(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: வேலூர்
திருக்கோயில்: அருள்மிகு ஸ்ரீவில்வநாதேசுவரர் திருக்கோயில்.
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
வேலூர் மற்றும் காட்பாடியிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தலம் திருவல்லம் (தற்கால வழக்கில் திருவலம்), ஞானசம்பந்த மூர்த்தியால் பாடல் பெற்ற சீர்மை பொருந்தியது. சிவபெருமான் இத்தலத்தில் 'வில்வநாதீஸ்வரர்' எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றார், உமையன்னை 'தனுமத்யாம்பிகை'. விசாலமான திருக்கோயில். திருநந்திதேவர், சிவமூர்த்தியின் ஆணையின் பேரில், அருகிலுள்ள கஞ்சனகிரி எனும் மலையிலிருந்து இறைவனுக்கு திருமஞ்சன தீர்த்தம் கொணரும் அர்ச்சகருக்கு இடையூறு விளைவித்த கஞ்சன் எனும் அசுரனை சம்ஹாரம் புரிந்த காரணத்தால், சுவாமிக்கு எதிர்த்திசையை நோக்கியவாறு எழுந்தருளி இருக்கின்றார்.
(Google Maps: Vilvanatheswar Temple, Thiruvalam, Tamil Nadu, India)
(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனதன தானந் தனதன தானந்
தனதன தானந் ...... தனதான
நசையொடு தோலும் தசைதுறு நீரும்
நடுநடுவே என்புறு கீலும்
நலமுறுவேய் ஒன்றிடஇருகால்!நன்
றுற நடையாரும் ...... குடிலூடே
விசையுறு காலம் புலனெறியே!வெங்
கனலுயிர் வேழம் ...... திரியாதே
விழுமடியார்முன் பழுதறவேள்!கந்
தனும் எனஓதும் ...... விறல் தாராய்
இசையுறவே அன்றசைவற ஊதும்
எழிலரி வேழம் ...... எனையாள்!என்
றிடர்கொடு மூலம் தொடர்வுடன் ஓதும்
இடம்இமையாமுன் ...... வருமாயன்
திசைமுகனாரும் திசைபுவி வானும்
திரிதர வாழும் ..... சிவன் மூதூர்
தெரிவையர் தாம்வந்தரு நடமாடும்
திருவல மேவும் ...... பெருமாளே.
(2019 ஜூலை மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment