Friday, November 30, 2018

வாலிகொண்டபுரம் (வாலிகண்டபுரம்)

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (தென்கரை)

மாவட்டம்: பெரம்பலூர்

திருக்கோயில்: அருள்மிகு வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக்குறிப்புகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே திருப்புகழ் தலம், அருணகிரியார் வாலிகொண்டபுரம் என்றிதனைக் குறிக்கின்றார், தற்கால வழக்கில் சிறிது மருவி வாலிகண்டபுரமாக அறியப் பெற்று வருகின்றது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சிறிது தூரப் பயணித்திலேயே இத்தலத்தை அடைந்து விடலாம். 

ஏகாந்தமான சூழலில் அமையப் பெற்றுள்ள தொல்லியல் துறை ஆலயம். 18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் முகலாயப் படையெடுப்பினால் இத்திருக்கோயில் பல்வேறு சிதைவுகளைச் சந்தித்துள்ளது. ஆலயத்துள் ஆங்காங்கே சிதைவுகளோடு தென்படும் திருமேனிகள் நம்மை வருத்தமுறச் செய்கின்றன. 

வாலி பூசித்த தலம். ஆலயத்தின் உட்பிரகாரத்திற்க்கு நுழையு முன்னரே அமைந்துள்ள 2ஆம் பிரகாரத்தில், இடது புறத்தில் அரிதான திருமேனி அமைப்புடன் கல்யாண விநாயகரும், வலது புறத்தில் மயில் மேலமர்ந்த திருக்கோலத்தில் வேலவனும் (இரு தேவியரும் உடனிருக்க) திருக்காட்சி தருகின்றனர். 

விநாயக மூர்த்தியின் வலது புறம் பாமா ருக்மிணி தேவியரோடு ஸ்ரீகிருஷ்ணன் எழுந்தருளி இருக்கின்றான். இம்மூர்த்தியின் இரு புறங்களிலும் நேர்நோக்கி வணங்கிய நிலையிலுள்ள வாலி மற்றும் ஆஞ்சநேய சுவாமியைத் தரிசித்து மகிழலாம்.

உட்பிரகாரத்தில் சிவபரம்பொருள் வாலீஸ்வரராக எழுந்தருளி இருக்கின்றார், அம்மை வாலாம்பிகையாகத் திருக்காட்சி தருகின்றாள். 

உட்பிரகாரச் சுற்றின் துவக்கத்திலேயே சுமார் 9 அடி நெடிதுயர்ந்த திருமேனியோடு எழுந்தருளியுள்ள பால தண்டாயுத பாணி சுவாமியைத் தரிசித்து வியக்கின்றோம், சற்றும் எதிர்பாராத அற்புதத் திருக்காட்சி. 

திருச்சுவற்றில்; தூண்களில் என்று ஆலயத்துள் எங்கு நோக்கினும் கலை நயத்தோடு கூடிய சிற்ப வேலைப்பாடுகள்.

பிரகாரச் சுற்றின் பின்புறம் திருப்புகழ் தெய்வமான நம் கந்தப்பெருமான் ஆறு திருமுகங்கள்; பன்னிரு திருக்கரங்களோடும், மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில், இரு தேவியரும் உடனிருக்கத் திருக்காட்சி தருகின்றான். திருக்கரங்களிலுள்ள ஆயுதங்கள் ஒவ்வொன்றும் திருத்தமாக, நன்கு தரிசிக்கும் வண்ணம் அமையப் பெற்றுள்ளது. 

அருணகிரியார் இத்தலத்திற்கென ஒரு திருப்பாடலை அருளிச் செய்துள்ளார். 

(Google Maps: Arulmigu Vaaleeswarar Temple)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தான தந்ததன தான தந்ததன
     தான தந்ததன தான தந்ததன
          தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான

ஈஎறும்புநரி நாய்கணம் கழுகு
     காகம் உண்ப உடலே சுமந்திது
          ஏல்வதென்று மதமே மொழிந்துமத ...... உம்பல்போலே

ஏதும்என்றனிட கோலெனும்பரிவு
     மேவி நம்பியிது போதுமென்க சிலர்
          ஏய்தனங்கள்தனி வாகுசிந்தை வசனங்கள்பேசிச்

சீத தொங்கல் அழகா அணிந்துமணம்
     வீச மங்கையர்கள் ஆட வெண்கவரி
          சீற கொம்புகுழல் ஊத தண்டிகையில் ...... அந்தமாகச்

சேர்கனம்பெரிய வாழ்வு கொண்டுழலும்
     ஆசை வெந்திட உனாசை மிஞ்சிசிவ
          சேவை கண்டுனது பாத தொண்டனென ...... அன்பு தாராய்

சூதிருந்த விடர் மேயிருண்ட கிரி
     சூரர் வெந்து பொடியாகி மங்கிவிழ
          சூரியன் புரவி தேர்நடந்துநடு ...... பங்கினோடச்

சோதியந்த பிரமா புரந்தரனும்
     ஆதிஅந்தமுதல் தேவரும் தொழுது
          சூழமன்றில் நடமாடும் எந்தை முதல் ...... அன்புகூர

வாது கொண்டவுணர் மாள செங்கைஅயில்
     ஏவிஅண்டர் குடியேற விஞ்சையர்கள்
          மாதர் சிந்தைகளி கூர நின்று நடனம் கொள்வோனே

வாச கும்பதன மானை வந்து தினை
     காவல் கொண்ட முருகா எணும்பெரிய
          வாலி கொண்ட புரமே அமர்ந்துவளர் ...... தம்பிரானே

(2025 நவம்பர் மாதம் மேற்கொண்ட எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)



















No comments:

Post a Comment