Wednesday, December 26, 2018

சிறுவை (சிறுவாபுரி):

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: திருவள்ளூர்

திருக்கோயில்: அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில்

தல வகை: முருகன் திருக்கோயில்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ தூரத்தில் மிகவும் பிரசித்தமான தலமான சிறுவை எனும் சிறுவாபுரி அமைந்துள்ளது. ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திருப்புதல்வர்களான 'லவன்; குசன்' இருவரும், பால பிராயத்தில், அசுவமேத யாகக் குதிரையின் பொருட்டு, ஸ்ரீவால்மீகி முனிவரின் குருவருளால், இலக்குவன்; பரதன்; சத்ருகனன்; சுக்ரீவன்; அனுமன் யாவரையும் விற்போரில் வென்று இறுதியாய்த் தந்தையென்று அறியாது ஸ்ரீராமரிடமே போர் புரிந்துப் பின்பு பணிந்த தலம், அருணகிரிப் பெருமான் இத்தலத் திருப்புகழில் இந்நிகழ்வினை குறித்தருளியுள்ளார்.

அருணகிரியார் இத்தலத்திற்கு வருகை புரிந்திருந்த சமயத்தில் 'சிறுவை மேவியருளும் கந்தக் கடவுள்' கனவினில் எழுந்தருளித் திருவருள் புரிந்துள்ளான். நெடிதுயர்ந்த நின்ற திருமேனியுடன், வலது திருக்கரத்தில் அபயம் அளித்தருள, இடது திருக்கரம் திருஇடையினில் பொருந்தியிருக்க, பின்னிரு திருக்கரங்களில் கமண்டலமும் ஜபமாலையும் விளங்கியிருக்கும் 'பிரம்ம சாஸ்தா' திருக்கோலத்தில் குமாரக் கடவுள் எழுந்தருளி இருக்கின்றான். வெளிப்பிரகாரத்தினை வலம் வருகையில், மூலக் கருவறையின் பின்புறத்தில் 'ஆதி மூலவர்' எனும் திருச்சன்னிதியில் அழகே ஒரு திருவடிவாய் மற்றொரு திருமேனியில் ஆறுமுக தெய்வம் எழுந்தருளி இருக்கின்றான், அருணகிரியார் இத்தலத்திற்கென 4 திருப்பாடல்களை அருளிச் செய்துள்ளார்.

(Google Maps: Siruvapuri Bala Murugan Temple, Chinnambedu, Tamil Nadu )

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 4.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தந்ததன தனதான தந்ததன தனதான
     தந்ததன தனதான ...... தனதான

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
     அண்டர்மன மகிழ்மீற ...... அருளாலே

அந்தரியொடுடனாடு சங்கரனும் மகிழ்கூர
     ஐங்கரனும் உமையாளும் ...... மகிழ்வாக

மண்டலமும் முநிவோரும் எண்திசையில் உளபேரும் 
     மஞ்சினனும் அயனாரும்  ...... எதிர்காண

மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற
     மைந்து மயிலுடன்ஆடி ...... வரவேணும்

புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
     புந்திநிறை அறிவாள ...... உயர்தோளா

பொங்கு கடலுடன்நாகம் விண்டுவரை இகல்சாடு
     பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா

தண்தரள மணிமார்ப செம்பொன்எழில் செறிரூப
     தண்தமிழின் மிகுநேய ...... முருகேசா

சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
     தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தானன தானன தானான தானன
     தானன தானன தானான தானன
          தானன தானன தானான தானன ...... தனதான

சீதள வாரிஜ பாதா நமோநம
     நாரத கீதவிநோதா நமோநம
          சேவல மாமயில் ப்ரீதா நமோநம ...... மறைதேடும்

சேகரமான ப்ரதாபா நமோநம
     ஆகமசார சொரூபா நமோநம
          தேவர்கள் சேனை மகீபா நமோநம ...... கதிதோயப்

பாதக நீவுகுடாரா நமோநம
     மாஅசுரேச கடோரா நமோநம
          பாரினிலே ஜயவீரா நமோநம ...... மலைமாது

பார்வதியாள்தரு பாலா நமோநம
     நாவல ஞான மனோலா நமோநம
          பாலகுமார சுவாமீ நமோநம ...... அருள்தாராய்

போதக மாமுக நேரான சோதர
     நீறணி வேணியர் நேயா ப்ரபாகர
          பூமகளார் மருகேசா மகோததி ...... இகல்சூரா

போதக மாமறை ஞானா தயாகர
     தேனவிழ் நீப நறாவாரு மார்பக
          பூரண மாமதி போலாறு மாமுக ...... முருகேசா

மாதவர் தேவர்களோடே முராரியும் 
     மாமலர் மீதுறை வேதாவுமே புகழ்
          மாநிலம் ஏழினும் மேலான நாயக ...... வடிவேலா

வானவர்ஊரினும் வீறாகி !வீறள
     காபுரி வாழ்வினும் மேலாகவேதிரு
          வாழ்சிறுவாபுரி வாழ்வே சுராதிபர் ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தனன தான தனன தந்த தனன தான தனன தந்த
     தனன தான தனன தந்த ...... தனதான

பிறவியான சடமிறங்கி வழியிலாத துறை செறிந்து
     பிணிகளான துயர்உழன்று ...... தடுமாறிப்

பெருகு தீய வினையில்நொந்து கதிகள்தோறும் அலைபொருந்தி
     பிடிபடாத ஜனன நம்பி ...... அழியாதே

நறைவிழாத மலர்முகந்த அரியமோன வழிதிறந்த
     நளின பாதம்எனது சிந்தை ...... அகலாதே

நரர் சுராதிபரும் வணங்கும் இனிய சேவை தனைவிரும்பி
     நலனதாக அடியன்என்று ...... பெறுவேனோ

பொறிவழாத முநிவர் தங்கள் நெறிவழாத பிலன்உழன்று
     பொரு நிசாசரனை நினைந்து ...... வினைநாடிப்

பொருவிலாமல்அருள் புரிந்து மயிலினேறி நொடியில் வந்து
     புளக மேவ தமிழ்புனைந்த ...... முருகோனே

சிறுவராகி இருவர்அந்த கரிபதாதி கொடுபொரும்சொல்
     சிலை இராமனுடன் எதிர்ந்து ...... சமராடிச்

செயமதான நகர்அமர்ந்த அளகை போல வளமிகுந்த
     சிறுவை மேவி வரமிகுந்த ...... பெருமாளே.

திருப்பாடல் 4:
தான தந்தன தானன தானன
     தான தந்தன தானன தானன
          தான தந்தன தானன தானன ...... தனதான

வேல்இரண்டெனும் நீள்விழி மாதர்கள்
     காதலின் பொருள் மேவின பாதகர்
          வீணில் விண்டுள நாடியர் ஊமைகள் ...... விலைகூறி

வேளை என்பதிலா வசைபேசியர்
     வேசி என்பவராம்இசை மோகிகள்
          மீது நெஞ்சழி ஆசையிலேஉழல் ...... சிறியேனும்

மாலயன் பரனார் இமையோர்!முனி
     வோர் புரந்தரன் ஆதியரே தொழ
          மாதவம்பெறு தாளிணையே தினம் ...... மறவாதே

வாழ்தரும்சிவ போக நனூல்!நெறி
     யேவிரும்பி வினாவுடனேதொழ
          வாழ்வரம் தருவாய்அடியேன்இடர் ...... களைவாயே

நீல சுந்தரி கோமளி யாமளி
     நாடகம்பயில் நாரணி பூரணி
          நீடு பஞ்சவி சூலினி மாலினி ...... உமைகாளி

நேயர் பங்கெழு மாதவியாள்!சிவ
     காம சுந்தரியே தருபாலக
          நீர்பொரும் சடையார்அருள் தேசிக ...... முருகேச

ஆலில் நின்றுலகோர் நிலையேபெற
     மாநிலங்களெலாம் நிலையேதரு
          ஆய(ன்)நம் திருவூரக மால்திரு ...... மருகோனே

ஆடகம்பயில் கோபுர மாமதில்
     ஆலயம்பல வீதியுமே!நிறை
          வான தென் சிறுவாபுரி மேவிய ...... பெருமாளே.


(2019 ஜூலை மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:

Post a Comment