Wednesday, December 26, 2018

வெள்ளிகரம்

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: திருவள்ளூர்

திருக்கோயில்: அருள்மிகு (புவனேஸ்வரி அம்மன் உடனுறை) பிருத்வீஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத் தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

திருவள்ளூர் மாவட்டத்தில், பள்ளிப்பட்டு பகுதியில் அமைந்துள்ள தலம் வெள்ளிகரம் (தற்கால வழக்கில் வெளியகரம்). சென்னையிலிருந்து சுமார் 111 கி.மீ பயணித்தும், திருத்தணியிலிருந்து 37 கி.மீ பயணித்தும் இச்சிற்றூரினை அடையலாம். இத்தலத்தில் இரு சிவாலயங்கள் உள்ளன, அவற்றுள் திருப்புகழ் பாடல் பெற்றுள்ளது 'அன்னை புவனேஸ்வரி சமேத ஸ்ரீபிருத்வீஸ்வரர்' ஆலயமே.

ஏகாந்தமான சூழலில் அமைந்துள்ள திருக்கோயில். மூலக் கருவறையின் பின்னே வலது புறத்தில் திருப்புகழ் தெய்வமான முருகக் கடவுள் மூன்றடி உயரத் திருமேனியுடனும், வேழ மங்கை - வேட மங்கை இருவருடனும் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரிநாதர் தனிச்சன்னிதியில் எழுந்தருளி இருக்கின்றார். 

இத்தலத்திற்கென அருணகிரியார் 9 திருப்புகழ் திருப்பாடல்களை அருளியுள்ளார், அவற்றுள் பல திருப்பாடல்களில் வள்ளியம்மைக்குச் சிவகுமரன் அருள்புரிந்த கந்தபுராண நிகழ்வுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்து போற்றியுள்ளார். 

(குறிப்பு: இத்தலத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் மற்றொரு திருப்புகழ் தலமான நெடிய மலை அமைந்துள்ளது). 

(Google Maps: Veliagaram, Andhra Pradesh, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 9.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனதன தனன தனதன தனன
     தய்ய தனத்த தந்த ...... தனதானா

அடலரி மகவு விதிவழி ஒழுகும்
     ஐவரும் மொய்க் குரம்பையுடன் நாளும் 

அலைகடல் உலகில் அலம்வரு கலக
     ஐவர் தமக்குடைந்து...தடுமாறி

இடர்படும் அடிமை உளமுரை !உடலொ
     டெல்லை விட ப்ரபஞ்ச...மயல்தீர

எனதற நினது கழல்பெற மவுன
     எல்லை குறிப்பதொன்று...புகல்வாயே

வடமணி முலையும் அழகிய முகமும்
     வள்ளையெனத் தயங்கும்...இருகாதும்

மரகத வடிவும் மடலிடை எழுதி
     வள்ளி புனத்தில் நின்ற...மயில்வீரா

விடதர் அதிகுணர் சசிதரர் நிமலர்
     வெள்ளி மலைச் சயம்பு...குருநாதா

விகசித கமல பரிபுர முளரி
     வெள்ளிகரத்தமர்ந்த...பெருமாளே.

திருப்பாடல் 2:
தனதன தனன தனதன தனன
     தய்ய தனத்த தந்த ...... தனதான

சிகரிகள் இடிய நடநவில் கலவி
     செவ்வி மலர்க்கடம்பு... சிறுவாள்வேல்

திருமுக சமுக சததள முளரி
     திவ்ய கரத்திணங்கு... பொருசேவல்

அகிலடி பறிய எறிதிரை அருவி
     ஐவன வெற்பில் வஞ்சி..கணவா !என்

றகிலமும்உணர மொழிதரு மொழியின்
     அல்லது பொற்பதங்கள்... பெறலாமோ

நிகரிட அரிய சிவசுத பரம
     நிர்வசன ப்ரசங்க... குருநாதா

நிரைதிகழ் பொதுவர் நெறிபடு பழைய
     நெல்லி மரத்தமர்ந்த... அபிராம

வெகுமுக ககன நதிமதி இதழி
     வில்வ முடித்த நம்பர்... பெருவாழ்வே

விகசித கமல பரிமள கமல
     வெள்ளிகரத்தமர்ந்த... பெருமாளே.

திருப்பாடல் 3:
தனதன தய்ய தனதன தய்ய
     தனதன தய்ய ...... தனதான

குவலய மல்கு தவலிகள் முல்லை
     குளிர்நகை சொல்லும் .. முதுபாகு

குழையிள வள்ளை இடைசிறு வல்லி
     குயமுலை கொள்ளை... விழைமேவிக்

கவலைசெய் வல்ல தவலரும் உள்ள
     கலவியில் தெள்ளு... கவிமாலை

கடிமலர்ஐய அணிவன செய்ய
     கழலிணை பைய... அருள்வாயே

தவநெறி உள்ளும் சிவமுனி துள்ளும் 
     தனிஉழை புள்ளி... உடனாடித்

தருபுன வள்ளி மலைமற வள்ளி
     தருதினை மெள்ள... நுகர்வோனே

அவநெறி சொல்லும் அவரவை கொல்லும்
     அழகிய வெள்ளி... நகர்வாழ்வே

அடையலர் செல்வம் அளறிடை செல்ல
     அமர்செய வல்ல...பெருமாளே.

திருப்பாடல் 4:
தனதன தய்ய தனதன தய்ய
     தனதன தய்ய ...... தனதான

பொருவன கள்ள இருகயல் வள்ளை
     புரிகுழை தள்ளி... விளையாடும்

புளகித வல்லி இளகித வல்லி
     புரியிள முல்லை... நகைமீதே

உருகிட உள்ள விரகுடை உள்ளம்
     உலகுயிர் உள்ள... பொழுதே!நின்

றுமைதரு செல்வன் எனமிகு கல்வி
     உணர்வொடு சொல்ல... உணராதோ

மருஅலர் வள்ளிபுரம் உள வள்ளி
     மலைமற வள்ளி... மணவாளா

வளர்புவி எல்லை அளவிடு தொல்லை
     மரகத நல்ல... மயில்வீரா

அருவரை விள்ள அயில்விடும் மள்ள
     அணிவயல் வெள்ளி... நகர்வாழ்வே

அடையலர் செல்வம் அளறிடை செல்ல
     அமர்செய வல்ல... பெருமாளே.

திருப்பாடல் 5:
தய்ய தய்ய தய்ய தய்ய
     தய்ய தய்ய ...... தனதான

கள்ளம் உள்ள வல்ல வல்லி
     கையில் அள்ளி... பொருள்ஈயக்

கல்லு நெல்லு வெள்ளி தெள்ளு
     கல்வி செல்வர்... கிளைமாய

அள்ளல் துள்ளி ஐவர் செல்லும்
     அல்லல் சொல்ல.... முடியாதே

ஐயர்ஐய மெய்யர் மெய்ய
     ஐய செய்ய... கழல்தாராய்

வள்ளல் புள்ளி நவ்வி நல்கு
     வள்ளி கிள்ளை... மொழியாலே

மையல் எய்தும் ஐய செய்யில்
     வையில் வெள் வளைகள்ஏற

மெள்ள மள்ளர் கொய்யும் நெல்லின்
     வெள்ள வெள்ளி... நகர்வாழ்வே

வெய்ய சைய வில்லி சொல்லை
     வெல்ல வல்ல... பெருமாளே.

திருப்பாடல் 6:
தய்ய தய்ய தய்ய தய்ய
     தய்ய தய்ய ...... தனதான

தொய்யில் செய்யில் நொய்யர் கையர்
     தொய்யும் ஐய . இடையாலும்

துள்ளி வள்ளை தள்ளி உள்ளல்
     சொல்லும் கள்ள... விழியாலும்

மைய செவ்வி மவ்வல் முல்லை
     மல்கும் நல்ல... குழலாலும்

மையல் கொள்ள எள்ளல் செய்யும்
     வல்லி சொல்லை... மகிழ்வேனோ

செய்ய துய்ய புள்ளி நவ்வி
     செல்வி கல்வரையில்ஏனல்

தெய்வ வள்ளி மையல் கொள்ளும் 
     செல்வ பிள்ளை... முருகோனே

மெய்யர் மெய்ய பொய்யர் பொய்ய
     வெள்ளை வெள்ளி... நகர்வாழ்வே

வெய்ய சைய வில்லி சொல்லை
     வெல்ல வல்ல... பெருமாளே.

திருப்பாடல் 7:
தய்யதன தான தய்யதன தான
     தய்யதன தான ...... தனதான

இல்லையென நாணி உள்ளதின் மறாமல்
     எள்ளின்அளவேனும்... பகிராரை

எவ்வமென நாடி உய்வகை இலேனை
     எவ்வகையும் நாமம்... கவியாகச்

சொல்ல அறியேனை எல்லைதெரியாத
     தொல்லைமுதல் ஏதென்றுணரேனைத்

தொய்யுமுடல் பேணு பொய்யனை விடாது
     துய்ய கழல்ஆளும்... திறமேதோ

வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
     மையவரை பாகம்... படமோது

மையுலவு சோலை செய்யகுளிர் சாரல்
     வள்ளிமலை வாழும்... கொடிகோவே

வெல்லு மயிலேறு வல்ல குமரேச
     வெள்ளிலுடல்நீபம்... புனைவோனே

வெள்ளி மணிமாட மல்கு திருவீதி
     வெள்ளிநகர் மேவும்... பெருமாளே.

திருப்பாடல் 8:
தய்யதன தான தய்யதன தான
     தய்யதன தான ...... தனதான

பையரவு போலும் நொய்யஇடை மாதர்
     பையவரு கோலம்... தனைநாடிப்

பையலென ஓடி மையல் மிகுமோக
     பவ்வமிசை வீழும்... தனிநாயேன்

உய்யவொரு காலம் ஐயஉபதேசம்
     உள்உருக நாடும்... படிபேசி

உள்ளதும் இலாதும் அல்லதவிரோத
     உல்லச விநோதம்... தருவாயே

வைய முழுதாளும் ஐயகுமரேச
     வள்ளிபடர் கானம்... புடைசூழும்

வள்ளிமலை வாழும் வள்ளிமணவாள
     மையுததி ஏழும்... கனல்மூள

வெய்ய நிருதேசர் சையமுடன் வீழ
     வெல்லயில் விநோதம்... புரிவோனே

வெள்ளிமணி மாட மல்கு திருவீதி
     வெள்ளிநகர் மேவும்... பெருமாளே.

திருப்பாடல் 9:
தனன தனாதன தனன தனாதன தய்ய தனத்த தந்த
     தானாதன தானந் தானன ...... தந்ததான

வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று
     வாராய்பதி காதம் காதரை...ஒன்றுமூரும்

வயலும்ஒரேஇடை எனவொரு காவிடை வல்லபம் அற்றழிந்து
     மாலாய் மடலேறும் காமுக... எம்பிரானே

இதவிய காணிவை ததையென வேடுவன் எய்திடும் எச்சில் தின்று
     லீலாசலம் ஆடும் தூயவன்... மைந்த நாளும்

இளையவ மூதுரை மலைகிழவோஎன வெள்ளமெனக் கலந்து
     நூறாயிர பேதம் சாதம்... ஒழிந்தவாதான்

கதைகன சாப திகிரிவளை வாளொடு கை வசிவித்த நந்த
     கோபால மகீபன் தேவி..மகிழ்ந்துவாழக்

கயிறொடு உலூகலம்உருள உலாவிய கள்வன்அறப் பயந்து
     ஆகாய கபாலம் பீற...நிமிர்ந்துநீள

விதரண மாவலி வெருவ மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற
     நாராயண மாமன் சேயை... முனிந்தகோவே

விளைவயல் ஊடிடை வளைவிளையாடிய வெள்ளிநகர்க்கமர்ந்த
     வேலாயுத மேவும் தேவர்கள்... தம்பிரானே.

(2019 பிப்ரவரி மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)


1 comment:

  1. Thanks for your post. It is very useful for devotees. The way you have gone in to details is worth appreciating. Grateful.

    Can you share the google map coordinates. I could not find the temple in Veliagaram. I could only locate the Someswara Swamy temple

    ReplyDelete