Friday, August 24, 2018

கன்னபுரம்

(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: கொங்கு நாடு

மாவட்டம்: திருப்பூர் 

திருக்கோயில்: அருள்மிகு விக்கிரம சோளீஸ்வரர் திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


அமைவிடம் (செல்லும் வழி):

தாராபுரம் வட்டத்தில், திருப்பூர் இரயில் நிலையத்திலிருந்து சுமார் 40 கி.மீ தூரத்திலும், காங்கேயத்திலிருந்து 12 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது கன்னபுரம் (அல்லது கண்ணபுரம்). மாபாரதக் கண்ணனோடும், பஞ்ச பாண்டவர்களோடும் தொடர்புடைய தலம். 'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' நூலாசிரியர் சிவத்திரு. வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்களின் பிரயத்தனத்தினால் வெளிக்கொணரப் பெற்ற திருப்புகழ் தலங்களுள் இத்தலமும் ஒன்று. 

ஓரளவு விசாலமான ஆலய வளாகம், நன்கு புனரமைக்கப் பெற்றுள்ள நிலையில் திகழ்கின்றது. முக்கண் முதல்வர் 'விக்கிரம சோளீஸ்வரர்' எனும் திருநாமத்திலும், அம்பிகை வித்தகச் செல்வியாகவும் எழுந்தருளி இருக்கின்றனர். வெளிப்பிரகாரச் சுற்றின் பின்புறம், வலது பக்கத்தில் திருப்புகழ் தெய்வமான நம் கந்தக் கடவுள் ஆறு திருமுகங்கள்; பன்னிரு திருக்கரங்களுமாய், இரு தேவியரும் உடனிருக்க, பீடத்தின் மீது நின்ற திருக்கோலத்தில் அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றான். 

இவ்வாலயத்திற்கு மிக அருகிலேயே அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற கன்னபுரம் மாரியம்மன் திருக்கோயிலையும் அவசியம் தரிசித்து மகிழ்தல் வேண்டும். 

அருணகிரிப் பெருமான் இம்மூர்த்தியை ஒரு திருப்பாடலால் போற்றிப் பரவியுள்ளார், 

(Google Maps: Vikrama cholleswarar Kovil, Kannapuram, Patchapalayam, Tamil Nadu 638701, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தன்னதனத் தன்னதனத் தன்னதனத்
     தன்னதனத் தனாதாத்த ...... தந்ததான

அன்னமிசைச் செந்நளினச் சென்மி கணக்கந்!நியமத்
     தன்ன மயப் புலால் யாக்கை ...... !துஞ்சிடாதென்

றந் நினைவுற்றல் நினைவுற்றன்னியரில் தன்னெறி!புக்
     கன்னிய சற்றுலா மூச்சடங்க யோகம்

என்னுமருள் கின்னமுடைப் பல்நவை கற்றின்னவை!விட்
     டின்னணம் எய்த்தடா மார்க்கம் !இன்புறாதென்

றின்னதெனக்கென்னும் மதப் புன்மை கெடுத்தின்னல்!விடுத்
     தின்னதெனப் படா வாழ்க்கை ...... தந்திடாதோ

கன்னல் மொழிப் பின்னளகத்தன்ன நடைப் பன்னஉடைக்
     கண்ணவிர்அச் சுறாவீட்டு ...... கெண்டையாளைக்

கன்னமிடப் பின்னிரவில் துன்னுபுரைக் கல்முழையில் 
     கல்நிலையில் புகா வேர்த்து ...... நின்றவாழ்வே

பொன்னசலப் பின்னசலச் சென்னியில்நல் கன்னபுரப்
     பொன்னி நதிக் கராநீர்ப் புயங்க நாதா

பொன்மலையில் பொன்னி(ன்) நகர்ப் புண்ணியர்பொற் பொன்மவுலிப்
     பொன்னுலகத்திராசாக்கள் ...... தம்பிரானே


2022 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)


















No comments:

Post a Comment