(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: வேலூர்
திருக்கோயில்: அருள்மிகு ஞான பண்டித சுவாமி திருக்கோயில்.
தல வகை: முருகன் திருக்கோயில்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
வேலூர் மாவட்டத்திலுள்ள காவேரிப்பாக்கம் எனும் ஊரிலிருந்து சோளிங்கர் செல்லும் பாதையில் 14 கி.மீ பயணித்தால், கோவிந்தச்சேரி எனும் பகுதியில் அமைந்துள்ள ஞான மலையினை அடையலாம்.
பன்னெடுங்கால ஆய்வு மற்றும் முயற்சிக்குப் பின்னரும் ஞான மலை எனும் இத்தலத்தின் அமைவிடம் முதலில் அறியப்படாதிருந்தது, பின்னர் 1998 ஆம் ஆண்டு இம்மலையில் கண்டெடுக்கப் பெற்ற அரிய சில கல்வெட்டுகள் வாயிலாக இத்தலமே 'திருப்புகழில் அருணகிரியார் போற்றியுள்ள ஞான மலை' என்பது ஐயத்திற்கு இடமின்றி நிரூபணம் ஆனது
அருணகிரியாருக்கு ஆறுமுகக் கடவுள் 'திருவடிக் காட்சியினையும், ஞான அனுபூதியினையும், வள்ளி தேவியோடு கூடிய அற்புதத் திருக்கோல தரிசனத்தையும்' அளித்து அருள் புரிந்த தலமாக இம்மலை திகழ்கின்றது. வேலாயுத தெய்வம் வள்ளியம்மையை மணம் புரிந்து திருத்தணி செல்லும் மார்க்கத்தில் இம்மலையில் ஒரு தினம் எழுந்தருளி இருந்ததாகத் தல புராணம் அறிவிக்கின்றது.
150 படிகளைக் கடந்து சென்றால் இரு ஆலயங்களைத் தரிசிக்கலாம், ஒன்று சமீபத்தில் (2018 ஆண்டு ஆகஸ்ட் மாதம்) புதுக்கப் பெற்றுள்ள திருக்கோயில், மற்றொன்று ஞானவேல் மண்டபத்தோடு கூடிய, அருணகிரியாரால் பாடல் பெற்றுள்ள 'ஞான பண்டித சுவாமியின்' திருக்கோயில். மூலக் கருவறையில் கந்தக் கடவுள் 'ஒரு திருமுகம் மற்றும் நான்கு திருக்கரங்களுடன், பிரமனை தண்டித்த பிரம்ம சாஸ்தா திருக்கோலத்தில், இரு தேவியரோடும்' ஆனந்தமாய் எழுந்தருளி இருக்கின்றான். பிரகாரச் சுற்றில் 'அருணகிரியார் வணங்கிய நிலையிலுள்ள குறமகள் தழுவிய குமரனின்' திருச்சன்னிதி காண்பதற்கரிய திருக்காட்சி.
இவ்விடத்திலிருந்து மேலும் சிறிது தூரம் மேலேறிச் சென்றால் ஞானவெளிச் சித்தர் தவம் புரிந்த, ஆறுமுகக் கடவுளின் திருவடிச் சுவடுகள் பதியப் பெற்றுள்ள சிறு மண்டபத்தினையும் தரிசித்து மகிழலாம். அருணகிரிநாதர் இத்தலத்திற்கென இரு திருப்புகழ் திருப்பாடல்களை அருளியுள்ளார், அவசியம் தரிசித்துப் பயன்பெற வேண்டிய ஏகாந்தமான திருத்தலம்.
(Google Maps: Jnana Malai Śrī Subrahmanya Swami Temple, Govindacheri, Vellore, Tamil Nadu 632505, India)
(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தானதன தான தானதன தான
தானதன தான ...... தனதான
சூதுகொலைகாரர் ஆசைபண மாதர்
தூவையர்கள் சோகை.... முகநீலர்
சூலைவலி வாதமோடளைவர் பாவர்
தூமையர்கள் கோளர்... தெருவூடே
சாதனைகள் பேசி வாருமென நாழி
தாழிவிலை கூறிதெனவோதி
சாயவெகு மாய தூளிஉறஆக
தாடியிடுவோர்கள்... உறவாமோ
வேத முநிவோர்கள் பாலகர்கள் மாதர்
வேதியர்கள் பூசல்....எனஏகி
வீறசுரர் பாறி வீழஅலையேழு
வேலைஅளறாக...விடும்வேலா
நாதரிடம் மேவு மாது சிவகாமி
நாரி அபிராமி...அருள் பாலா
நாரண சுவாமி ஈனு மகளோடு
ஞானமலை மேவு ....பெருமாளே.
திருப்பாடல் 2:
தனதன தனத்த தான தனதன தனத்த தான
தனதன தனத்த தான ...... தனதான
மனையவள் நகைக்க ஊரில் அனைவரு(ம்) நகைக்க லோக
மகளிரும் நகைக்க தாதை... தமரோடும்
மனமது சலிப்ப நாயன் உளமது சலிப்ப யாரும்
வசைமொழி பிதற்றி நாளும்... அடியேனை
அனைவரும் இழிப்ப நாடு மனஇருள் மிகுத்து நாடின்
அகமதையெடுத்த சேமம்... இதுவோ!என்
றடியனும் நினைத்து நாளும் உடலுயிர் விடுத்த போதும்
அணுகி முனளித்த பாதம்... அருள்வாயே
தனதன தனத்த தான எனமுரசொலிப்ப வீணை
தமருக மறைக் குழாமும்... அலைமோதத்
தடிநிகர் அயிற்கடாவி அசுரர்கள் இறக்குமாறு
சமரிடை விடுத்த சோதி... முருகோனே
எனைமனம் உருக்கி யோக அநுபுதியளித்த பாத
எழுதரிய பச்சை மேனி... உமைபாலா
இமையவர் துதிப்ப ஞானமலை உறை குறத்திபாக
இலகிய சசிப்பெண் மேவு... பெருமாளே.
(2019 பிப்ரவரி மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment