Sunday, December 30, 2018

திருவக்கரை:

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: விழுப்புரம் மாவட்டம் 

திருக்கோயில்: அருள்மிகு வடிவாம்பிகை சமேத சந்திர மௌலீஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத் தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்,  திருஞான சம்பந்தர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்:

விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனத்திலிருந்தும் விழுப்புரத்திலிருந்தும் 31 கி.மீ தூரத்திலும், சென்னையிலிருந்து 156 கி.மீ பயணத் தொலைவிலும் அமைந்துள்ளது திருவக்கரை. ஞானசம்பந்தப் பெருமானால் பாடல் பெற்றுள்ள திருத்தலம், மிகவும் விசாலமான திருக்கோயில் வளாகம், இங்கு எழுந்தருளியுள்ள வக்கிரகாளி தேவி மிகவும் பிரசித்தம். நெடுந்தூரம் பயணித்து, திருநந்திதேவரை வணங்கியவாறு உட்சென்று திருக்கருவறையை அடைகின்றோம். சிவலிங்கத் திருமேனியின் அனைத்து திசைகளிலும் திருமுகமொன்று பொருந்தியிருக்க, சந்திரமௌலீஸ்வரப் பரம்பொருள் ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றார். காண்பதற்கரிய திருக்காட்சி. 

உட்பிரகாரத்தை வலம் வருகையில், கருவறையின் பின்புறம், வலது புறத்தில் திருப்புகழ் தெய்வமான கந்தக் கடவுள் ஆறு திருமுகங்களும்; பன்னிரு திருக்கரங்களில் ஆயுதங்களுடன், வள்ளி தெய்வயானை தேவியர் உடனிருக்க அதி கம்பீரனாய் எழுந்தருளி இருக்கின்றான். அற்புதத் திருக்கோலம். வெளிப்பிரகாரத்தை வலம் வருகையில் வரதராஜப் பெருமாள் தனிச்சன்னிதியில் பேரழகுத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார். சந்திரமௌலீஸ்வரப் பெருமானின் இடபாகத்தில் கோயில் கொண்டருளும் உமையன்னை வடிவாம்பிகை எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றாள். 

அருணகிரிப் பெருமான் இத்தலத்துறை மூர்த்திக்கு இரு திருப்புகழ் திருப்பாடல்களை அருளியுள்ளார், தரிசித்துப் பயன்பெற வேண்டிய அற்புதத் திருத்தலம், 


(Google Maps: chandramouleeswarar Vadivambigai Thiruvakkarai Temple, Thiruvakkarai, Tamil Nadu, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனதன தத்தன தனதன தத்தன
     தனதன தத்தன ...... தனதானா

கலகலெனச் சில கலைகள் !பிதற்றுவ
     தொழிவதுனைச் சிறிதுரையாதே

கருவழி தத்திய மடுவதனில் புகு
     கடு நரகுக்கிடை ...... இடைவீழா

உலகுதனிற்பல பிறவி தரித்தற
     உழல்வது விட்டினி ...... அடிநாயேன்

உனதடிமைத் திரள் அதனினும்உட்பட
     உபய மலர்ப்பதம் ...... அருள்வாயே

குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட
     நிசிசரனைப் பொரு ...... மயில்வீரா

குணதர வித்தக குமர புனத்திடை
     குறமகளைப் புணர் ...... மணிமார்பா

அலை புனலில் தவழ் வளைநில வைத்தரு
     மணி திருவக்கரை ...... உறைவோனே

அடியவர் இச்சையில் எவையெவை உற்றன
     அவை தருவித்தருள் ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தத்தன தத்தன தத்தன தத்தன
     தத்தன தத்தன தத்தன தத்தன
          தத்தன தத்தன தத்தன தத்தன ...... தனதான

பச்சிலையிட்டு முகத்தை மினுக்கிகள்
     குத்திர வித்தை மிகுத்த சமர்த்திகள்
          பப்பர மட்டைகள் கைப்பொருள் பற்றிட ...... நினைவோர்கள்

பத்திநிரைத் தவளத் தரளத்தினை
     ஒத்த நகைப்பில் விழிப்பில் மயக்கிகள்
          பஷ மிகுத்திட முக்கனி சர்க்கரை ...... இதழூறல்

எச்சில் அளிப்பவர் கச்சணி மெத்தையில்
     இச்சக மெத்த உரைத்து நயத்தொடு
          மெத்திஅழைத்து அணைத்து மயக்கிடு ...... மடமாதர்

இச்சையில் இப்படி நித்த மனத்துயர்
     பெற்றுலகத்தவர் சிச்சியெனத் திரி
          இத்தொழில் இக்குணம் விட்டிட நற்பதம் ...... அருள்வாயே

நச்சரவில் துயில் பச்சைமுகில்!கரு
     ணைக்கடல் பத்ம மலர்த் திருவைப்புணர்
          நத்து தரித்த கரத்தர் திருத்துள ...... அணி மார்பர்

நட்ட நடுக் கடலில் பெரு வெற்பினை
     நட்டரவப் பணி சுற்றி மதித்துள
          நத்தமுதத்தை எழுப்பி அளித்தவர் ...... மருகோனே

கொச்சை மொழிச்சி கறுத்த விழிச்சி!சி
     றுத்த இடைச்சி பெருத்த தனத்தி!கு
          றத்தி தனக்கு மனப்ரியம் உற்றிடு ...... குமரேசா

கொத்தவிழ் பத்ம மலர்ப் பழனத்தொடு
     குற்றமறக் கடிகைப் புனல் சுற்றிய
          கொட்புள நல்திருவக்கரை உற்றுறை ...... பெருமாளே 


(2021 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

1 comment: