Thursday, December 27, 2018

ஸ்ரீகச்சபேஸ்வரர் திருக்கோயில்:

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: காஞ்சிபுரம்

திருக்கோயில்: அருள்மிகு ஸ்ரீகச்சபேஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

பஞ்ச பூத ஷேத்திரமாகவும், 7 முக்தித் தலங்களுள் ஒன்றாகவும் போற்றப் பெறும் காஞ்சீபுரத்தில் 5 திருப்புகழ் தலங்கள் அமைந்துள்ளன, அவை கச்சி ஏகம்பம் எனும் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் (37 திருப்பாடல்கள்), கவுரிக் கோட்டம் எனும் அன்னை ஸ்ரீகாமாக்ஷி திருக்கோயில் (2 திருப்பாடல்கள்), குமாரக் கோட்டம் (2 திருப்பாடல்கள்), திருக்கச்சி மேற்றளி எனும் மேற்றளீஸ்வரர் திருக்கோயில் (1 திருப்பாடல்) மற்றும் கச்சிக் கச்சாலை எனும் கச்சபேஸ்வரர் திருக்கோயில் (2 திருப்பாடல்கள்)  

கூர்மாவதார இறுதியில் கச்சப வடிவினரான ஸ்ரீமகாவிஷ்ணு பூசித்துள்ள இத்தலத்தின் பிரபாவத்தைக் காஞ்சிப் புராணம் விரிவாகப் பதிவு செய்கின்றது. பிரமாண்டமான திருக்கோயில் வளாகம், திருக்கருவறையில் சிவலிங்கத் திருமேனியின் பின்னே முக்கண் முதல்வரும் அம்பிகையும் திருவுருவத் திருமேனியோடு எழுந்தருளி இருக்கின்றனர், காண்பதற்கரிய திருக்கோலம். 

இத்தலத்தைத் தரிசித்தால் முத்திப் பேற்றினைப் பெற்று உய்யலாம் என்று சிவஞான முனிவர் அருளியுள்ள காஞ்சிப் புராணம் அறுதியிடுகின்றது, 
-
(கச்சபேசப் படலம் - திருப்பாடல் 11 - காஞ்சிப் புராணம்)
அன்று தொட்டென்றும் அக்காஞ்சியின் நீங்கெலா 
கொன்றைவார் சடையனை கச்சபேசன்தனைக் கும்பிடச் 
சென்றவர் கண்டவர் கருதினர் யாவரும் தீது!தீர்ந் 
தொன்றிஒன்றா நிலை மாறிலா முத்தி பெற்றுய்வரே 

வெளிப்பிரகாரத்தில் கருவறையின் பின்புறம், வலது புறத்தில் நம் திருப்புகழ் தெய்வம் ஆறு திருமுகங்களுடன் மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில், இரு தேவியரும் உடனிருக்க எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரிப் பெருமான் இத்தலத்துறை மூர்த்திக்கு 2 திருப்புகழ் திருப்பாடல்களை அருளியுள்ளார், 'இறைச்சிப் பற்று' என்று துவங்கும் திருப்புகழில் 'கச்சபத்திச்சைப் படுக் கச்சிப் பதிச்சொக்கப் பெருமாளே' என்றும், 'மக்கட்குக் கூறரிதானது' என்று துவங்கும் திருப்புகழில் 'கச்சிக் கச்சாலையில் மேவிய பெருமாளே' என்றும் போற்றிப் பரவுகின்றார்.  

சென்னையிலிருந்து 73 கி.மீ தூரத்திலும், செங்கல்பட்டிலிருந்து 40 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது இத்தலம்.

(Google Maps: 

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
     தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான

இறைச்சிப்பற்றிரத்தத்திட் டிசைக்கொக்கப் பரப்பப்!பட்
     டெலுப்புக் கட்டளைச் சுற்றிச் ...... சுவர்கோலி

எடுத்துச் செப்பெனக் கட்டிப் புதுக்குப் புத்தகத்தில் !புக்
     கெனக்குச் சற்றுனக்குச் சற்றெனும் ஆசைச்

சிறைக்கொத்திப் பிறப்பில் பட்டுறக்கச் சொப்பனத்துற்றுத்
     திகைக்கப் பட்டவத்தைப் பட்டுழலாதுன்

திருப்பத்மத் திறத்தைப் பற்றுகைக்குச் சித்திரத்தைச் சொற்
     திதக் கொற்றப் புகழ்ச் செப்பித் ...... திரிவேனோ

பிறைச் செக்கர்ப் புரைக்கொத்துச் சடைப் பச்சைக் கொடிக்கிச்சைப்
     பிறக்குற்றத் திருப்பக்கச் ...... சிவநாதர்

பெருக்கப்பத் தடக்கைக் கற்பகத் தொப்பைக் கணத்துக்குப்
     பிரசித்தக் கொடிக் குக்குடக் ...... கொடியோனே

பறைக் கொட்டிக் களைச்சுற்றக் குறள்செக்கண் கணத்திற்குப்
     பலிக்குப் பச்சுடல் குத்திப் ...... பகிர்வேலா

பணப்பத்திக் கணத்துத்திப் படுக்கைக் கச்சபத்திச்சைப்
     படுக் கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தத்தத்தத் தானன தானன
     தத்தத்தத் தானன தானன
          தத்தத்தத் தானன தானன ...... தனதான

மக்கட்குக் கூறரிதானது
     கற்றெட்டத் தான்முடியாதது
          மற்றொப்புக் கியாதுமொவாதது ...... மனதாலே

மட்டிட்டுத் தேடவொணாதது
     தத்வத்தில் கோவை படாதது
          மத்தப்பொற் போதுபகீரதி ...... மதிசூடும்

முக்கட் பொற்பாளர் உசாவிய
     அர்த்தக்குப் போதகமானது
          முத்திக்குக் காரணமானது ...... பெறலாகா

முட்டர்க்கெட்டாதது நான்மறை
     எட்டிற்றெட்டாதெனவே வரு
          முற்பட்டப் பாலையிலாவது ...... புரிவாயே

செக்கண் சக்ராயுத மாதுலன்
     மெச்சப்புற் போது படாவிய
          திக்குப்பொற் பூதரமே முதல் ...... வெகுரூபம்

சிட்டித்துப் பூதபசாசுகள்
     கைக்கொட்டிட்டாட மகோததி
          செற்றுக்ரச் சூரனை மார்பக ...... முதுசோரி

கக்கக்கைத் தாமரை வேல்விடு
     செச்சைக் கர்ப்பூர புயாசல
          கச்சுற்றப் பார பயோதர ...... முலையாள்முன்

கற்புத் தப்பாதுலகேழையும்
     ஒக்கப் பெற்றாள் விளையாடிய
          கச்சிக் கச்சாலையில் மேவிய ...... பெருமாளே.


(2021 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)


No comments:

Post a Comment