Thursday, December 27, 2018

திருப்போரூர்:

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: காஞ்சிபுரம் 

திருக்கோயில்: அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்

தல வகை: முருகன் திருக்கோயில்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

சென்னையிலிருந்து சுமார் 45 கி.மீ தூரத்திலும், செங்கல்பட்டிலிருந்து 25 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது புராதனத் தலமான திருப்போரூர். அன்னை ஸ்ரீமீனாட்சியின் திருவருளைப் பெற்றிருந்த சிதம்பரம் சுவாமிகள் எனும் தவசீலரின் அரியபெரிய பிரயத்தனத்தினாலும், திருப்பணியாலும் புதையுண்டிருந்த கந்தக்கடவுளின் சுயம்புத் திருமேனி வெளிக்கொணரப் பெற்று தற்பொழுது நாம் தரிசித்து மகிழும் இத்திருக்கோயில் புதுக்கப் பெற்றுள்ளது. நன்கு பராமரிக்கப் பெற்று வரும் விசாலமான ஆலயம், வற்றாத பிரமாண்டமான தீர்த்தக் குளம் திருக்கோயிலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றது.

மூலக் கருவறையில் நெடிதுயர்ந்த நின்ற திருக்கோலத்தில் கந்தசுவாமி தெய்வம் இரு தேவியரோடும் ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றான். சுயம்புத் திருமேனிகள் ஆதலால் திருமுக அமைப்பு திருத்தமாக அமையாத நிலையிலுள்ளது, இருப்பினும் மூல மூர்த்தியின் திருமேனி வடிவழகு தரிசிப்போரைத் தன்வயப் படுத்துகின்றது. தெய்வயானைத் தாயார் மற்றும் வள்ளியம்மை இருவரும் தனித்தனியான திருச்சன்னிதிகளில் எழுந்தருளி இருக்கின்றனர். அருணகிரிப் பெருமான் இம்மூர்த்திக்கு 4 திருப்புகழ் திருப்பாடல்களை அருளிச் செய்துள்ளார்.

(Google Maps: Arulmigu Kandaswamy Temple, Old Mahabalipuram Road, Kanchipuram, Thiruporur, Tamil Nadu 603110, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 4.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனத்தா தானன தானா தானன
     தனத்தா தானன தானா தானன
          தனத்தா தானன தானா தானன ...... தனதான

அனுத்தேன் நேர்மொழியாலே மாமயல்
     உடைத்தார் போலவும் ஓர்நாள்ஆனதில்
          அடுத்தே தூதுகள் நூறாறானதும் ...... விடுவார்கள்

அழைத்தே வீடினிலே தானேகுவர்
     நகைத்தே மோடிகளாவார் !காதலொ
          டடுத்தே மாமுலை மீதே மார்புற ...... அணைவார்பின்

குனித்தே பாகிலை ஈவார் பாதியில்
     கடிப்பார் வாயிதழ் வாய்நீரானது
          குடிப்பார் தேனென நானா லீலைகள் ...... புரிவார்கள்

குறித்தே மாமயலாலே நீள்பொருள்
     பறிப்பார் ஆசுகள் சூழ்மா பாதக
          குணத்தார் மாதர்கள் மேல்ஆசா விட ...... அருள்வாயே

வனத்தே வேடுவர் மாதாம் ஓர்மினை
     எடுத்தே தான் வரவே தான் யாவரும்
          வளைத்தே சூழவும்ஓர் வாளால்வெலும் ...... விறல்வீரா

மலர்த் தேனோடையில் ஓர்மா வானதை
     பிடித்தே நீள்கர வாதாடாழியை
          மனத்தால் ஏவிய மாமால்ஆனவர் ...... மருகோனே

சினத்தே சூரர்கள் போராய் மாளவும்
     எடுத்தோர் வேல்விடு தீரா தாரணி
          திருத்தோளா இருபாதா தாமரை ...... முருகோனே

திருத்தேர் சூழ் மதிளேர்ஆர் தூபிகள்
     அடுக்கார் மாளிகையே நீளேர்உள
          திருப்போரூர்உறை தேவா தேவர்கள் ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தனத்தா தான தந்த தனத்தா தான தந்த
     தனத்தா தான தந்த ...... தனதான

உருக்கார் வாளி கண்கள் பொருப்பார் வார்தனங்கள்
     உகப்பார் வால சந்த்ர ...... நுதல்நூலாம்

உருச்சேர் நீள்மருங்குல் பணைத்தோள்ஓதி கொண்டல்
     உவப்பா மேல்விழுந்து ...... திரிவோர்கள்

அருக்கா மாதர் தங்கள் வரைக்கே ஓடிஇன்ப
     வலைக்கே பூணு நெஞ்சன்  ...... அதிபாவி

அசட்டால் மூடுகின்ற மசக்கால் மாயும்இந்த
     அவத்தால் ஈனமின்றி ...... அருள்வாயே

எருக்கார் தாளி தும்பை மருச்சேர் போது!கங்கை
     யினைச் சூடாதி நம்பர் ...... புதல்வோனே

இருக்காலே நினைந்து துதிப்பார் நாவில்நெஞ்சில்
     இருப்பாய் யானை தங்கும் ...... மணிமார்பா

செருக்காலே மிகுந்த கடற்சூர் மாள வென்ற
     திறல்சேர் வேல்கை கொண்ட ...... முருகோனே

தினைக்கோர் காவல் கொண்ட குறத்தேன் மாது பங்க
     திருப்போரூர் அமர்ந்த ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தான தானன தானன தான தானன தானன
     தான தானன தானன ...... தனதான

சீருலாவிய ஓதிமம் ஆன மாநடை மாமயில்
     சேய சாயல் கலாமதி ...... முகமானார்

தேனுலாவிய மாமொழி மேரு நேரிள மாமுலை
     சேலுலாவிய கூர்விழி ...... குமிழ்நாசி

தாருலாவிய நீள்குழல் வேயளாவிய தோளியர்
     சார்பிலே திரிவேனை நினருளாலே

சாம வேதியர் வானவர் ஓதி நாண்மலர் தூவிய
     தாளில் வீழ வினாமிக ...... அருள்வாயே

காருலாவிய நீள்புன வேடர் மால்வரை மீதுறை
     காவல் மாதினொடாவல் செய்தணைவோனே

காண ஆகம வேதபுராண நூல்பலவோதிய
     காரணா கருணாகர ...... முருகோனே

போருலாவிய சூரனை வாரி சேறெழ வேல்விடு
     பூப சேவக மாமயில் ...... மிசையோனே

போதன் மாதவன் மாதுமை பாதி ஆதியுமேதொழு
     போரி மாநகர் மேவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 4:
தனன தானன தானன தனன தானன தானன
     தனன தானன தானன ...... தனதான

திமிர மாமன மாமட மடமையேன்இடர்ஆணவ
     திமிரமேஅரி சூரிய ...... திரிலோக

தினகரா சிவகாரண பனக பூஷண ஆரண
     சிவசுதாஅரி நாரணன் ...... மருகோனே

குமரி சாமளை மாதுமை அமலி யாமளை பூரணி
     குண கலாநிதி நாரணி ...... தருகோவே

குருகுகா குமரேசுர சரவணா சகளேசுர
     குறவர் மாமகள் ஆசைகொள் ...... மணியே சம்

பமர பார ப்ரபாருண படல தாரக மாசுக
     பசுர பாடன பாளித ...... பகளேச

பசித பாரண வாரண துவச ஏடக மாவயில்
     பரவு பாணித பாவல ...... பரயோக

சம பராமத சாதல சமயம்ஆறிரு தேவத
     சமய நாயக மாமயில் ...... முதுவீர

சகல லோகமும் ஆசறு சகல வேதமுமேதொழு
     சமர மாபுரி மேவிய ...... பெருமாளே.


(2019 ஜூலை மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:

Post a Comment