(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: கொங்கு நாடு
மாவட்டம்: திண்டுக்கல்
திருக்கோயில்: அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில்
தல வகை: முருகன் திருக்கோயில்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானல் மலைச் சாரலில், கொடைக்கானல் ஏரி அமைந்துள்ள பிரதானப் பகுதியிலிருந்து சுமார் 10 கி.மீ தூரம் மலைப்பாதியில் மேல் நோக்கிப் பயணித்து, 'மோயர் பாயிண்ட்' எனும் இடத்திலிருந்து பிரியும் பூம்பாறைச் சாலையில் 13 கி.மீ தூரம் பயணித்தால் இத்தலத்தை அடையலாம்.
ஓரளவு விசாலமான ஆலய வளாகம், மூலக் கருவறையில் கந்தப் பெருமான் 'குழந்தை வேலப்பர்' எனும் திருநாமத்தோடு, நின்ற திருக்கோலத்தில் அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றான். அதிகாலை பூஜைக்குப் பிறகு அன்றைய நாள் முழுவதும் வேலாயுதக் கடவுள் திருமுகத்தில் சந்தனக் காப்பு அலங்காரத்துடன் திருக்காட்சி தருகின்றான்.
ஆலயத்தினை வலமாக வருகையில் கூப்பிய திருக்கரங்களுடன், தனித்துவமான நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ள அருணகிரியாரின் திருச்சன்னிதியைத் தரிசிக்கலாம்.
அருணை மாமுனிவர் இத்தலத்திற்கென ஒரு திருப்புகழ் திருப்பாடலை அருளிச் செய்துள்ளார்,
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தாந்ததன தான தாந்ததன தான
தாந்ததன தான ...... தனதான
மாந்தளிர்கள் போல வேய்ந்தவுடல் மாதர்
வாந்தவியமாக ...... முறைபேசி
வாஞ்சைபெரு மோக சாந்திதர நாடி
வாழ்ந்தமனை தேடி ...... உறவாடி
ஏந்துமுலை மீது சாந்துபல பூசி
ஏங்குமிடை வாட ...... விளையாடி
ஈங்கிசைகள் மேவ லாஞ்சனையிலாமல்
ஏய்ந்த விலைமாதர் ...... உறவாமோ
பாந்தள்முடி மீது தாந்ததிமி தோதி
தாஞ்செகண சேசெ ...... எனஓசை
பாங்குபெறு தாளம் ஏங்க நடமாடும்
பாண்டவர் சகாயன் ...... மருகோனே
பூந்தளிர்கள் வீறு வேங்கைகள் பலாசு
பூங்கதலி கோடி ...... திகழ்சோலை
பூந்தடம்உலாவு கோம்பைகள் குலாவு
பூம்பறையில் மேவு ...... பெருமாளே
(2023 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment