Sunday, September 30, 2018

திருமுட்டம் (ஸ்ரீமுஷ்ணம்):

(நடு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: நடு நாடு

மாவட்டம்: கடலூர் 

திருக்கோயில்: அருள்மிகு அன்னை பெரிய நாயகி சமேத ஸ்ரீநிதிலேஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

விருத்தாசலத்திலிருந்து 20 கி.மீ தொலைவிலும், எருக்கத்தம்புலியூரிலிருந்து 8 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது ஸ்ரீமுஷ்ணம். பிரசித்தி பெற்ற பூவராகப் பெருமாள் திருக்கோயிலுக்கு மிக அருகிலேயே அமையப் பெற்றுள்ள இத்தலத்தினை அருணகிரிநாதர் திருமுட்டம் என்று குறிக்கின்றார். 

திருக்கோயிலுக்கு எதிரில் அமைந்துள்ள பெரியதொரு திருக்குளத்தினை தரிசித்தவாறே ஆலயத்தினுள் நுழைகின்றோம், மிகப் பிரமாண்டமான திருக்கோயில் வளாகம், 12ஆம் நூற்றாணடில் குலோத்துங்க சோழனால் எழுப்பப்பெற்ற இக்கற்கோயில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பேணப் பெற்று வருகின்றது. மூல மூர்த்தி நித்திலேஸ்வரர் சிறிய திருமேனியராய் எழுந்தருளி இருக்கின்றார், அம்பிகை பெரிய நாயகி, ஹரிபுஜேஸ்வரர் எனும் மற்றொரு திருச்சன்னிதியையும் பிரகாரச் சுற்றில் தரிசிக்கலாம். 

வெளிப் பிரகாரத்தினை வலம் வருகையில், மூலக் கருவறையின் பின்புறம் திருப்புகழ் தெய்வமான முருகக் கடவுள் ஆறு திருமுகங்களோடு, இரு தேவியரும் உடனிருக்க, மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான், அருணகிரியார் இம்மூர்த்திக்கு இரு திருப்புகழ் திருப்பாடல்களை அருளியுள்ளார். அவசியம் தரிசித்துப் போற்ற வேண்டிய திருத்தலம்.


(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 

திருப்பாடல் 1:
தனனத்த தான தனனத்த தான
     தனனத்த தான ...... தனதான

கழைமுத்து மாலை புயல்முத்து மாலை
     கரிமுத்து மாலை ...... மலைமேவும் 

கடிமுத்து மாலை வளைமுத்து மாலை
     கடல்முத்து மாலை ...... அரவீனும்

அழல்முத்து மாலை இவைமுற்று மார்பின் 
     அடைவொத்துலாவ ...... அடியேன்முன்

அடர்பச்சை மாவில் அருளிற்பெணோடும் 
     அடிமைக் குழாமொடருள்வாயே

மழையொத்த சோதி குயில்தத்தை போலும் 
     மழலைச் சொலாயி ...... எமையீனும் 

மதமத்த நீல களநித்த நாதர்
     மகிழ்சத்தி ஈனும் ...... முருகோனே

செழுமுத்து மார்பின் அமுதத் தெய்வானை
     திருமுத்தி மாதின் ...... மணவாளா

சிறையிட்ட சூரர் தளைவெட்டி ஞான
     திருமுட்ட மேவு ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தனனத் தத்தன தானன தானன
     தனனத் தத்தன தானன தானன
          தனனத் தத்தன தானன தானன ...... தனதான

சரம்வெற்றிக் கயலாம்எனும் வேல்விழி
     சிலைவட்டப் புருவார்குழல் கார்முகில்
          தனமுத்துக் கிரியாம்எனும் நூலிடை ...... மடவார்கள்

சனுமெத்தப் பரிவாகிய மாமயல் 
     இடுமுத்தித் திகழ்மால் கொடு பாவையர்
          தகுதத்தக்கிட தோதகு தீதென ...... விளையாடும்

விரகத் துர்க்குண வேசையர் ஆசையர்
     பணமெத்தப் பறிகாரிகள் மாறிகள்
          விதமெத்தக் கொடு மேவிகள் பாவிகள் ...... அதிபோக

மெலிவுற்றுக் குறி நாறிகள் பீறிகள்
     கலகத்தைச் செயும் மோடிகள் பீடிகள்
          விருதிட்டுக்குடி கேடிகள் சேடிகள் ...... உறவாமோ

பொருவெற்றிக்கழை வார்சிலையான்உடல் 
     எரிபட்டுச் சருகாய் விழவேநகை
          புகுவித்தப் பிறை வாழ்சடையான்இடம் ..... ஒருமாது

புகழ்சத்திச் சிலுகா வணம் மீதுறை
     சிவபத்திப் பரமேஸ்வரியாள் திரி
          புவனத்தைப் பரிவாய் முதல்ஈனுமை ...... அருள்பாலா

திரையிற் பொற்கிரியாடவும் வாசுகி
     புனைவித்துத் தலை நாள் அமுதார்சுவை
          சிவ பத்தர்க்கிதுவாம் எனவே பகிர் ...... அரிராமர்

திருவுற்றுப்பணி ஆதிவராகர்தம் 
     மகளைப் பொற்தன ஆசையொடாடிய
          திருமுட்டப்பதி வாழ்முருகா சுரர் ...... பெருமாளே.

(2020 நவம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:

Post a Comment