Saturday, November 24, 2018

பெருங்குடி:

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: திருச்சிராப்பள்ளி 

திருக்கோயில்: அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்

திருச்சியிலிருந்து 13 கி.மீ தொலைவில், வயலூர் செல்லும் மார்க்கத்தில், சோமரசம் பேட்டை எனும் சிற்றூரிலிருந்து 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது திருப்புகழ் தலமான பெருங்குடி. வயல்வழியை மட்டும் வைத்துக் கணக்கிட்டால் வயலூருக்கும் பெருங்குடிக்கும் இடையே சுமார் 1 கி.மீ தூரமே உள்ளது. அதனாலன்றோ அருணகிரியார் இத்தலத் திருப்புகழின் இறுதி வரிகளில் 'வயலூரா' என்று போற்றிப் பின் 'பெருங்குடி மருங்குறைப் பெருமாளே' என்று குறித்தருளியுள்ளார்.

அடிப்படையில் சிவாலயம், ஆதிப் பரம்பொருள் 'ஸ்ரீஅகஸ்தீஸ்வரர்' எனும் திருநாமத்துடன் எழுந்தருளி இருக்கின்றார், அம்பிகையின் திருநாமம் சிவகாமசுந்தரி. சிவமூர்த்தியின் திருச்சன்னிதிக்குள் நுழையுமுன்னர் இடது புறம் ஸ்ரீமகாவிஷ்ணு நின்ற திருக்கோலத்திலும், ஸ்ரீமகாலட்சுமித் தாயாரோடு கூடிய அமர்ந்த திருக்கோலத்திலும் எழுந்தருளி இருக்கின்றார், வலது புறம் நமது திருப்புகழ் நாயகன் 'ஸ்ரீபாலசுப்பிரமணியர்' எனும் திருநாமத்துடன், நின்ற திருக்கோலத்தில், ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களுடன், தெய்வயானைத் தாயாரோடு, பேரழகுத் திருத்தோற்றத்தில் எழுந்தருளி இருக்கின்றான்.

மிகவும் ஏகாந்தமான சூழலில் அமையப் பெற்றுள்ள சிறு ஆலயம், ஆலய வளாகத்தில், நாற்புறமும், அழகழகான பூச்செடிகளோடு பொருந்தியுள்ள திருநந்தவனம் அமையப் பெற்றிருப்பது கூடுதல் அழகு.

(Google Maps: Perungudi Agastheeswarar Temple, Perungudi village, Malliampatthu; Srirangam Tk, Tamil Nadu 620102, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனந்தன தனந்தன தனந்தன தனந்தன
     தனந்தன தனந்தன ...... தனதான

தலங்களில் வரும்கன இலம்கொடு மடந்தையர்
      தழைந்த உதரம்திகழ் ...... தசமாதம்

சமைந்தனர் பிறந்தனர் கிடந்தனர் இருந்தனர்
     தவழ்ந்தனர் நடந்தனர் ...... சிலகாலம்

துலங்குநல பெண்களை முயங்கினர் மயங்கினர்
     தொடும் தொழிலுடன் தம க்ரகபாரம்

சுமந்தனர் அமைந்தனர் குறைந்தனர் இறந்தனர்
     சுடும்பினை எனும்பவம் ஒழியேனோ

இலங்கையில் இலங்கிய இலங்களுள் இலங்கருள்
     இலெங்கணும் இலங்கென ...... முறையோதி

இடுங்கனல் குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட
     எழுந்தருள் முகுந்தன்நன் ...... மருகோனே

பெலங்கொடு விலங்கலும் நலங்கயில் கொண்டெறி
     ப்ரசண்டகர தண்தமிழ் ...... வயலூரா

பெரும்பொழில் கரும்புகள் அரம்பைகள் நிரம்பிய
     பெருங்குடி மருங்குறை ...... பெருமாளே.


(2019 நவம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)


No comments:

Post a Comment