(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: வேலூர்
திருக்கோயில்: அருள்மிகு சுப்ரமண்ய சுவாமி திருக்கோயில்.
தல வகை: முருகன் திருக்கோயில்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
வேலூர்; காட்பாடி மற்றும் காங்கேய நல்லூரிலிருந்து சுமார் 25 கி.மீ பயணத் தொலைவில் அமைந்துள்ளது வள்ளி மலை. வள்ளி அம்மையின் அவதாரத் தலம், வேடர் தலைவனான நம்பிராஜன் வள்ளி தேவியை சிறு குழந்தையாகக் கண்டெடுத்து வளர்த்த தலம்.முருகக் கடவுள் வள்ளி நாயகியைத் தடுத்தாட்கொண்டு அருள் புரிந்த தலம், ஆறுமுக தெய்வத்தின் அருட் சக்தியான வள்ளி தேவியின் திருப்பாதங்கள் பலகாலும் தோய்ந்த பரம புண்ணிய ஷேத்திரம். இனி இங்கு தரிசித்து மகிழ வேண்டிய முக்கிய இடங்களைக் காண்போம்,
*
மலையடிவாரத்தில் சுப்ரமணிய சுவாமி மற்றும் வள்ளியம்மையின் ஆலயம், வாரியார் சுவாமிகளின் அரிய பெரிய திருப்பணியில் உருவான பிரமாண்டமான சரவணப் பொய்கை திருக்குளம் ஆகியவை அமைந்துள்ளன.
மலைக் கோயிலுக்கான படிகளின் துவக்கத்தில் அருணகிரிநாதர் திருக்கோயிலைத் தரிசித்து மகிழலாம், பின்னர் 444 படிகளைக் கடந்து சென்றால் மலையுச்சியிலுள்ள குடவரைக் கோயிலைத் தரிசிக்கலாம். திருப்புகழ் தெய்வம் இரு தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான்,
பின்னர் இங்கிருந்து 30 நிமிடங்கள் மலைப் பாதையில் பயணித்தால், ஏகாந்தமான திருச்சூழலில் அமையப் பெற்றுள்ள வள்ளி மலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகளின் ஜீவ சமாதித் திருக்கோயிலைத் தரிசிக்கலாம். இங்கு வள்ளி மலை சுவாமிகள் பூஜித்த வள்ளி நாயகியின் விக்கிரகத் திருமேனியைத் தரிசித்துப் பணியலாம், காண்பதற்கரிய பேரழகுத் திருக்கோலம்.
இங்கிருந்து மேலும் சில நிமிடங்கள் மேல் நோக்கிப் பயணித்துச் சென்றால் வயோதிக கோலத்தில் தோன்றிய முருகக் கடவுளுக்கு வள்ளி தேவியார் நீர் கொடுத்த சுனையைத் தரிசிக்கலாம். சிறிது தூரத்தில் கணேசர் பாறையையும் தரிசித்து மகிழலாம், இவ்விடத்திலேயே விநாயக மூர்த்தி யானை வடிவில் தோன்றி வள்ளி தேவியை அச்சுறுத்தி குகக் கடவுளுடன் சேருமாறு செய்து அருள் பரிந்தார்.
இவ்விடத்திலிருந்து மேலும் 20 நிமிடங்கள் செங்குத்தான மலைப் பாதையில் பயணித்துச் சென்றால் திருமால்புரீஸ்வரர் எனும் திருநாமத்தில் எழுந்தருளியுள்ள சிவலிங்க மூர்த்தியைத் தரிசனம் செய்து போற்றலாம்.
அருணகிரிநாதர் இத்தலத்திற்கென 11 திருப்புகழ் திருப்பாடல்களை அருளியுள்ளார், அவசியம் நேரம் அமைத்துக் கொண்டு தரிசித்துப் பயன்பெற வேண்டிய திருத்தலம்,
(Google Maps: Arulmigu Vallimalai Murugan Temple, Koil Sannithi St, Tamil Nadu 517403, India)
(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 11,(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தய்யதன தான தய்யதன தான
தய்யதன தானத் ...... தனதான
அல்லிவிழியாலும் முல்லை நகையாலும்
அல்லல்பட ஆசைக் ...... கடல்ஈயும்
அள்ள இனிதாகி நள்ளிரவு போலும்
உள்ள வினையார் அத்தனமாரும்
இல்லும் இளையோரும் மெல்ல அயலாக
வல்லெருமை மாயச் ...... சமனாரும்
எள்ளி எனதாவி கொள்ளை கொளு நாளில்
உய்யவொரு நீபொற் கழல் தாராய்
தொல்லை மறை தேடி இல்லையெனும் நாதர்
சொல்லும் உபதேசக் ...... குருநாதா
துள்ளி விளையாடு புள்ளியுழை நாண
எள்ளிவன மீதுற்றுறைவோனே
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
வல்லை வடிவேலைத் ...... தொடுவோனே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளி மணவாளப் ...... பெருமாளே.
தய்யதன தான தய்யதன தான
தய்யதன தானத் ...... தனதான
ஐயுமுறு நோயும் மையலும்அவாவின்
ஐவரும் உபாயப் ...... பலநூலின்
அள்ளல் கடவாது துள்ளியதில் மாயும்
உள்ளமும் இல்வாழ்வைக் ...... கருதாசைப்
பொய்யும் அகலாத மெய்யை வளர்ஆவி
உய்யும்வகை யோகத்தணுகாதே
புல்லறிவு பேசி அல்லல் படுவேனை
நல்ல இருதாளில் ...... புணர்வாயே
மெய்ய பொழில் நீடு தையலை முநாலு
செய்ய புய மீதுற்றணைவோனே
வெள்ளை இபமேறு வள்ளல்கிளை வாழ
வெள்ள முதுமாவைப் ...... பொருதோனே
வையமுழுதாளும் ஐய மயில் வீர
வல்ல முருகா முத்தமிழ் வேளே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளி மணவாளப் ...... பெருமாளே.
திருப்பாடல் 3:
தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த
தய்யத்த தான தந்த ...... தனதான
கையொத்து வாழுமிந்த மெய்யொத்த வாழ்விகந்து
பொய்யொத்த வாழ்வு கண்டு ...... மயலாகிக்
கல்லுக்கு நேரும் வஞ்ச உள்ளத்தர் மேல்விழுந்து
கள்ளப் பயோதரங்கள் ...... உடன்மேவி
உய்யப்படாமல் நின்று கையர்க்குபாயம் ஒன்று
பொய்யர்க்குமே அயர்ந்துள் ...... உடை நாயேன்
உள்ளப்பெறாக நின்று தொய்யப் படாமல் என்றும்
உள்ளத்தின் மாய்வதொன்றை ...... மொழியாயோ
ஐயப்படாத ஐந்து பொய்யற்ற சோலை தங்கு
தெய்வத் தெய்வானை கொங்கை ...... புணர்வோனே
அல்லைப்பொறா முழங்கு சொல்உக்ர சேவலொன்று
வெல்லப் பதாகை கொண்ட ...... திறல்வேலா
வையத்தை ஓடிஐந்து கையற்கு வீசு தந்தை
மெய்யொத்த நீதி கண்ட ...... பெரியோனே
வள்ளிக் குழாம்அடர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
வள்ளிக்கு வேடை கொண்ட ...... பெருமாளே.
திருப்பாடல் 4:
தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த
தய்யத்த தான தந்த ...... தனதான
முல்லைக்கும் மாரன்அங்கை வில்லுக்கு மாதர் தங்கள்
பல்லுக்கும் வாடியின்ப ...... முயலாநீள்
முள்ளுற்ற கால்மடிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து
பள்ளத்தில் வீழ்வதன்றி ...... ஒருஞான
எல்லைக்கும் ஆரணங்கள் சொல்லித் தொழா வணங்கும்
எல்லைக்கும் வாவி நிந்தன் ...... அருள்நாமம்
எள்ளற்கு மால்அயர்ந்து உள்ளத்தில் ஆவஎன்றும்
உள்ளப் பெறா இணங்கை ...... ஒழிவேனோ
அல்லைக்கவ்வானை தந்த வல்லிக்கு மார்பிலங்க
அல்லிக்கொள் மார்பலங்கல் ...... புனைவோனே
அள்ளல் படாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி
மெள்ளச் சரோருகங்கள் ...... பயில் நாதா
வல்லைக் குமார கந்த தில்லைப் புராரி மைந்த
மல்லுப் பொராறிரண்டு ...... புயவீரா
வள்ளிக் குழாமடர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
வள்ளிக்கு வேடை கொண்ட ...... பெருமாளே.
திருப்பாடல் 5:
தய்யத்த தாத்த தய்யத்த தாத்த
தய்யத்த தாத்த ...... தனதான
கள்ளக் குவாற்பை தொள்ளைப் புலாற்பை
துள்இக்கனார்க்கயவு கோப
கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை
கொள்ளைத் துரால்பை ...... பசுபாச
அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை
வெள்ளிட்டசாப் பிசிதம்ஈரல்
அள்ளச் சுவாக்கள் சள்ளிட்டிழாப்பல்
கொள்ளப் படாக்கை ...... தவிர்வேனோ
தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்
வெள்ளுத்தி மாற்கு ...... மருகோனே
சிள்ளிட்ட காட்டில் உள்ளக்கிரார்க் கொல்
புள்அத்த மார்க்கம் ...... வருவோனே
வள்ளிச் சன்மார்க்கம் விள்ஐக்கு நோக்க
வல்லைக்குள் ஏற்றும் ...... இளையோனே
வள்ளிக் குழாத்து வள்ளிக்கல் காத்த
வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.
திருப்பாடல் 6:
தய்யத்த தாத்த தய்யத்த தாத்த
தய்யத்த தாத்த ...... தனதான
வெல்லிக்கு வீக்கும் முல்லைக்கை வீக்கும்
வில்இக்கதாக் கருதும் வேளால்
வில்லற்றவாக் கொள் சொல்லற்றுகாப் பொய்
இல்லத்துறாக் கவலைமேவு
பல்லத்தி வாய்க்க அல்லற் படாக்கை
நல்லிற் பொறாச் சமயமாறின்
பல்லத்த மார்க்க வல்லர்க்கர் மூர்க்கர்
கல்விக் கலாத்து அலையலாமோ
அல்லைக்கொல் வார்த்தை சொல்லிக்கிதொத்து
சொல் குக்குடார்த்த ...... இளையோனே
அல்லுக்கும் ஆற்றின் எல்லுக்கு மேற்!புல்
கெல்லைப் படாக் கருணைவேளே
வல்ஐக்கும் ஏற்றர் தில்லைக்கும் ஏற்றர்
வல்லிக்கும் ஏற்றர் ...... அருள்வோனே
வள்ளிக் குழாத்து வள்ளிக்கல் காத்த
வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.
திருப்பாடல் 7:
தனதன தனதன தனதன தனதன
தய்யத்த தாத்த ...... தனதான
ககனமும் அநிலமும் அனல்புனல் நிலம்அமை
கள்ளப் புலாற் கிருமிவீடு
கனலெழ மொழிதரு சினமென மதமிகு
கள்வைத்த தோற்பை ...... சுமவாதே
யுகஇறுதிகளிலும் இறுதியிலொருபொருள்
உள்ளக்கண் நோக்கும் ...... அறிவூறி
ஒளிதிகழ் அருவுரு எனுமறை இறுதியில்
உள்ளத்தை நோக்க ...... அருள்வாயே
ம்ருகமத பரிமள விகசித நளினநள்
வெள்ளைப் பிராட்டி ...... இறைகாணா
விடதர குடில சடிலமிசை வெகுமுக
வெள்ளத்தையேற்ற ...... பதிவாழ்வே
வகுளமும் முகுளித வழைகளும் மலிபுன
வள்ளிக் குலாத்தி ...... கிரிவாழும்
வனசரர் மரபினில் வருமொரு மரகத
வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.
திருப்பாடல் 8:
தய்யதன தந்த தய்யதன தந்த
தய்யதன தந்த ...... தனதான
அல்லசல்அடைந்த வில்லடல் அநங்கன்
அல்லி மலரம்பு ...... தனைஏவ
அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்றல்
ஐயமது கிண்ட ...... அணையூடே
சொல்லும் அரவிந்த வல்லிதனி நின்று
தொல்லைவினை என்று ...... முனியாதே
துய்யவரி வண்டு செய்ய மதுஉண்டு
துள்ளிய கடம்பு ...... தரவேணும்
கல்லசல மங்கை எல்லையில் விரிந்த
கல்வி கரை கண்ட ...... புலவோனே
கள்ளொழுகு கொன்றை வள்ளல்தொழ அன்று
கல்லலற ஒன்றை ...... அருள்வோனே
வல்லசுரர் அஞ்ச நல்லசுரர் விஞ்ச
வல்லமை தெரிந்த ...... மயில்வீரா
வள்ளி படர்கின்ற வள்ளிமலை சென்று
வள்ளியை மணந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 9:
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
தனதாத்த தய்ய ...... தனதான
குடிவாழ்க்கை அன்னை மனையாட்டி பிள்ளை
குயில்போல் ப்ரசன்ன ...... மொழியார்கள்
குலம்வாய்த்த நல்ல தனம் வாய்த்ததென்ன
குருவார்த்தை தன்னை ...... உணராதே
இடநாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய
இடர்கூட்ட இன்னல் ...... கொடுபோகி
இடுகாட்டில் என்னை எரியூட்டு முன்னும்
இருதாள்கள் தம்மை ...... உணர்வேனோ
வடநாட்டில் வெள்ளி மலைகாத்து புள்ளி
மயில்மேல் திகழ்ந்த ...... குமரேசா
வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி
மலைகாத்த நல்ல ...... மணவாளா
அடிநாட்கள் செய்த பிழைநீக்கி என்னை
அருள்போற்றும் வண்மை ...... தரும்வாழ்வே
அடிபோற்றி அல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல ...... பெருமாளே.
திருப்பாடல் 10:
தனதந்த தந்தனம் தனதந்த தந்தனம்
தனதந்த தந்தனம் ...... தனதான
சிரமங்கம் அங்கைகண் செவிவஞ்ச நெஞ்சு!செஞ்
சலம்என்பு திண்பொருந்திடு மாயம்
சிலதுன்பம் இன்பம் ஒன்றிறவந்து பின்பு!செந்
தழலிண்கண் வெந்து சிந்திட ஆவி
விரைவின் கண் அந்தகன் பொர வந்ததென்று வெம்
துயர் கொண்டலைந்துலைந்தழியா முன்
வினையொன்றும் இன்றி நன்றியலொன்றி நின்பதம்
வினவென்று அன்பு தந்தருள்வாயே
அரவின்கண் முன்துயின்றருள் கொண்டல் அண்டர்!கண்
டமரஞ்ச மண்டி வந்திடுசூரன்
அகலம் பிளந்தணைந்தகிலம் !பரந்திரங்
கிட அன்றுடன்று கொன்றிடும் வேலா
மரைவெங்கயம் பொருந்திட வண்டினம்!குவிந்
திசையொன்ற மந்தி சந்துடனாடும்
வரையின்கண் வந்துவண் குறமங்கை பங்கயம்
வரநின்று கும்பிடும் ...... பெருமாளே.
திருப்பாடல் 11:
தனதன தந்தன தந்த தந்தன
தனதன தந்தன தந்த தந்தன
தனதன தந்தன தந்த தந்தன ...... தனதான
வரைவில்பொய் மங்கையர் தங்கள் அஞ்சன
விழியை உகந்து முகந்து கொண்டடி
வருடி நிதம்பம் அளைந்து தெந்தென ...... அளிகாடை
மயில் குயிலன்றில் எனும்புளின்பல
குரல் செய்திருந்து பினுந்தி என்கிற
மடுவில் விழுந்து கிடந்து செந்தழல் ...... மெழுகாகி
உருகி உகந்திதழ் தின்று மென்று!கை
யடியில் நகங்கள் வரைந்து குங்கும
உபயதனங்கள் ததும்ப அன்புடன் ......அணையா!மஞ்
சுலவிய கொண்டை குலைந்தலைந்தெழ
அமளியில் மின்சொல் மருங்கிலங்கிட
உணர்வழி இன்பமறந்து நின்தனை ...... நினைவேனோ
விரவி நெருங்கு குரங்கினங்கொடு
மொகுமொகெனும் கடலும் கடந்துறு
விசை கொடிலங்கை புகுந்தருந்தவர் ...... களிகூர
வெயில் நிலவும்பரும் இம்பரும்படி
ஜெயஜெயஎன்று விடும் கொடுங்கணை
விறல்நிருதன் தலை சிந்தினன்திரு ...... மருகோனே
அருகர் கணங்கள் பிணங்கிடும்படி
மதுரையில் வெண்பொடியும் பரந்திட
அரகர சங்கர என்று வென்றருள் ...... புகழ்வேலா
அறம்வளர் சுந்தரி மைந்த தண்டலை
வயல்கள் பொருந்திய சந்த வண்கரை
அரிவை விலங்கலில் வந்துகந்தருள் ...... பெருமாளே.
No comments:
Post a Comment