(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: திருவள்ளூர்
திருக்கோயில்: அருள்மிகு செங்கல்வராய சுவாமி திருக்கோயில்.
தல வகை: முருகன் திருக்கோயில்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி வட்டத்தில், திருத்தணியிலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ள நெடியம் எனும் பகுதியில் அமைந்துள்ளது இம்மலைக் கோயில். சென்னையிலிருந்து இத்தலத்தினை அடைய இரு மார்க்கங்கள் உண்டு, திருத்தணிக்குள் செல்லாமல் சிறிது தூரம் ஆந்திர எல்லை வழியே பயணித்துத் தமிழகப் பகுதியிலுள்ள நெடியத்தை அடையலாம் (அல்லது) திருத்தணியிலிருந்து பள்ளிப்பட்டு எனும் ஊரினை அடைந்துப் பின் அங்கிருந்து 6 கி.மீ தூரம் பயணித்து, ஆந்திர எல்லையினைத் தொடாமலேயே நெடியத்தை அடையலாம்.
சுமார் 600 படிகளோடு அமைந்துள்ள மலைக்கோயில், படிகள் ஒரே சீராக இல்லாது இருப்பினும் பாதை ஓரளவு செம்மையாகவும், ஏறுவதற்கு எளிதாகவும் அமைந்துள்ளது. ஏகாந்தத் திருச்சூழலில் ஆலயம் அமைந்துள்ளது. முருகக் கடவுள் 'செங்கல்வராய சுவாமி' எனும் திருநாமம் தாங்கியருளி, வள்ளி தெய்வயானை தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். இந்திரன் இம்மூர்த்தியைப் பூசித்துப் பேறு பெற்றுள்ளான், திருக்கோயில் திருப்பணி செய்விக்கப் படவேண்டிய நிலையிலுள்ளது.
(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனன தந்த தத்த தனன தந்த தத்த
தனன தந்த தத்த ...... தனதான
எனைஅடைந்த குட்டம் வினைமிகுந்த பித்தம்
எரிவழங்கு வெப்பு ...... வலிபேசா
இகலி நின்றலைக்கு முயலகன்!குலைப்பொ
டிருமலென்றுரைக்கும் ...... இவையோடே
மனைகள் பெண்டிர் மக்கள் தமைநினைந்து சுத்த
மதிமயங்கி விட்டு ...... மடியாதே
மருவிஇன்றெனக்கு மரகதம் சிறக்கு
மயிலில் வந்து முத்தி ...... தரவேணும்
நினைவணங்கு பத்தர் அனைவரும் தழைக்க
நெறியில் நின்ற வெற்றி ...... முனைவேலா
நிலைபெறும் திருத்தணியில் விளங்கு சித்ர
நெடிய குன்றில் நிற்கும் ...... முருகோனே
தினை விளங்கலுற்ற புனஇளங்குறத்தி
செயல்அறிந்தணைக்கும் ...... மணிமார்பா
திசைமுகன் திகைக்க அசுரர் அன்றடைத்த
சிறைதிறந்து விட்ட ...... பெருமாளே.
(2019 பிப்ரவரி மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
What's best time to visit this temple ?
ReplyDelete