(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: திருவள்ளூர்
திருக்கோயில்: அருள்மிகு தழுவக்கொழுந்தீசுவரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
சென்னையிலிருந்து சுமார் 38 கி.மீ தொலைவிலும், திருவள்ளூரிலிருந்து 18 கி.மீ தொலைவிலும், திருநின்றவூரிலிருந்து 6 கி.மீ தொலைவிலும் (திருவள்ளூர் மாவட்டத்தில்) அமைந்துள்ளது பாக்கம்.
(திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டிக்கருகில் அமையப் பெற்றுள்ள 'திருவெண்பாக்கம்' எனும் தேவாரத் தலமும் 'பாக்கம்' எனும் இத்திருப்புகழ் தலமும் (சிறிது பெயர் ஒற்றுமை இருப்பினும்) இருவேறு தலங்கள் என்பது முக்கியக் குறிப்பு).
(Google Maps: Pakkam Sivan Temple, Pakkam, Tamil Nadu 602024, India)
(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தாத்தத்த தானதன தாத்தத்த தானதன
தாத்தத்த தானதன ...... தனதான
கார்க்கொத்த மேனிகடல் போல் சுற்றமானவழி
காய்த்தொட்டொணாதஉரு ஒருகோடி
காக்கைக்கு நாய்கழுகு பேய்க்கக்கமான உடல்
காட்டத்தில் நீள்எரியில் உறவானில்
கூர்ப்பித்த சூலன் அதனால்குத்தி ஆவிகொடு
போத் துக்கமான குறை உடையேனைக்
கூப்பிட்டுசாஅருளி வாக்கிட்டு நாமமொழி
கோக்கைக்கு நூலறிவு தருவாயே
போர்க்கெய்த்திடா மறலி போல்குத்தி மேவசுரர்
போய்த் திக்கெலாம் மடிய வடிவேலால்
பூச்சித்தர் தேவர்மழை போல்துர்க்கவே பொருது
போற்றிச் செய்வார் சிறையை விடுவோனே
பார்க்கொற்ற நீறு புனைவார்க்கொக்க ஞான!பர
னாய்ப்பத்தி கூர்மொழிகள் பகர்வாழ்வே
பாக்கொத்தினால் இயலர் நோக்கைக்கு வேல்கொடுயர்
பாக்கத்தில் மேவவல பெருமாளே.
தாத்தத் தனந்த தந்த தாத்தத் தனந்த தந்த
தாத்தத் தனந்த தந்த ...... தனதான
பாற்றுக் கணங்கள்தின்று தேக்கிட்டிடும்குரம்பை
நோக்கிச் சுமந்து கொண்டு...பதிதோறும்
பார்த்துத் திரிந்துழன்று ஆக்கத்தையும் தெரிந்து
ஏக்கற்று நின்று நின்று...தளராதே
வேற்றுப் புலன்கள்ஐந்தும் ஓட்டிப் புகழ்ந்து கொண்டு
கீர்த்தித்து நின்பதங்கள்...அடியேனும்
வேட்டுக் கலந்திருந்து ஈட்டைக் கடந்துநின்ற
வீட்டில் புகுந்திருந்து...மகிழ்வேனோ
மாற்றற்ற பொன்துலங்கு வாள்சக்கிரம்தெரிந்து
வாய்ப்புற்றமைந்த சங்கு...தடிசாப
மால்பொன் கலம்துலங்க நாட்டச்சுதன் பணிந்து
வார்க் கைத் தலங்களென்று திரைமோதும்
பால் சொற்தடம் புகுந்து வேற்கண் சினம்பொருந்து
பாய்க்குள் துயின்றவன்தன் மருகோனே,
பாக்குக் கரும்பை கெண்டை தாக்கித் தடம்படிந்த
பாக்கத்தமர்ந்திருந்த பெருமாளே.
(2019 ஜனவரி மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
This comment has been removed by the author.
ReplyDelete