(நடு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: நடு நாடு
மாவட்டம்: கடலூர்
திருக்கோயில்: அருள்மிகு பழமலை நாதர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
கடலூரிலிருந்து 59 கி.மீ தூரத்திலும், சிதம்பரத்திலிருந்து 57 கி.மீ தூரத்திலும், ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து 20 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில். தேவார மூவராலும் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது, சுந்தர மூர்த்தி நாயனார் பொன் பெற்ற தலம். விபசித்து முனிவர்; குரு நமசிவாயர் உள்ளிட்ட எண்ணிறந்தோர் அருள் பெற்ற தலம். (தற்பொழுது குடமுழுக்குத் திருப்பணி நடந்தேறி வருகின்றது, சுமார் ஒரு வருட காலத்தில் அப்பணி நிறைவுற்றுக் கும்பாபிஷேகம் நடந்தேறும் என்று அறிகின்றோம்.
மிக மிக மிகப் பிரமாண்டமான திருக்கோயில் வளாகம், மூலக் கருவறையில் நெடிதுயர்ந்த திருமேனியில் சிவமூர்த்தி விருத்தகிரீஸ்வரராய் ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றார், உமையன்னை விருத்தாம்பிகை; இளமை நாயகி எனும் இருவேறு திருக்கோலங்களில் எழுந்தருளி இருக்கின்றாள். உட்பிரகாரத்தில், மூலக் கருவறையின் பின்புறம் முருகப் பெருமான் இருவேறு திருக்கோலங்களில் எழுந்தருளி இருக்கின்றான். எனினும் மூன்றாம் பிரகாரத்தில், பன்னிரு திருக்கரங்கள்; ஆறு திருமுகங்களுமாய், இரு தேவியரும் உடனிருக்க, மயில் மீதமர்ந்து எழுந்தருளியுள்ள அறுமுக தெய்வமே திருப்புகழ் பெற்றுள்ள மூர்த்தி, அருணகிரியார் இப்பெருமானுக்கென 3 திருப்புகழ் திருப்பாடல்களை அருளியுள்ளார்.
4ஆம் பிரகாரத்தில், தனிக்கோயில் போன்றதொரு அமைப்பில் கந்தக் கடவுள், 28 சிவாகமங்களை பூசிக்கும் மற்றுமொரு திருக்கோலத்தில், ஒரு திருமுகம்; நான்கு திருக்கரங்களுமாய் இரு தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான், இச்சன்னிதியினைச் சுற்றிலும் 28 ஆகமங்கள் ஒவ்வொன்றிற்குமான சிவலிங்கத் திருமேனிகளைத் தரிசித்து மகிழலாம்.
(Google Maps: Sri Virudhagireeswarar Temple, Virudhachalam, Tamil Nadu 606001, India)
(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 3.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தனத்தானன தானன தானன
தனத்தானன தானன தானன
தனத்தானன தானன தானன ...... தனதான
குடத் தாமரையாம் எனவேஇரு
தனத்தார்மதி வாள்நுதலார்இருள்
குழல் காடின மாமுகில் போல் முதுகலை மோதக்
குலக்கார் மயிலாம் எனவே கயல்
விழித்தார் கரமேல்கொடு மாமுலை
குடத்தியாழ் கிளியாம் எனவேகுயில் ...... குரலோசை
படித்தார் மயிலாம் எனவேநடை
நெளித்தார்பல காமுகர் வார்கலை
பழிப்பார்அவர் ஆசையை மேல்கொடு ...... விலைமாதர்
படிக்கார் மினலாம் எனவே நகை
புரித்தார்பலர் வாயிதழ் சேர்பொருள்
பறிப்பார் பழிகாரிகள் நாரிகள் உறவாமோ
அடைத்தார் கடலோர்வலி ராவண
குலத்தோடரிஓர் சரனார் சினம்
அழித்தார் முகிலேய் நிற ராகவர் ...... மருகோனே
அறுத்தார் அயனார்தலையே புரம்
எரித்தார் அதிலே புலனார்உயிர்
அளித்தார் உடல் பாதியிலேஉமை ...... அருள்பாலா
விடத்தார் அசுரார் பதி வேரற
அடித்தாய் கதிர் வேல்கொடு சேவகம்
விளைத்தாய் குடிவாழமரோர் சிறை ...... மிடிதீர
விழித்தாமரை போலழகா குற
மகட்கான வணா எனதாய்உறை
விருத்தாசலம் வாழ்மயில் வாகன ...... பெருமாளே.
திருப்பாடல் 2:
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
திருமொழி உரைபெற அரன்உனதுழிபணி
செயமுனம்அருளிய ...... குளவோனே
திறலுயர் மதுரையில் அமணரை உயிர்கழு
தெறிபட மறுகிட ...... விடுவோனே
ஒருவரும் உனதருள் பரிவிலர் அவர்களின்
உறுபடர் உறும்எனை ...... அருள்வாயோ
உலகினிள் அனைவர்கள் புகழ்வுற அருணையில்
ஒருநொடி தனில்வரு ...... மயில்வீரா
கருவரி உறுபொரு கணைவிழி குறமகள்
கணின்எதிர் தருவென ...... முனமானாய்
கருமுகில் பொருநிற அரிதிரு மருமக
கருணையில் மொழிதரு ...... முதல்வோனே
முருகலர் தருவுறை அமரர்கள் சிறைவிட
முரணுறும் அசுரனை ...... முனிவோனே
முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ்
முதுகிரி வலம்வரு ...... பெருமாளே.
திருப்பாடல் 3:
தனதத்த தனதத்த தனதத்த தனதத்த
தனதத்த தனதத்த ...... தனதான
பசையற்ற உடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி
பறியக்கை சொறியப்பல் ...... வெளியாகிப்
படலைக்கு விழிகெட்ட குருடுற்று மிகநெக்க
பழம்உற்று நரைகொக்கின் ...... நிறமாகி
விசைபெற்று வருபித்தம் வளியைக்கணிலைகெட்டு
மெலிவுற்று விரல்பற்று ...... தடியோடே
வெளிநிற்கும் விதம்உற்ற இடர்பெற்ற ஜனனத்தை
விடுவித்துன் அருள் வைப்பதொருநாளே
அசைவற்ற நிருதர்க்கு மடிஉற்ற பிரியத்தின்
அடல்வஜ்ர கரன்மற்றும் ...... உள வானோர்
அளவற்ற மலர்விட்டு நிலமுற்று மறையச்செய்
அதுலச் சமரவெற்றி ...... உடையோனே
வசையற்று முடிவற்று வளர்பற்றின் அளவற்ற
வடிவுற்ற முகில்கிட்ணன் ...... மருகோனே
மதுரச் செமொழி செப்பி அருள்பெற்ற சிவபத்தர்
வளர் விர்த்தகிரிஉற்ற ...... பெருமாளே.
(2020 நவம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment