(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: வேலூர்
திருக்கோயில்: அருள்மிகு அபிதகுஜாம்பாள் சமேத ஸ்ரீகரபுரீஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக்குறிப்புகள்:
சென்னை --> வேலூர் பயண மார்க்கத்தில், வேலூருக்கு 40 கி.மீ முன்னர், காவேரிப்பாக்கம் எனும் ஊரினை அடுத்துள்ள திருப்பாற்கடல் எனும் சிற்றூரில் அமைந்துள்ளது கரபுரீஸ்வரர் திருக்கோயில். காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 30 கி.மீ பயணித்தும் இத்தலத்தினை அடையலாம். இவ்வூரில் இரு சிவாலயங்கள் உள்ளன, அவற்றுள் திருப்புகழ் தலமாக விளங்குவது 'அபிதகுஜாம்பிகை சமேத கரபுரீஸ்வரர் திருக்கோயிலே' என்பது முக்கியக் குறிப்பு.
சிவமூர்த்தி எழுந்தருளியுள்ள மூலக் கருவறைக்குச் செல்லுமுன் இருபுறமும் விநாயகப் பெருமான் மற்றும் கந்தக் கடவுளின் திருச்சன்னிதிகளைத் தரிசிக்கலாம். ஆறு திருமுகங்கள் மற்றும் பன்னிரு திருக்கரங்களுடன் மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில், சிறிய திருமேனியனாய் திருப்புகழ் தெய்வமான வேலாயுத தெய்வம் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரியார் இத்தலத்திற்கென மூன்று திருப்புகழ் திருப்பாடல்களை அருளியுள்ளார்,
(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 3.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
தனதனத் தனதனத் தனதனத் தனதனத் ...... தனதான
ஒருவரைச் சிறுமனைச் சயன மெத்தையினில்!வைத்
தொருவரைத் தமதலைக் கடையினில் சுழல!விட்
டொருவரைப் பரபரப்பொடு தெருத் திரியவிட்டதனாலே
ஒருவருக்கொருவர் சக்களமையில் சருவ!விட்
டுருவு பத்திரம் எடுத்தறையில் மற்புரிய!விட்
டுயிர் பிழைப்பது கருத்தளவில் உச்சிதமெனச்... செயுமானார்
தருமயல் ப்ரமைதனில் தவநெறிக் கயலெனச்
சரியையில் கிரியையில் தவமும் அற்றெனதுகைத்
தனம்அவத்தினில் இறைத்தெவரும் உற்றிகழ்வுறத்... திரிவேனைச்
சகல துக்கமுமறச் சகலசற் குணம்வரத்
தரணியில் புகழ்பெறத் தகைமை பெற்றுனது பொற்
சரணம் எப்பொழுது நட்பொடு நினைத்திட அருள்...தருவாயே
குருமொழித் தவமுடைப் புலவரைச் சிறையில்!வைத்
தறவும் உக்கிரம் விளைத்திடும் அரக்கரை முழுக்
கொடியதுர்க் குணஅவத்தரை முதல் துரிசறுத்திடும் வேலா
குயில்மொழிக் கயல்விழித் துகிரிதழ்ச் சிலைநுதல்
சசி முகத்திள நகைக் கனகுழல் தனகிரிக்
கொடியிடைப் பிடிநடைக் குறமகள் திருவினைப்... புணர்வோனே
கருதுசட் சமயிகட்கு அமைவுறக் கிறியுடைப்
பறிதலைச் சமணரைக் குலமுதற் பொடிபடக்
கலகமிட்டுடல்உயிர்க் கழுவின் உச்சியினில் வைத்திடுவோனே
கமுகினில் குலையறக் கதலியில் கனியுகக்
கழையின் முத்தம் உதிரக் கயல் குதித்துலவு நல்
கனவயல் திகழ்திருக் கரபுரத்தறுமுகப் பெருமாளே.
தனதனன தான தனதனன தான
தனதனன தான ...... தனதானா
குலைய மயிரோதி குவியவிழி வீறு
குருகினிசை பாடி... முகமீதே
குறு வியர்வுலாவ அமுதின்இனிதான
குதலையும் ஒராறு... படவேதான்
பலவித விநோதம் உடனுபய பாத
பரிபுரமும்ஆட... அணைமீதே
பரிவு தருமாசை விட மனமொவாத
பதகனையும் ஆள... நினைவாயே
சிலை மலையதான பரமர்தரு பால
சிகி பரியதான... குமரேசா
திருமதுரை மேவும் அமணர்குலமான
திருடர் கழுவேற... வருவோனே
கலின் வடிவமான அகலிகை பெணான
கமலபத மாயன்... மருகோனே
கழனிநெடு வாளை கமுகொடிய மோது
கரபுரியில் வீறு... பெருமாளே.
திருப்பாடல் 3:
தனன தனதனத் தனன தனதனத்
தனன தனதனத் தனன தனதனத்
தனன தனதனத் தனன தனதனத் ...... தனதானா
பரவி உனதுபொற் கரமும் முகமும்!முத்
தணியும் உரமும் மெய்ப் ப்ரபையும் மருமலர்ப்
பதமும் விரவு குக்குடமு மயிலும் உள் பரிவாலே
படிய மனதில் வைத்துறுதி சிவ!மிகுத்
தெவரும் மகிழ்வுறத் தரும நெறியின்மெய்ப்
பசியில் வருமவர்க்கசனம் ஒருபிடிப் ... படையாதே
சருவி இனிய நட்புறவு சொலிமுதற்
பழகும் அவரெனப் பதறி அருகினில்
சரச விதமளித்துரிய பொருள் பறித்திடும் மானார்
தமது ம்ருகமதக் களப புளகிதச்
சயில நிகர் தனத்திணையில் மகிழ்வுறத்
தழுவி அவசமுற்றுருகி மருளெனத்... திரிவேனோ
கரிய நிறமுடைக் கொடிய அசுரரைக்
கெருவ மதம் ஒழித்துடல்கள் துணிபடக்
கழுகு பசிகெடக் கடுகி அயில் விடுத்திடு தீரா
கமல அயனும் அச்சுதனும் வருணன்!அக்
கினியும் நமனும்அக் கரியில் உறையும் மெய்க்
கணனும் அமரர் அத்தனையும் நிலைபெறப்... புரிவோனே
இரையும் உததியில் கடுவை !மிடறமைத்
துழுவை அதள் உடுத்தரவு பணி!தரித்
திலகு பெற நடிப்பவர் முனருளும் உத்தம வேளே
இசையும் அருமறைப் பொருள்கள் தினம்!உரைத்
தவனி தனிலெழில் கரும !முனிவருக்
கினிய கரபுரப் பதியில் அறுமுகப்... பெருமாளே.
(2019 பிப்ரவரி மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment