Saturday, November 24, 2018

திருத்தவத்துறை:

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: திருச்சிராப்பள்ளி 

திருக்கோயில்: அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்

திருச்சியிலிருந்து 24 கி.மீ தொலைவில் திருத்தவத்துறை எனும் திருப்புகழ் தலம் அமையப்பெற்றுள்ளது, தற்கால வழக்கில் லால்குடி. திருநாவுக்கரசு சுவாமிகளின் தேவாரத்தில் 'பண்டு எழுவர் தவத்துறை' என்று குறிக்கப்
பெற்று 'தேவார வைப்புத் தலமாகவும்' திகழ்கின்றது இப்பதி. அடிப்படையில் சிவத்தலம், ஆலமுண்டருளும் சிவபரம்பொருள் இத்தலத்தில் 'ஸ்ரீசப்தரிஷீஸ்வரர்' எனும் திருநாமத்திலும், அம்பிகை 'பெருந்திருப்பிராட்டியார்'. எனும் திருநாமத்துடனும் எழுந்தருளி இருக்கின்றனர். ஸ்ரீமகாலட்சுமித் தாயார் இத்தல இறையவரைப் பூசித்துத் தவமிருந்து ஸ்ரீமகாவிஷ்ணுவோடு இணையப் பெற்றாள் ஆதலினால் தவத்துறை.

பிரமாண்டமான திருக்கோயில், சப்த ரிஷிகளான 'அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிஷ்டர், கௌதமர், அங்கீரசர், மரீசி' ஆகியோர் இத்தலத்துறையும் சிவமூர்த்தியைப் பூசிக்க, லிங்க மூர்த்தம் இருகூறாகப் பிளந்து ரிஷிகள் எழுவரையும் தன்னுள் ஈர்த்துச் சிவமுத்தியினை அளித்தருள்கின்றது. அர்ச்சகர் கவசப் பட்டையினைச் சிறிது விளக்கி இதற்கான அடையாளக் குறிப்பினைக் காண்பிகின்றார், வியத்தகு திருக்கோலம். ஆலயத்திலுள்ள ஸ்ரீசரஸ்வதியன்னை மற்றும் ஸ்ரீமகாலட்சுமித் தாயார் ஆகியோரின் திருக்கோலங்கள் ஆச்சரியம் பொருந்தியவை, தரிசிப்போரை வியப்பில் ஆழ்த்துபவை. 

திருப்புகழ் தெய்வமான கந்தக் கடவுள் இவ்வாலயத்தில் இருவேறு திருக்கோலங்களில் எழுந்தருளி இருக்கின்றான், சிவசன்னிதியின் உட்ப்ரகாரத்தில், வலது புறத்தில், இரு தேவியருடன் கூடிய நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீசுப்பிரமணியர் எனும் திருநாமத்துடன், எதிரே சிறிய திருமேனியராய் அருணகிரிப் பெருமான் வணங்கியிருக்க, எழுந்தருளி இருக்கின்றான். இரண்டாவது, அம்பிகை திருச்சன்னிதியின் பின்புறம், ஆறுமுகங்களுடன் மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில், இருமருங்கிலும் தேவியரோடு எழுந்தருளி இருக்கின்றான். 

(Google Maps: Sri Saptharisheeswarar Temple, Lalgudi, Thirumanjana street, near Akilandeshwari Nagar, Lalgudi, Tamil Nadu 621601, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தானன தந்தன தத்த தத்தன
     தானன தந்தன தத்த தத்தன
          தானன தந்தன தத்த தத்தன ...... தனதான

காரணியும் குழலைக் குவித்திடு
     கோகனகம் கொடு மெத்தெனப் பிறர்
          காண வருந்தி முடித்திடக் கடு ...... விரகாலே

காதளவும் கயலைப் புரட்டி!ம
     னாதிகள் வஞ்ச மிகுத்திடப்படி
          காமுகர்அன்பு குவித்த கைப்பொருள் ...... உறவாகிப்

பூரண கும்பமெனப் புடைத்தெழு
     சீதள குங்குமம் ஒத்த சித்திர
          பூஷித கொங்கையில்உற்று முத்தணி ...... பிறையான

போருவை ஒன்று நெகிழ்த்துருக்கி மெய்
     யாரையும் நெஞ்சை விலைப் படுத்திடு
          பூவையர் தங்கள் மயக்கை விட்டிட ...... அருள்வாயே

வீரபுயங்கிரி உக்ர விக்ரம
     பூதகணம்பல நிர்த்தமிட்டிட
          வேகமுடன் பறை கொட்டிடக் கழுகினமாட

வீசிய பம்பரம் ஒப்பெனக் களி
     வீச நடம்செய் விடைத் தனித் துசர்
          வேதபரம்பரை உள்களித்திட ...... வரும்வீரா

சீரணியும்திரை தத்தும் முத்தெறி
     காவிரியின் கரை மொத்து மெத்திய
          சீர்புனைகின்ற திருத்தவத்துறை ...... வரும்வாழ்வே

சீறிஎதிர்ந்த அரக்கரைக் கெட
     மோதி அடர்ந்தருள் பட்சமுற்றிய
          தேவர்கள் தம்சிறை வெட்டி விட்டருள் ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தனத்த தத்தன தானன தானன
     தனத்த தத்தன தானன தானன
          தனத்த தத்தன தானன தானன ...... தனதான

நிரைத்த நித்திலம் நீள்மணி மாலைகள்
     பொருத்த வெற்பிணை மார்முலை மேலணி
          நெறித்த நெய்க்குழல் வாள்விழி மாமதி ...... முகமானார்

நெளித்த சிற்றிடை மேல்கலை ஆடையை
     உடுத்தி அத்தம்உளோர் தமையே மயல்
          நிரப்பி நித்தமும் வீதியில் நேருறு ...... நெறியாலே

கரைத்திதக் குயில் போல் மொழி மாதர்கள்
     வலைக்குளில் சுழலா வகையே உன
          கழல் துதித்திடு வாழ்வது தான் மனதுற மேவிக்

கதித்த பத்திமை சாலடியார் சபை
     மிகுத்திழிக்குண பாதகனேன் உயர்
          கதிக்கடுத்துயர்வாகவுமே அருள் உரையாதோ

வரைத் தநுக்கரர் மாதவம் மேவினர்
     அகத்திடத்தினில் வாழ் சிவனார் திரு
          மணிச் செவிக்குள் மெய்ஞ் ஞானமதோதிய ...... வடிவேலா

மதித்த முத்தமிழ் ஆய்வினர் மேலவர்
     உரைத்துளத் திருவாசகமானது
          மனத்துள் எத்தழகார் புகழ் வீசிய ...... மணிமாடத்

திரைக்கடல்பொரு காவிரி மாநதி
     பெருக்கெடுத்துமெ பாய்வள நீர்பொலி
          செழித்த நெற்செநெல் வாரிகளேகுவை ...... குவையாகச்

செருக்கு செய்ப்பதி வாழ்முருகாஅறம்
     வளர்த்த நித்ய கல்யாணி க்ருபாகரி
          திருத்தவத்துறை மாநகர் தானுறை ...... பெருமாளே.


(2019 நவம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:

Post a Comment