(நடு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: நடு நாடு
மாவட்டம்: கடலூர்
திருக்கோயில்: அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
விழுப்புரத்திலிருந்து 30 கி.மீ தூரத்திலும், கடலூரிலிருந்து 35 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ள தலம் திருவாமூர், நாவுக்கரசு சுவாமிகளின் அவதாரத் தலம், திருநாவுக்கரசரை ஈன்ற புகழனார்; மாதினியார் தம்பதியர் பலகாலும் வழிபட்டு வந்த தலம், பெற்றோர்கள் இருவரும் சிவபதம் சேர்ந்த பின்னர் சிறு பிராயத்திலிருந்த நாவுக்கரசு சுவாமிகளும், அவர்தம் தமக்கையார் திலகவதியாரும் எண்ணற்ற திருத்தொண்டுகளையும் தர்ம காரியங்களையும் புரிந்து வந்த தலம், சிறிய அழகிய திருக்கோயில் வளாகம், மூலக் கருவறையில் சிவமூர்த்தி பசுபதீஸ்வரர் எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றார், அம்பிகை திரிபுரசுந்தரியாய் எழுந்தருளி இருக்கின்றாள்.
திருவாமூர் தேவாரத் தலமாகக் குறிக்கப் பெறவில்லை எனினும் 'சாம்பலைப் பூசி' என்று துவங்கும் அப்பர் அடிகளின் பொதுத் திருப்பதிகத்தின் ஒவ்வொரு திருப்பாடலும் 'எம்மையாளும் பசுபதியே' என்று முடிவுறுவதால் சுவாமிகள் தம்முடைய அவதாரத் தலத்திலுள்ள பசுபதீஸ்வரரையே போற்றியிருக்க வேண்டும் என்பது ஆன்றோர்களின் கருத்து, இதன் அடிப்படையிலேயே மூலக் கருவறைக்கு அருகில் இத்திருப்பதிகம் பொறிக்கப் பெற்றுள்ளது,
-
சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டு நின்தாள்பரவி
ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய் இரும் கங்கையென்னும்
காம்பலைக்கும் பணைத் தோளி கதிர்ப்பூண் வனமுலைமேல்
பாம்பலைக்கும் சடையாய் எம்மையாளும் பசுபதியே .
வெளிபிரகாரத்தின் துவக்கத்திலேயே திருப்புகழ் தெய்வமான நம் கந்தக் கடவுள் சிறிய திருமேனியனாய், இரு தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான், அருணகிரிநாதர் இம்மூர்த்திக்கென ஒரு திருப்புகழ் திருப்பாடலை அருளியுள்ளார்,
இத்தலத் திருப்புகழில் 'மாது புகழை வளர்க்கும் திருவாமூர்' என்று திலகவதியாரின் திருத்தொண்டினையும் குறிப்பிட்டுச் சிறப்பிக்கின்றார் அருணகிரியார்.
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தான தனன தனத்தந் ...... தனதான
சீத மதியமெறிக்கும் ...... தழலாலே
சீறி மதனன் வளைக்கும் ...... சிலையாலே
ஓத மருவியலைக்கும் ...... கடலாலே
ஊழியிரவு தொலைக்கும் ...... படியோதான்
மாது புகழை வளர்க்கும் ...... திருவாமூர்
வாழு மயிலிலிருக்கும் ...... குமரேசா
காதலடியர் கருத்தின் ...... பெருவாழ்வே
காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே.
(2020 அக்டோபர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment