Saturday, December 29, 2018

விரிஞ்சிபுரம்:

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: வேலூர்

திருக்கோயில்: அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில்.

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

சென்னையிலிருந்து சுமார் 140 கி.மீ தூரத்திலும், வேலூர் நகரத்திலிருந்து 16 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது பிரசித்தமான தலமான விரிஞ்சிபுரம். விசாலமான திருக்கோயில், ஆலய வளாகத்தில் நுழைந்தவுடன் பிரமாண்டமான திருமேனியுடன் எழுந்தருளியுள்ள விநாயகப் பெருமானைத் தரிசித்து மகிழலாம். மூலக் கருவறையில் நெடிதுயர்ந்த (மெலிதான) திருமேனியுடன் எழுந்தருளியுள்ள தனிப்பெரும் தெய்வமான மார்க்கபந்தீஸ்வரரின் திருக்கோலம் வார்த்தைகளால் விளக்கவொண்ணாதது, காண்பதற்கரியது.
      
வெளிப் பிரகாரச் சுற்றில், மூலக் கருவறைக்குப் பின்புறம், வேலாயுத தெய்வம் தனிச்சன்னிதியில் 'ஆறு திருமுகங்களுடனும், பன்னிரு திருக்கரங்களுடனும், 6 அடி உயரத் திருமேனியுடனும், வள்ளி தெய்வயானை தேவியருடனும், மயில் மீதமர்ந்த அதிகம்பீரமான திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். பிரகாரச் சுற்றின் இறுதியில் உலகீன்ற உமையன்னை மரகதாம்பிகை எனும் திருநாமத்துடன் தனிக்கோயிலில் எழுந்தருளி இருக்கின்றாள். 

அருணகிரிப் பெருமான் இத்தலத்திற்கென இரு திருப்புகழ் திருப்பாடல்களை அருளியுள்ளார், அவசியம் தரிசித்துப் பயன் பெற வேண்டிய அற்புதத் திருத்தலம். 

(Google Maps: Sri Margabandeswarar Temple, Virinjipuram, Tamil Nadu 632104, India)


(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனன தந்த தானன தனன தந்த தானன
     தனன தந்த தானன ...... தனதான

நிகரில் பஞ்ச பூதமும் நினையும் நெஞ்சும் ஆவியும்
     நெகிழ வந்து நேர்படும்... அவிரோதம்

நிகழ்தரும் ப்ரபாகர நிரவயம் பராபர
     நிருப அங்குமார வேளென வேதம்,

சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள்
     சமய பஞ்ச பாதகர்... அறியாத

தனிமை கண்டதான கிண்கிணிய தண்டை சூழ்வன
     சரண புண்டரீகமதருள்வாயே,

மகர விம்பசீகர முகர வங்க வாரிதி
     மறுகி வெந்து வாய்விட... நெடுவான

வழிதிறந்து சேனையும் எதிர்மலைந்த சூரனும்
     மடிய இந்திராதியர்... குடியேறச்

சிகர துங்க மால்வரை தகரவென்றி வேல்விடு
     சிறுவ சந்த்ர சேகரர்... பெருவாழ்வே

திசைதொறும் ப்ரபூபதி திசைமுகன் பராவிய
     திருவிரிஞ்சை மேவிய... பெருமாளே.

திருப்பாடல் 2:
தனன தந்த தான தனன தந்த தான
     தனன தந்த தான ...... தனதான

மருவும் அஞ்சு பூதம் உரிமை வந்திடாது
     மலமிதென்று போட... அறியாது

மயல்கொள்இந்த வாழ்வு அமையும் எந்த நாளும்
     வகையில் வந்திராத... அடியேனும்

உருகி அன்பினோடு உனை நினைந்து நாளும்
     உலகமென்று பேச... அறியாத

உருவம் ஒன்றிலாத பருவம் வந்து சேர
     உபய துங்க பாதம்... அருள்வாயே

அரிவிரிஞ்சர் தேட அரிய தம்பிரானும்
     அடிபணிந்து பேசி... கடையூடே

அருளுகென்ற போது பொருளிதென்று காண
     அருளுமைந்த ஆதி... குருநாதா

திரியும் உம்பர் நீடு கிரிபிளந்து சூரர்
     செருவடங்க வேலை... விடுவோனே

செயலமைந்த வேத தொனி முழங்கு வீதி
     திருவிரிஞ்சை மேவு... பெருமாளே.


(2019 பிப்ரவரி மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை) 


No comments:

Post a Comment