Thursday, December 27, 2018

வயிரவிவனம்

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: காஞ்சிபுரம்

திருக்கோயில்: அருள்மிகு சோளீசுவரர் - வயிரேசுவரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

காஞ்சிபுரத்தில் 'பிள்ளையார் பாளையம்' எனும் பகுதியில் அமைந்துள்ள அஷ்ட பைரவர் திருக்கோயிலே திருப்புகழ் பெற்றுள்ள 'வயிரவி வனம்' எனும் தலமாகும். 'சோளீஸ்வரர் திருக்கோயில்' என்றும் பிரசித்தமாக அறியப்பட்டு வரும் இந்த ஆலயம் தேவாரத் தலமான திருக்கச்சி மேற்றளியிலிருந்து 5 நிமிட பயணத் தொலைவில் அமைந்துள்ளது.

நெடுநாள் வரையினில் இத்தலம் பஞ்சாபில் இருப்பதாகக் கருதப்பட்டு வந்தது, திரு.வலையப் பேட்டை கிருஷ்ணன் அவர்கள் இதுகுறித்து எண்ணற்ற நூல்களில் ஆராய்ந்துப் பின் காஞ்சியிலுள்ள இத்தலமே வயிரவி வனம் என்று ஐயத்திற்கு இடமின்றி நிறுவியுள்ளார்.

அருணகிரிநாதர் இத்தலத் திருப்புகழில் 'சரஸ்வதி நதிக்கண் வீறு வயிரவி வனம்' என்று குறிக்கின்றார், 'காஞ்சீபுரத்தில் சரஸ்வதி நதியா?' எனும் வினாவிற்கான அற்புத விளக்கத்தினைத் திரு.வலையப் பேட்டை கிருஷ்ணன் அவர்கள் காஞ்சிப் புராணத்தின் வாயிலாக நமக்களிக்கின்றார். பிரம்மா ஒரு சமயம் காஞ்சியில் பெரும் வேள்வியொன்றினைத் துவக்க, அதனைத் தடுக்கும் நோக்குடன் அன்னை சரஸ்வதி பெரு நதியாய்ப் பெருக்கெடுத்து வர, பாற்கடல் வாசனாரான ஸ்ரீமகாவிஷ்ணு நான்முகனாரின் வேள்வியினைக் காக்கும் பொருட்டு அந்நதியைத் தடுக்க, வேகம் தணியப் பெறும் அன்னை சரஸ்வதி 'வேகவதி நதியென' காஞ்சியில் பிரவகித்துப் பாய்கின்றாள். அதன் கரையினில் அமைந்துள்ள தலமே 'வயிரவி வனம்'.

திருக்கோயிலில் மூல மூர்த்தியோடு அஷ்ட பைரவர்கள் மட்டுமே பிரதானமாய் எழுந்தருளி உள்ளனர், அம்பிகைக்குத் தனிச்சன்னிதி இல்லை, ஆலய முகப்பிலேயே இடது புறம் யானை முக தெய்வமும் , வலது புறம் சற்றே தாழ்ந்து அமைந்துள்ள திருச்சன்னிதியினுள் 'இரு தேவியருடன் மயில் மீதமர்ந்த அழகுத் திருக்கோலத்தில் திருப்புகழ் தெய்வமான வேலாயுதக் கடவுளும்' எழுந்தருளி இருக்கின்றனர்.

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனதன தனத்த தான தனதன தனத்த தான
     தனதன தனத்த தான ...... தனதான

அருவரை எடுத்த வீரன் நெரிபட விரற்கள் ஊணும்
     அரனிடமிருக்கும் ஆயி ...... அருள்வோனே

அலை கடலடைத்த ராமன் மிகமன மகிழ்ச்சி கூரும் 
     மணிமயில் நடத்தும் ஆசை ...... மருகோனே

பருதியின் ஒளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோள்!ப
     னிருகர மிகுத்த பார ...... முருகாநின்

பதமலர் உளத்தில் நாளும் நினைவுறு கருத்தர் தாள்கள்
     பணியவும் எனக்கு ஞானம் ...... அருள்வாயே

சுருதிகளுரைத்த வேதன் உரைமொழி தனக்குள்ஆதி
     சொலுவென உரைத்த ஞான ...... குருநாதா

சுரர்பதி தழைத்து வாழ அமர்சிறை அனைத்து மீள
     துணிபட அரக்கர் மாள ...... விடும் வேலா

மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும்
     வயல்புடை கிடக்கு நீல ...... மலர்வாவி

வளமுறு தடத்தினோடு சரஸ்வதி நதிக்கண் வீறு
     வயிரவி வனத்தில் மேவு ...... பெருமாளே.

(2019 பிப்ரவரி மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை) 

1 comment: