Thursday, December 27, 2018

ஸ்ரீகாமட்சியன்னை திருக்கோயில் (கவுரிக் கோட்டம்)

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: காஞ்சிபுரம்

திருக்கோயில்: அருள்மிகு ஸ்ரீகாமட்சியன்னை திருக்கோயில் (கவுரிக் கோட்டம்)

தல வகை: அம்பிகை திருக்கோயில்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

மிகப் பிரசித்தமான காஞ்சி காமாக்ஷி திருக்கோயிலை அறியாதார் யார்? எனினும் இவ்வாலயம் திருப்புகழ் தலமாகவும் விளங்குகின்றது என்பது அரிதான குறிப்பன்றோ! இத்தலத்திற்குக் கவுரிக் கோட்டம் எனும் திருப்பெயருமுண்டு, அருணகிரிநாதர் 'சலமலம் விட்ட', 'தலை வலையத்து' என்று துவங்கும் இரு திருப்பாடல்களில் 'கவுரி திருக்கொட்டமர்ந்த இநதிரர் தம்பிரானே' என்று இத்தல மூர்த்தியைப் போற்றி மகிழ்கின்றார். 

திருப்புகழ் தெய்வத்திற்கு இவ்வாலயத்தில் தனிச்சன்னிதி இல்லை எனினும் காமாட்சியன்னையைத் தரிசிக்கச் செல்லும் வழியில், உட்பிரகாரத் திருச்சுவற்றில், 'பால சுப்பிரமணியர்' எனும் பெயர்ப் பலகையின் கீழ் 'மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் சிறிய திருமேனியராய்' கந்தக் கடவுள் ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றான்! திருப்புகழ் பெற்றுள்ள வள்ளி மணாளனைக் காதலோடு தேடிவரும் அடியவர்களின் கண்களுக்கு இம்மூர்த்தி பெருவிருந்தாய்த் திருக்காட்சி அளித்து அருள் புரிகின்றான். 

(சென்னையிலிருந்து 73 கி.மீ தூரத்திலும், செங்கல்பட்டிலிருந்து 40 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது இத்தலம்).

(Google Maps: 
Tamil Nadu 631502, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனதன தத்தத் தனந்த தந்தன
     தனதன தத்தத் தனந்த தந்தன
          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான

சலமலம் விட்டத் தடம்பெருங்குடில்
     சகலவினைக் கொத்திருந்திடும்படி
          சதிரஉறுப்புச் சமைந்து வந்தொரு ...... தந்தைதாயும்

தரவரு பொய்க்குள் கிடந்த கந்தலில்
     உறையும் உயிர்ப்பைச் சமன் துரந்தொரு
          தனியில் இழுக்கப்படும் தரங்கமும் ...... வந்திடாமுன்

பலஉருவத்தைப் பொருந்தி அன்றுயர்
     படியும் நெளிக்கப் படர்ந்த வன்கண
          படமயில் புக்குத் துரந்து கொண்டிகல் ...... வென்றிவேலா

பரிமள மிக்கச் சிவந்த நின்கழல்
     பழுதற நற்சொல் தெரிந்து அன்பொடு
          பகர்வதினிச் சற்றுகந்து தந்திட ...... வந்திடாயோ

சிலையுமெனப்பொற் சிலம்பை முன்கொடு
     சிவமயம் அற்றுத்திடம் குலைந்தவர்
          திரிபுரம்அத்தைச் சுடும்தினம்தரி ...... திண்கையாளி

திருமகள் கச்சுப் பொருந்திடும்தன
     தெரிவை இரக்கத்துடன் பிறந்தவள்
          திசைகளில் ஒக்கப் படர்ந்திடம் பொருகின்ற ஞானக்

கலைகள் அணைக் கொத்தடர்ந்து வம்பலர்
     நதிகொள்அகத்தில் பயந்து கம்பர்மெய்
          கருகஇடத்தில் கலந்திருந்தவள் ...... கஞ்சபாதம்

கருணை மிகுத்துக் கசிந்துளம் கொடு
     கருதும் அவர்க்குப் பதங்கள் தந்தருள்
          கவுரி திருக்கொட்டமர்ந்த இநதிரர் ...... தம்பிரானே.

திருப்பாடல் 2:
தனதன தத்தத் தனந்த தந்தன
     தனதன தத்தத் தனந்த தந்தன
          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான

தலை வலையத்துத் தரம் பெறும்பல
     புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறி
          தரும்அயில் செச்சைப் புயம் கயங்குற ...... வஞ்சியோடு

தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி
     தழுவிய செக்கச் சிவந்த பங்கய
          சரணமும் வைத்துப் பெரும் ப்ரபந்தம் விளம்பு காளப்

புலவனெனத் தத்துவம் தரந்தெரி
     தலைவனெனத் தக்கறம்செயும்குண
          புருஷனெனப் பொற்பதம்தரும் சனனம்பெறாதோ

பொறையன்எனப் பொய்ப் ப்ரபஞ்சம் அஞ்சிய
     துறவனெனத் திக்கியம்புகின்றது
          புதுமையலச் சிற்பரம் பொருந்துகை ...... தந்திடாதோ

குலசயிலத்துப் பிறந்த பெண்கொடி
     உலகடையப் பெற்றஉந்திஅந்தணி
          குறைவற முப்பத்திரண்டறம் புரிகின்ற பேதை

குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி
     கணபண ரத்நப் புயங்க கங்கணி
          குவடு குனித்துப் புரஞ்சுடும் சின ...... வஞ்சிநீலி

கலப விசித்ரச் சிகண்டி சுந்தரி
     கடிய விடத்தைப் பொதிந்த கந்தரி
          கருணைவிழிக் கற்பகம் திகம்பரி ...... எங்களாயி

கருதிய பத்தர்க்கிரங்கும் அம்பிகை
     சுருதி துதிக்கப்படும் த்ரியம்பகி
          கவுரி திருக்கொட்டமர்ந்த இந்திரர் ...... தம்பிரானே.

(2019 ஜூலை மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:

Post a Comment