(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: கொங்கு நாடு
மாவட்டம்: திருப்பூர்
திருக்கோயில்: அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில்
தல வகை: முருகன் திருக்கோயில்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
அமைவிடம் (செல்லும் வழி):
கோவை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 70 கி.மீ தூரத்திலும், தாராபுரம் எனும் சிற்றூரிலிருந்து 20 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது திருப்புகழ் தலமான ஊதிமலை (கோவையில் அவிநாசி வட்டத்தில் 'ஓதிமலை' எனும் தலமும் உண்டு, எனினும் திருப்புகழ் பெற்றுள்ளது ஊதிமலை மட்டுமே என்பது தெளிவு).
ஏகாந்தமான சூழலில் 156 படிகளோடு அமைந்துள்ளது இம்மலைக்கோயில். குமாரக் கடவுள் 'உத்தண்ட வேலாயுத சுவாமி' எனும் திருநாமத்தில், வலது திருக்கரத்தில் தண்டத்தினை ஏந்திய நின்ற திருக்கோலத்தில் அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றான். வள்ளி; தெய்வயானை தேவியர் ஒரே திருச்சன்னிதியில் அருகருகே எழுந்தருளி இருக்கின்றனர். கொங்கணச் சித்தரோடு தொடர்புடைய தலம்.
அருணகிரிப் பெருமான் ஊதிமலை வேலவனை 'ஆதி மகமாயி அம்பை', 'கோதி முடித்துக் கனத்த கொண்டையர்' எனும் இரு திருப்புகழ் திருப்பாடல்களால் போற்றிப் பரவுகின்றார், அவசியம் தரிசித்துப் பணிய வேண்டிய திருத்தலம்,
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ...... தனதான
ஆதிமகமாயி அம்பை தேவி சிவனார் மகிழ்ந்த
ஆவுடைய மாது தந்த ...... குமரேசா
ஆதரவதாய் வருந்தி ஆதிஅருணேசரென்று
ஆளும்உனையே வணங்க ...... அருள்வாயே
பூதம்அதுவான ஐந்து பேதமிடவே அலைந்து
பூரண சிவாகமங்கள் அறியாதே
பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகையே நினைந்து
போகமுறவே விரும்பும் அடியேனை
நீதயவதாய் இரங்கி நேசஅருளே புரிந்து
நீதிநெறியே விளங்க ...... உபதேச
நேர்மை சிவனார் திகழ்ந்த காதிலுரை வேத மந்த்ர
நீலமயிலேறி வந்த ...... வடிவேலா
ஓதுமறை ஆகமம்சொல் யோகம் அதுவே புரிந்து
ஊழியுணர்வார்கள் தங்கள் ...... வினைதீர
ஊனும் உயிராய் வளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த
ஊதிமலை மீது கந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 2:
தான தனத்தத் தனத்த தந்தன
தான தனத்தத் தனத்த தந்தன
தான தனத்தத் தனத்த தந்தன ...... தனதான
கோதி முடித்துக் கனத்த கொண்டையர்
சூது விதத்துக்கிதத்து மங்கையர்
கூடிய அற்பச் சுகத்தை நெஞ்சினில் ...... நினையாதே
கோழை மனத்தைக் கெடுத்து வன்புல
ஞான குணத்தைக் கொடுத்து நின்செயல்
கூறுமிடத்துக்கிதத்து நின்றருள் ...... புரிவாயே
நாத நிலைக்குள் கருத்துகந்தருள்
போதக மற்றெச் சகத்தையும்தரு
நான்முகனுக்குக் கிளத்து தந்தையின் ...... மருகோனே
நாடும் அகத்தெற்கிடுக்கண் வந்தது
தீரிடுதற்குப் பதத்தையும் தரு
நாயகர் புத்ரக் குருக்கள் என்றருள் ...... வடிவேலா
தோதிமி தித்தித் திமித்த டிங்குகு
டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி
தோதிமி தித்தித் தனத்த தந்தஎனிசையோடே
சூழ நடித்துச் சடத்தில் !நின்றுயி
ரான துறத்தற்கிரக்கமும் சுப
சோபனம் உய்க்கக் கருத்தும் வந்தருள் ...... புரிவோனே
ஓத எழுத்துக்கடக்கமும் சிவ
காரண பத்தர்க்கிரக்கமும் தகு
ஓமெனெழுத்துக்குயிர்ப்பும் என்சுடர் ஒளியோனே
ஓதி இணர்த்திக் குகைக்கிடும்!கன
காபரணத்தின் பொருள் பயன்தரு
ஊதி கிரிக்குள் கருத்துகந்தருள் ...... பெருமாளே.
2022 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment