Saturday, October 27, 2018

திருநெல்வாயில் (சிவபுரி)

(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (காவிரி வடகரை)

மாவட்டம்: கடலூர்

திருக்கோயில்: அருள்மிகு உச்சி நாதேஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

சிதம்பம்பரத்திலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவிலும், திருவேட்களம் எனும் மற்றொரு திருப்புகழ் தலத்திலிருந்து சுமார் 3 1/2 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது திருநெல்வாயில் (தற்கால வழக்கில் சிவபுரி). ஞானசம்பந்த மூர்த்தியால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. சிவபரம்பொருள் இங்கு உச்சிநாதேஸ்வரராக எழுந்தருளி இருக்கின்றார், இறைவி கனகாம்பிகை. 

வெளிப்பிரகாரத்தை வலம் வருகையில், மூலக் கருவறையின் பின்புறம்; வலது பக்கத்தில் நம் கந்தப் பெருமான் ஒரு திருமுகம்; நான்கு திருக்கரங்களோடு நின்ற திருக்கோலத்தில் 'சுப்பிரமணியர்' எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரியார் இம்மூர்த்தியை 'வயல்கள் மேவு நெல்வாயில் வீற்றிருந்த பெருமாளே' என்று போற்றிப் பரவுகின்றார்.

(Google Maps: Thirunelvayil Shiva Temple, Sivapuri, Tamil Nadu 608001, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனன தானன தானனாத் தனந்த
     தனன தானன தானனாத் தனந்த
          தனன தானன தானனாத் தனந்த ...... தனதான

அறிவிலாதவர் ஈனர்பேச்சிரண்டு
     பகரு நாவினர் லோபர்தீக் குணங்கள் 
          அதிக பாதகர் மாதர்மேற் கலன்கள் ...... புனையாதர்

அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து
     திரியு மானுடர் பேதைமார்க்கிரங்கி
          அழியு மாலினர் நீதிநூற் பயன்கள் ...... தெரியாத

நெறியிலாதவர் சூதினால் கவர்ந்து
     பொருள்செய் பூரியர் மோகமாய்ப் ப்ரபஞ்ச
          நிலையில் வீழ்தரு மூடர்பால் சிறந்த ...... தமிழ்கூறி

நினைவு பாழ்பட வாடிநோக்கிழந்து
     வறுமையாகிய தீயின்மேல் கிடந்து
          நெளியு நீள்புழு ஆயினேற்கிரங்கி ...... அருள்வாயே

நறிய வார்குழல் வானநாட்டரம்பை
     மகளிர் காதலர் தோள்கள் வேட்டிணங்கி
          நகைகொடேழிசை பாடிமேற் பொலிந்து ...... களிகூர

நடுவிலாத குரோதமாய்த் தடிந்த
     தகுவர்மாதர் மணாளர்தோள் பிரிந்து
          நசை பொறாதழுதாகமாய்த்தழுங்கி ...... இடர்கூர

மறியும் ஆழ்கடலூடு போய்க் கரந்து
     கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து
          வளருமாஇரு கூறதாய்த் தடிந்த ...... வடிவேலா

மருவு காளமுகீல்கள் கூட்டெழுந்து
     மதியுலாவிய மாடமேல் படிந்த
          வயல்கள் மேவுநெல் வாயில்வீற்றிருந்த ...... பெருமாளே.


(2023 நவம்பர் மாதம் சென்றிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

























No comments:

Post a Comment