(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: திருவள்ளூர்
திருக்கோயில்: அருள்மிகு ஸ்ரீபால சுப்ரமண்ய சுவாமி திருக்கோயில்.
தல வகை: முருகன் திருக்கோயில்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
'சென்னை - அரக்கோணம்' பயண மார்க்கத்தில் அமைந்துள்ள பேரம்பாக்கம் எனும் ஊரிலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது 'பாகை' (தற்கால வழக்கில் பாகசாலை என்று அறியப்பட்டு வருகின்றது). திருவாலங்காட்டிலிருந்து 10 கி.மீ தூரம் பயணித்தும் இத்தலத்தினை அடையலாம்.
மூலக் கருவறையில் பால சுப்ரமண்ய சுவாமி 'ஒரு திருமுகத்துடனும், நான்கு திருக்கரங்களுடனும், சுமார் 5 முதல் 6 ஆறடி உயரத் திருமேனியுடனும், பிரம்ம சாஸ்தாவாய் இனிது எழுந்தருளி இருக்கின்றான். இம்மூர்த்தியை ஆதிசங்கரரும் ஸ்ரீராகவேந்திரரும் வழிபட்டுள்ளனர். பாதிரி மரங்கள் அதிகம் அமைந்திருந்த தலமாகையால் இங்குறையும் சிவகுமாரனை இப்பகுதி மக்கள் 'பாதிரி ஐயா' என்றும் அழைத்து மகிழ்கின்றனர்.
(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 3.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தான தானன தானம், தான தானன தானம்
தான தானன தானம் ...... தனதான
ஆடல் மாமத ராஜன் பூசல் வாளியிலே!நொந்
தாகம் வேர்வுற மால் கொண்டயராதே
ஆர வாள்நகையார் செஞ்சேலின் ஏவலிலே!சென்
றாயுள் வேதனையே என்றுலையாதே
சேடன் மாமுடி மேவும் பாருளோர்களுள் நீடும்
த்யாகம் ஈபவர் யார் என்றலையாதே
தேடி நான்மறை நாடும் காடும் ஓடிய தாளும்
தேவ நாயக நான் இன்றடைவேனோ
பாடு நான்மறையோனும் தாதையாகிய மாலும்
பாவை பாகனும் நாளும் ...... தவறாதே
பாக நாள்மலர் சூடும் சேகரா மதில் சூழ்தென்
பாகை மாநகராளும் ...... குமரேசா
கூடலான் முதுகூன் அன்றோட வாதுயர் வேதம்
கூறு நாவல மேவும் ...... தமிழ்வீரா
கோடி தானவர் தோளும் தாளும் வீழஉலாவும்
கோல மாமயிலேறும் ...... பெருமாளே.
திருப்பாடல் 2:
தான தனந்தன தான தனந்தன
தான தனந்தன ...... தனதான
ஈளை சுரம்குளிர் வாதமெனும்பல
நோய்கள் வளைந்தற ...... இளையாதே
ஈடுபடும்சிறு கூடு புகுந்திடு
காடு பயின்றுயிர் ...... இழவாதே
மூளை எலும்புகள் நாடி நரம்புகள்
வேறு படும்தழல் ...... முழுகாதே
மூலமெனும்சிவ யோக பதம்தனில்
வாழ்வு பெறும்படி ...... மொழிவாயே
வாளை நெருங்கிய வாவியிலும்கயல்
சேல்கள் மறிந்திட ...... வலைபீறா
வாகை துதைந்தணி கேதகை மங்கிட
மோதி வெகுண்டிள ...... மதிதோயும்
பாளை நறுங்கமழ் பூக வனம்தலை
சாடி நெடும்கடல் ...... கழிபாயும்
பாகை வளம்பதி மேவி வளம்செறி
தோகை விரும்பிய ...... பெருமாளே.
திருப்பாடல் 3:
தனன தனதன தனன தனதன
தான தானன ...... தனதான
குவளை பொருதிரு குழையை முடுகிய
கோல வேல்விழி ...... மடவார்தம்
கொடிய ம்ருகமத புளக தனகிரி
கூடி நாள்தொறும் ...... மயலாகித்
துவள உருகிய சரச விதமது
சோர வாரிதி ...... அலையூடே
சுழலும் எனதுயிர் மவுன பரம!சு
கோ மகோததி ...... படியாதோ
கவள கரதல கரட விகட!க
போல பூதர ...... முகமான
கடவுள் கணபதி பிறகு வருமொரு
காரணா கதிர் ...... வடிவேலா
பவள மரகத கநக வயிர!க
பாட கோபுர ...... அரிதேரின்
பரியும் இடறிய புரிசை தழுவிய
பாகை மேவிய ...... பெருமாளே.
(2019 ஜனவரி மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment