Saturday, October 27, 2018

திருவேட்களம்

(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (காவிரி வடகரை)

மாவட்டம்: கடலூர்

திருக்கோயில்: அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

தில்லை திருக்கோயிலிலிருந்து சுமார் 3 1/2 கி.மீ பயணத் தொலைவில் அமைந்துள்ளது திருவேட்களம். ஞானசம்பந்த மூர்த்தி; அப்பர் சுவாமிகள் இருவராலும் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. இறைவர் பாசுபதேஸ்வரராகவும், உமையன்னை சற்குணாம்பிகையாகவும் எழுந்தருளி இருக்கின்றனர். 

வெளிப்பிரகாரச் சுற்றில், மூலக் கருவறையின் பின்புறம் சிவகுமரன் ஆறு திருமுகம்; பன்னிரு திருக்கரங்களோடு மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில், இரு தேவியரும் உடனிருக்கத் திருக்காட்சி தருகின்றான். அருணகிரியார் இம்மூர்த்தியை 'சதுரத்தரை'; 'மாத்திரையாகிலும்' எனும் இரு திருப்பாடல்களால் போற்றிப் பணிகின்றார்.

(Google Maps: Sri Pasupatheswarar Temple, Thiruvetkulam, Annamalai Nagar, Chidambaram, Tamil Nadu 608002, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனனத்தன தாத்தன தானன
     தனனத்தன தாத்தன தானன
          தனனத்தன தாத்தன தானன ......தனதான

சதுரத்தரை நோக்கிய பூவொடு
     கதிரொத்திட ஆக்கிய கோளகை
          தழையச்சிவ பாக்கிய நாடக ...... அநுபூதி

சரணக்கழல் காட்டியென்ஆணவ
     மலமற்றிட வாட்டிய ஆறிரு
          சயிலக்குலம் ஈட்டிய தோளொடு ...... முகமாறும் 

கதிர்சுற்றுக நோக்கிய பாதமும் 
     மயிலிற்புற நோக்கியனாமென
          கருணைக்கடல் காட்டிய கோலமும் ...... அடியேனைக்

கனகத்தினும் நோக்கினிதாய்!அடி
     யவர் முத்தமிழால் புகவே!பர
          கதிபெற்றிட நோக்கிய பார்வையும் ...... மறவேனே

சிதறத்தரை நாற்றிசை பூதர
     நெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடி
          சிதறக் கடல்ஆர்ப்புறவே அயில் ...... விடுவோனே

சிவபத்தினி கூற்றினை மோதிய
     பதசத்தினி மூத்த விநாயகி
          செகம்இப்படி தோற்றிய பார்வதி ...... அருள்பாலா

விதுரற்கும்அராக் கொடியானையும்
     விகடத் துறவாக்கிய மாதவன்
          விசையற்குயர் தேர்ப்பரி ஊர்பவன் ...... மருகோனே

வெளிஎண்திசை சூர்ப் பொருதாடிய
     கொடிகைக்கொடு கீர்த்திஉலாவிய
          விறல்மெய்த் திருவேட்களம் மேவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தாத்தன தானன தாத்தன தானன
     தாத்தன தானன ...... தனதான

மாத்திரையாகிலு(ம்) நாத்தவறாளுடன்
     வாழ்க்கையை நீடென ...... மதியாமல்

மாக்களை யாரையும் ஏற்றிடு சீலிகள்
     மாப்பரிவே எய்தி ...... அநுபோக

பாத்திரம் ஈதென மூட்டிடும்ஆசைகள்
     பாற்படு ஆடகம் அதுதேடப்

பார்க்கள மீதினில் மூர்க்கரையே கவி
     பாற்கடலான் என ...... உழல்வேனோ

சாத்திரம் ஆறையும் நீத்த மனோலய
     சாத்தியர் மேவிய ...... பதவேளே

தாத்தரி தாகிட சேக்கெனு மாநட
     தாள் பரனார்தரு...... குமரேசா

வேத்திர சாலமதேற்றிடு வேடுவர்
     மீக்கமுதா மயில் ...... மணவாளா

வேத்தமதாம் மறைஆர்த்திடு சீர்திரு
     வேட்களம் மேவிய ...... பெருமாளே

(2023 நவம்பர் மாதம் சென்றிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)




















No comments:

Post a Comment