(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: சோழ நாடு (காவிரி வடகரை)
மாவட்டம்: திருச்சி
திருக்கோயில்: அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
திருச்சி மாவட்டத்தில், திருச்சியிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவிலும், லால்குடியிலிருந்து 4.5 கி.மீ தொலைவிலும் அமையப் பெற்றுள்ள திருத்தலம். மிருகண்டு முனிவர்; சூரியன்; சந்திரன்; இந்திரன் ஆகியோர் பூசித்துப் பேறு பெற்றுள்ளனர். ஞானசம்பந்த மூர்த்தி பாடிப் பரவியுள்ள பதி,
-
(ஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1)
செம்பொனார் தரு வேங்கையும், ஞாழலும், செருந்தி, செண்பகம், ஆனைக்
கொம்பும், ஆரமும், மாதவி சுரபுனை குருந்தலர் பரந்துந்தி
அம்பொன் நேர்வரு காவிரி வடகரை மாந்துறை உறைகின்ற
எம்பிரான், இமையோர்தொழு பைங்கழல் ஏத்துதல் செய்வோமே
முக்கண் முதல்வர் ஆம்ரவனேஸ்வரர் எனும் திருநாமத்திலும், உமையன்னை பாலாம்பிகையாகவும் எழுந்தருளி இருக்கின்றனர். வெளிப்பிரகாரச் சுற்றின் பின்புறம் திருப்புகழ் தெய்வமான நம் கந்தப் பெருமான் ஒரு திருமுகம் - நான்கு திருக்கரங்களுடன் - தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் - சுமார் 4அடி உயரத் திருமேனியில் அற்புதமாய்த் திருக்காட்சி தருகின்றான். அருணகிரியார் இம்மூர்த்தியை ஒரு திருப்பாடலால் போற்றிப் பரவுகின்றார்,
(Google Maps: Thirumanthurai Shiva Temple : Padal Petra Sthalam, Mandurai, Tamil Nadu 621703, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தாந்தன தனந்த தாந்தன தனந்த
தாந்தன தனந்த ...... தனதான
ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து
ஆய்ஞ்சு தளர் சிந்தை ...... தடுமாறி
ஆர்ந்துள கடன்கள் வாங்கவும் அறிந்து
ஆண்டுபல சென்று ...... கிடையோடே
ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து
ஓய்ந்துணர்வழிந்து ...... உயிர்போமுன்
ஓங்குமயில் வந்து சேண்பெறஇசைந்து
ஊன்றிய பதங்கள் ...... தருவாயே
வேங்கையும் உயர்ந்த தீம்புனம் இருந்த
ஏந்திழையின் இன்ப ...... மணவாளா
வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச
வேண்டிய பதங்கள் ...... புரிவோனே
மாங்கனியுடைந்து தேங்கவயல் வந்து
மாண்புநெல் விளைந்த ...... வளநாடா
மாந்தர் தவர் உம்பர்கோன் பரவி நின்ற
மாந்துறை அமர்ந்த ...... பெருமாளே
No comments:
Post a Comment