Thursday, December 27, 2018

மதுராந்தகம்:

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: காஞ்சிபுரம் 

திருக்கோயில்: அருள்மிகு முருகன் திருக்கோயில் 

தல வகை: முருகன் திருக்கோயில்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

மதுராந்தகப் பகுதியில் இரு திருப்புகழ் தலங்கள் அமைந்துள்ளன, மதுராந்தகம் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமையப் பெற்றுள்ள சிறு முருகன் ஆலயம் மற்றும் புலிப்பரக் கோயில் எனும் சிற்றூரில் அமைந்துள்ள ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் (இதுவே 'வட சிற்றம்பலம்' எனும் தலமுமாகும்).

வெகுகாலமாக மதுராந்தகப் பகுதியிலுள்ள சிறு முருகன் ஆலயமே 'வட சீற்றமபலம்' என்று தவறாகக் கருதப்பட்டு வந்தது, திரு.வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்களின் அரிய பெரிய ஆய்வினால் 'வட சிற்றம்பலம்' எனும் தலம் 'புலிப்பரக் கோயிலில் அமைந்துள்ள அபிதகுஜாம்பிகை சமேத ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் ஆலயமே' என்று ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றிக் கண்டறியப் பெற்றுள்ளது.

இனி மதுராந்தகம் முருகன் திருக்கோயில் குறிப்புகளைக் காண்போம், 
-
சிறு ஆலயம், மூலக் கருவறையில், திருப்புகழ் தெய்வமான நம் கந்தக் கடவுள் ஆறு திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுமாய், மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில், இரு தேவியரும் உடனிருக்க அற்புதமாய் திருக்காட்சி அளித்து அருள் புரிகின்றான். ஆதியில் அமைந்திருந்த, அருணகிரியாரால் பாடல் பெற்றுள்ள மூல மூர்த்தியின் திருமேனி சிறிது பின்னப்பட்டு விட , புதியதொரு திருமேனியைச் செய்வித்துப் பிரதிஷ்டை செய்துள்ளனர். ஆதி மூலவரை அருகில் ஒரு சிறு ஆலயம் போன்ற அமைப்பில் எழுந்தருளச் செய்துள்ளனர். 

ஆலய வளாகத்தில், அருணகிரிநாதர்; வள்ளலார் ஆகிய இரு அருளாளர்களும் ஒரே சன்னிதியில் அருகருகே எழுந்தருளி இருக்கின்றனர். அருணகிரிநாதர் இத்தலத்திற்கென அருளியுள்ள 'மனைமாண் சுதரான சுணங்கரும்' என்று துவங்கும் திருப்புகழ் திருப்பாடலில் 'மதுராந்தக மாநகரம்திகழ் முருகாந்திரமோடமர் உம்பர்கள் தம்பிரானே' என்று போற்றிப் பரவுகின்றார். 

ஆலய வளாகம் முழுவதிலும் இத்திருக்கோயிலை வட சிற்றம்பலம் என்று தவறாகக் குறித்துள்ளனர், திருச்சுவற்றிலும் வட சிற்றம்பலத் திருப்புகழே பொறிக்கப் பெற்றுள்ளது, எனினும் யாத்திரை மேற்கொள்ளும் அன்பர்கள் இத்தலத்தோடு சேர்த்துப் புலிப்பரக் கோயிலில் அமைந்துள்ள வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயிலையும் அவசியம் தரிசித்தல் வேண்டும். 

(Google Maps: Shri Murugan Temple, Madurantakam, Maduranthakam, Tamil Nadu 603306, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடலுக்குப் பின்னர் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனதாந்தன தான தனந்தன
     தனதாந்தன தான தனந்தன
          தனதாந்தன தான தனந்தன ...... தந்ததான

மனைமாண் சுதரான சுணங்கரும்
     மனம் வேந்திணையான தனங்களும்
          மடிவேன்தனை ஈண அணங்குறு... வம்பராதி

மயமாம் பலவான கணம்குலம்
     என ப்ராந்தியும் யான் !எனதென்றுறு
          வனவாம் பிரமாத குணம்குறி... இன்பசார

இன வாம்பரி தான்ய தனம்பதி
     விடஏன்றெனை மோன தடம்பர
          மிகுதாம்பதி காண கணம்கன... உம்பர்ஏசா

இடவார்ந்தன சானு நயம்பெறு
     கடகாம்கர சோண வியம்பர
          இடமாம் கனதாள் அருளும்படி... என்றுதானோ

தனதாந்தன தான தனந்தன
     தெனதோங்கிட தோன துனங்கிட
          தனவாம் பரமான நடம்பயில்... எம்பிரானார்

தமதாம்சுத தாபர சங்கமம்
     எனஓம்புறு தாவன வம்படர்
          தகுதாம்பிர சேவித ரஞ்சித... உம்பர் வாழ்வே

முனவாம் பத மூடிக வந்தன
     முயல்வான் பிடிமாடிமை ஐங்கரர்
          முகதாம்பின மேவுறு சம்ப்ரம... சங்கணாறு

முக காம்பிரமோடமர் சம்பன
     மதுராந்தக மாநகரம்திகழ்
          முருகாந்திரமோடமர் உம்பர்கள்... தம்பிரானே!!!

(2020 அக்டோபர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:

Post a Comment