(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: கொங்கு நாடு
மாவட்டம்: தர்மபுரி
திருக்கோயில்: அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
திருவண்ணாமலையிலிருந்து 72 கி.மீ தொலைவிலும், சேலத்திலிருந்து 78 கி.மீ தொலைவிலும், தர்மபுரியிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது தீர்த்தமலை.
அடிவாரத்திலொரு சிவாலயமும், மலைக்கோயிலில் மற்றொரு சிவாலயமும் அமையப் பெற்றுள்ள திருத்தலம், ஒரே திருக்கோயிலின் இரு பகுதிகளாக விளங்கிவரும் இவ்விரண்டு ஆலயங்களிலும் ஆதிப்பரம்பொருளான சிவமூர்த்தி தீர்த்தகிரீஸ்வரர் எனும் திருநாமத்திலும், உமையன்னை வடிவாம்பிகை எனும் திருப்பெயரிலும் எழுந்தருளி இருக்கின்றனர். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி பூசித்து மகிழ்ந்த திருத்தலம், மலைக்கோயிலுக்கருகில் பல்வேறு தீர்த்தங்களைத் தரிசிக்கலாம், ஸ்ரீராம; அனுமன் தீர்த்தங்களைப் புரோக்ஷணம் செய்த பின்னரே ஆலய தரிசனம் செய்விக்கின்றனர், அன்பர்கள் பரம புண்ணியமான இத்தீர்த்தங்களைச் சேகரித்து தங்கள் இல்லங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர்).
மலைக்கோயிலுக்கு வாகனப் பாதை இல்லை, 20 முதல் 30 நிமிடங்கள் படிகளேறிப் பயணித்தால் ஆலயத்தைச் சென்றடையலாம் (காலணிகளின்றிப் படியேறுதல் அவசியம், இப்படிகளையும் ஆலயத்தின் பகுதியெனவே கொள்ளுதல் வேண்டும்).
மலைக்கோயிலில் நடைசாற்றப் பெறுவதில்லை, நாள் முழுவதும் எந்நேரமும் சென்று தரிசிக்கலாம். மூலக் கருவறையில் தீர்த்தகிரீஸ்வரப் பரம்பொருளைத் தரிசித்துப் பணிகையில், இறைவர்; இறைவி திருச்சன்னிதிகளைத் தவிர்த்துப் பிற சன்னிதிகள் யாவும் செப்பனிடப் பெற்று வருவதை அறிந்தோம். இந்த யாத்திரையின் லட்சியமான பாலமுருகப் பெருமானும் பாலாலய நிலையில் எழுந்தருளி இருப்பதைக் கேள்வியுற்ற எங்களுக்கு ஏக்கத்தோடு கூடிய ஏமாற்றம். குடமுழுக்கு நடந்தேற ஒரு வருடத்திற்கு மேலாகும் என்றும் அறிந்தோம்.
பாலாலய திருச்சன்னிதியின் அமைவிடத்தை விசாரித்து அங்கு சென்றோம். திருவடி தொழும் அன்பர்களின் பிறவித் தளையை விளையாட்டாய் அறுக்கவல்ல தீர்த்தமலைக் குமரன் இங்கு வஸ்திரத்தால் சுற்றப் பெற்றுக் கயிற்றினால் பிணைக்கப் பெற்றிருந்தான். இப்பெருமானின் திருமுன்னர் இத்தலத் திருப்புகழைப் பாராயணம் புரிந்து பணிந்தோம். திருமேனியில் வஸ்திரத்தால் மறைக்கப் பெறாமலிருந்த திருவடிப் பகுகுதியை ஏக்கத்துடன் தொட்டு வணங்கினோம்.
அடிவாரக் கோயிலில் நம் ஏக்கத்தைப் போக்கும் கருணைக் கடலாக ஆறுமுகக் கடவுள் எழுந்தருளி இருக்கின்றான், ஆறு திருமுகங்கள்; பன்னிரு திருக்கரங்களோடு, இரு தேவியரும் உடனிருக்க, மயில் மீதமர்ந்த திருக்கோலம், இம்மூர்த்தியின் திருமுன்னரும் திருப்புகழ் பாராயணம் புரிந்து மகிழ்ந்தோம்.
அருணகிரிப் பெருமான் இத்தலத்திற்கு ஒரு திருப்புகழ் திருப்பாடலை அருளிச் செய்துள்ளார். அவசியம் தரிசித்துப் பயன்பெற வேண்டிய புண்ணிய ஷேத்திரம்,
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தாத்த தனதன தாத்த தனதன
தாத்த தனதன தாத்த தனதன
தாத்த தனதன தாத்த தனதன ...... தனதான
பாட்டில் உருகிலை கேட்டும் உருகிலை
கூற்று வருவழி பார்த்தும் உருகிலை
பாட்டை அநுதினம் ஏற்றும் அறிகிலை ...... தினமானம்
பாப்பணியன் அருள் வீட்டை விழைகிலை
நாக்கின் நுனிகொடு ஏத்த அறிகிலை
பாழ்த்த பிறவியிலேற்ற மனதுநல் ...... வழிபோக
மாட்டம் எனுகிறை கூட்டை விடுகிலை
ஏட்டின் விதிவழியோட்டம் அறிகிலை
பார்த்தும் இனியொரு வார்த்தை அறைகுவன் இதுகேளாய்
வாக்கும் உனதுள நோக்கும் அருளுவன்
ஏத்த புகழ் அடியார்க்கும் எளியனை
வாழ்த்த இருவினை நீக்கு முருகனை ...... மருவாயோ
ஆட்டி வடவரை வாட்டி அரவொடு
பூட்டி திரிபுரமூட்டி மறலியின்
ஆட்டம் அறசரண் நீட்டி மதனுடல் ...... திருநீறாய்
ஆக்கி மகமதை வீட்டியொருவனை
ஆட்டின் முகமதை நாட்டி !மறைமக
ளார்க்கும் வடுவுற வாட்டும் உமையவன் அருள்பாலா
சீட்டை எழுதி வையாற்றில் எதிருற
ஓட்டி அழல்பசை காட்டி சமணரை
சீற்றமொடு கழுவேற்ற அருளிய ...... குருநாதா
தீர்த்த எனதகம் ஏட்டையுடன் நினை
ஏத்த அருளுடன் நோக்கி அருளுதி
தீர்த்த மலைநகர் காத்த சசிமகள் ...... பெருமாளே.
(2023 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment