் !புணர்ச்சிபட்
     டயர்க்கும்இப் பிறப்பினித் ...... தவிராதோ

கொலைச் செருக்கரக்கரைக் கலக்குமிக்க குக்குடக்
     கொடித்திருக் கரத்த பொற் ...... பதிபாடும் 

குறித்தநற் திருப்புகழ்ப் ப்ரபுத்துவக் கவித்துவக்
     குருத்துவத்தெனைப் பணித்தருள்வோனே

தலைச்சுமைச் சடைச்சிவற்கிலக்கணத்திலக்கியத்
     தமிழ் த்ரயத்தகத்தியற்கறிவோதும் 

சமர்த்தரில் சமர்த்த பச்சிமத் திசைக்குள்!உத்தமத்
     தனிச்சயத்தினில் பிளைப் ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தனத்த தந்தன தனதன தந்தத்
     தனத்த தந்தன தனதன தந்தத்
          தனத்த தந்தன தனதன தந்தத் ...... தனதான

உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கிக்
     கறுத்த குஞ்சியும் வெளிறிய !பஞ்சொத்
          தொலித்திடும் செவி செவிடுற ஒள்கண் ...... குருடாகி

உரத்த வெண்பலும் நழுவி மதங்!கெட்
     டிரைத்து கிண்கிண்என இருமல்!எழுந்திட்
          டுளைப்புடன் தலை கிறுகிறெனும் பித்தமுமேல்!கொண்

டரத்தமின்றிய புழுவினும் விஞ்சிப்
     பழுத்துளம் செயல் வசனம் !வரம்பற்
          றடுத்த பெண்டிரும் எதிர்வர நிந்தித்தனைவோரும்

அசுத்தனென்றிட உணர்வது குன்றித்
     துடிப்பதுன் !சிறிதுளதிலதென்கைக்
          கவத்தை வந்துயிர் அலமரும் அன்றைக்கருள்வாயே

திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட்
     டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட்
          டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் ...... டிகுதீதோ

திமித்தி மிந்திமி திமிதிமி யென்றிட்
     டிடக்கை துந்துமி முரசு முழங்கச்
          செருக்க ளந்தனில் நிருதர் தயங்கச் ...... சிலபேய்கள்

தரித்து மண்டையில் உதிரம் அருந்தத்
     திரள்பருந்துகள் குடர்கள் பிடுங்கத்
          தருக்கு சம்புகள் நிணமது சிந்தப் ...... பொரும்வேலா

தடச் சிகண்டியில் வயலியில் அன்பைப்
     படைத்த நெஞ்சினில் இயல்செறி கொங்கில் 
          தனிச்சயம் தனில் இனிதுறை கந்தப் ...... பெருமாளே.


No comments:

Post a Comment