Sunday, September 30, 2018

வடுகூர்

(நடு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: நடு நாடு

மாவட்டம்: புதுவை

திருக்கோயில்: அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மை சமேத வடுகீஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

புதுவை மாநில எல்லைக்குள், புதுவையிலிருந்தும் விழுப்புரத்திலிருந்தும் சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது திருவடுகூர், இங்குள்ள ஆண்டவனார் கோயில் எனும் சிவாலயம் திருஆண்டார்கோவில் என்று பின்னாளில் மருவி, தற்பொழுது இவ்வூரின் பெயரும் 'திருவாண்டார் கோயில்' என்றே வழங்கப் பெற்று வருகின்றது.  ஞானசம்பந்த மூர்த்தி பாடிப் பரவிய திருத்தலம்.

சிவபெருமான் வடுகீஸ்வரர்; பஞ்சநதீஸ்வரர் எனும் திருநாமங்களிலும் அம்பிகை திரிபுரசுந்தரி எனும் திருநாமத்திலும்  எழுந்தருளி இருக்கின்றனர். வெளிப் பிரகாரத்தை வலம் வருகையில், கருவறையின் பின்புறம், வலது புறத்தில் வேலாயுத தெய்வம் ஆறு திருமுகங்களுடனும்; பன்னிரு திருக்கரங்களில் ஆயுதங்களுடனும், இரு தேவியரும் உடனிருக்க, திருமுகத்தில் புன்முறுவலோடு, மயில் மீதமர்ந்த அற்புதத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். 

(Google Maps: NNT016 - Panchanadisvara temple, Thiruvandarkoil)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடலுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 

தனதன தனனா தனதன தனனா
     தனதன தனனா ...... தனதான

அரிஅயன் அறியாதவர் எரிபுர !மூ
     ணதுபுக நகை ஏவிய நாதர்

அவிர்சடை மிசையோர் வனிதையர் பதி!சீ
     றழலையும் மழுநேர் ...... பிடிநாதர்

வரைமகளொரு கூறுடையவர் !மதனா
     கமும்விழ விழிஏவிய நாதர்

மனமகிழ் குமரா என உனதிருதாள்
     மலரடி தொழுமாறருள்வாயே

அருவரை இருகூறிடஒரு மயில்மேல்
     அவனியை வலமாய் ...... வருவோனே

அமரர்கள் இகல் நீடசுரர்கள் சிரமேல்
     அயில்தனை விசையாய் ...... விடுவோனே

வரிசையொடொருமா தினைதரு வனமே
     மருவியொர் குறமாதணை வேடா

மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர்
     வருதவ முநிவோர் ...... பெருமாளே


(2021 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:

Post a Comment